Sunday, October 8, 2017

விழுப்புரம் லாரி, கார் விபத்து - சென்னையைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு


விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இன்று நள்ளிரவு நடந்த கோர விபத்தில் சென்னையை சேர்ந்த பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியை அதன் ஓட்டுநர் தூங்குவதற்காக, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் என்ற கிராமத்தில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த இனோவா கார் ஒன்று திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது அதில் பயனம் செய்து கொண்டிருந்த சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் உமா, அம்பத்தூரைச் சேர்ந்த மீனா, ரமேஷ் கண்ணா மற்றும் சுகுனா, காரின் ஓட்டுநர் பிரசாந்த் உள்ளிட்ட 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் அனீஷா என்ற இளம்பெண் மட்டும் படுகாயத்துடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ’துக்க நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்னையில் இருந்து சேலம் நோக்கிச் சென்றிருக்கின்றனர். அப்போது இந்தத் துயர சம்பவம் நடைபெற்றிருக்கின்றது’ என்று தெரிவித்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவக்கியிருக்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் விதிகளை மீறி சாலைகளிலேயே நிறுத்தப்படுகின்றன. அதை கவனிக்க வேண்டிய காவல்துறையும் கண்டு கொள்வதில்லை. அதன் காரணமாகவே இப்படியான விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன என்கின்றனர் பொதுமக்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024