Sunday, October 8, 2017

விபத்து இழப்பீட்டு வழக்குகளில் ஆயுர்வேத மருத்துவர்களின் 

ரசீதுகளை ஏற்க வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு


விபத்து இழப்பீட்டு வழக்குகளில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்கள் அளிக்கும் ரசீதுகள் மற்றும் சான்றிதழ்களை கீழமை நீதிமன்றங்கள் ஏற்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்ராஜா என்பவர் 2006-ல் லாரி மோதி இடது காலில் பலத்த காயம் அடைந்தார். இதற்காக சித்த மருத்துவரிடம் சிகி்ச்சை பெற்றார்.
விபத்து இழப்பீடு கோரி நெல்லை நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அப்போது சித்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதற்கு ஆதாரமாக சித்த மருத்துவர் அளித்த சான்றிதழ்களையும், ரசீதுகளையும் தாக்கல் செய்தார். இவற்றை ஏற்க மறுத்து, கார்த்திக்ராஜாவுக்கு வெறும் ரூ.13 ஆயிரம் மட்டும் இழப்பீடு வழங்க 2010-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் கார்த்திக்ராஜா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவு: இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் சித்த மருத்துவர்கள் அளிக்கும் சான்றிதழ்கள் செல்லத்தக்கது என்றும், சிகிச்சை தொடர்பாக சான்றிதழ் வழங்க சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை மருத்துவர்களுக்கு அதிகாரம் உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது இழப்பீடு வழங்க ஆங்கில மருத்துவர்கள் அளிக்கும் ரசீது மட்டுமே ஏற்கக்கூடியதுஎன கீழமை நீதிமன்றம் முடிவுக்கு வந்தது சட்டவிரோதம்.

அரசு அங்கீகரித்துள்ளது

இந்தியாவில் காலம்காலமாக சித்தா மருத்துவம் நடைமுறையில் இருந்து வருகிறது. சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ  முறைகளை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. சிக்கன் குனியா, டெங்கு போன்றவற்றை கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயம் சித்த மருந்துதான். இதை மத்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

இதனால் சித்தா, ஆயுர்வேதம், யுனானி சிகிச்சை பெற்றவர்கள் இழப்பீடு பெறத் தகுதியானவர்கள். சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்கள் அளிக்கும் சான்றிதழ்கள், ரசீதுகள் இழப்பீட்டுக்குத் தகுதியானவை என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024