Monday, October 16, 2017

தீபாவளி: துணிக்கடை, பட்டாசுக் கடைகளில் குவிந்த மக்கள்!

வெங்கட சேது.சி



தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், புத்தாடைகளை வாங்கவும், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வாங்கவும் மக்கள் முக்கிய இடங்களில் குவிந்தனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க, சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தீபாவளிப் பண்டிகை நாளை மறுநாள் தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் ஜவுளி விற்பனை, பட்டாசுகள், இனிப்புகள் விற்பனை களைகட்டியுள்ளது. இந்த ஆண்டு ஜிஎஸ்டி. வரி விதிப்பால், துணி ரகங்கள் மற்றும் பொருள்களின் விற்பனை சற்றே மந்தகதியில் தொடங்கினாலும், கடைசிநேரத்தில் சூடுபிடித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தி.நகர் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள், இனிப்பு வகைகள், துணி ரகங்களை வாங்கிச்செல்ல சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் மக்கள் குவிந்தனர். மக்கள் வெள்ளம் அதிகளவில் குவிந்ததால், போலீஸார் கண்காணிப்பு கேமிராக்கள் உதவியுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.


துணி ரகங்கள் மட்டுமல்லாமல் நகைகளையும் மக்கள் வாங்கிச் சென்றதால் ஜூவல்லரிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தவிர, தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு பஸ்களில் 4.52 கோடி ரூபாய் வரை முன்பதிவு நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல 1.4 லட்சம் பயணிகளும், பல்வேறு ஊர்களில் இருந்தும் சென்னை மற்றும் வெவ்வேறு இடங்களுக்கும் செல்வதற்காக 73 ஆயிரத்து 300 பேரும் முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களில், பயணிகள் கூட்டம் அதிகம் இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால், ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இன்றும், நாளையும் சென்னையில் இதே நிலை தொடரும் என்பதால், போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும், பட்டாசுக் கடைகள், இனிப்புகள், துணிக் கடைகளிலும், வீட்டு உபயோகப் பொருள்கள் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியதைக் காண முடிந்தது.

No comments:

Post a Comment

Worrisome trend: Breast cancer cases in younger women doubled in 5 years

Worrisome trend: Breast cancer cases in younger women doubled in 5 years  AWARENESS MONTH Yashaswini.Sri@timesofindia.com 21.10.2024 Bengalu...