Saturday, October 14, 2017

மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் கை விரல் ரேகைக்கு சான்று அளித்த டாக்டர் ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு



ஜெயலலிதாவின் கை விரல் ரேகைக்கு சான்று அளித்த டாக்டர் ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 14, 2017, 04:00 AM

சென்னை,

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது, அ.தி.மு.க. வேட்பாளரை அங்கீகரித்து வழங்கப்பட்ட படிவத்தில் ஜெயலலிதாவின் கை விரல் ரேகைக்கு, சான்று அளித்த டாக்டர் பாலாஜி 27-ந் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, தோல்வி அடைந்த டாக்டர் சரவணன், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘ஏ.கே.போசை அ.தி.மு.க. வேட்பாளராகவும், அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்த படிவத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. அவரது கை விரல் ரேகை மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த காலகட்டத்தில் ஜெயலலிதா சுயநினைவின்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததால், கை விரல் ரேகை அவரது ஒப்புதலுடன் தான் பெறப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்து வருகிறார். ஏற்கனவே, இந்த வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் வில்பிரட் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அவர், ‘ஜெயலலிதா கைவிரல் ரேகை தொடர்பாக அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் மதுசூதனன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தின் அடிப்படையில் ஜெயலலிதாவின் கைவிரல் ரேகை பதிவிடப்பட்ட படிவத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு, அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போசின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவருக்கு இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டது’ என்று சாட்சியம் அளித்தார்.

மேலும், ‘மதுசூதனன் அனுப்பிய கடிதத்தில் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை தொடர்பான அறிக்கைகள் எதுவும் இணைக்கப்படவில்லை. அதேபோல இந்த கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவதற்கு மதுசூதனனுக்கு, ஜெயலலிதா அதிகாரம் வழங்கினாரா? என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது’ என்றும் வில்பிரட் கூறினார். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேலாக அவர் சாட்சியம் அளித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 27-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அன்று, தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்த படிவத்தில், ஜெயலலிதாவின் விரல்ரேகை பதிவு செய்ததற்கு சான்று அளித்த டாக்டர் பாலாஜி சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராக வேண்டும்’ என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...