Wednesday, October 11, 2017

''கருணைக்கொலை அங்கீகரிக்கப்பட்டால் அது தவறாகப் பயன்படுத்தப்படும்!'' - மத்திய அரசு விளக்கம்

ஜெ.பிரகாஷ்




''கருணைக்கொலை அங்கீகரிக்கப்பட்டால், அது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது'' என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம், கடந்த 2005-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்த ஒரு மனுவில், ‘நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டவர்கள், குணமடைய வாய்ப்பு இல்லாத நிலையில், ஆஸ்பத்திரியில் அவர்களது செயற்கை சுவாசக்கருவிகளை அகற்றி, அவர்கள் மரணத்தைத் தழுவ அனுமதிக்கும் கருணைக்கொலை முறை, பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவு, வாழ்வதற்கு மட்டுமன்றி சாவதற்கும் உரிமை வழங்கியிருப்பதால், கருணைக்கொலை முறைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்'’ என அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு முன்பு நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா வாதிடுகையில், ''கருணைக்கொலை அங்கீகரிக்கப்பட்டால், அது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, அதைப் பொதுக் கொள்கையாக உருவாக்க முடியாது. ஒருவரது மருத்துவ சிகிச்சையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று தனிநபர்கள் தீர்மானிக்க முடியாது. ஒருவர் நல்ல மனநிலையில் இல்லாதவராக இருந்தால், அவர் தனது சிகிச்சையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு எடுக்க உகந்தவர் அல்ல. மருத்துவ வாரியம்தான் அதை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். அதுதான் இறுதி அதிகாரம் படைத்தது. அந்த அளவுக்கு அதில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும். அவற்றை உச்ச நீதிமன்றமே உருவாக்கலாம். இந்த விவகாரம் தொடர்பான அருணா ஷான்பாக் என்பவரது வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில், ஒரு வரைவு மசோதாவை உருவாக்கியுள்ளோம். அத்துடன், சட்ட ஆணையமும் சிபாரிசுகளை அளித்துள்ளது. அவை, அரசின் பரிசீலனையில் உள்ளன'' என்றார்.

இந்த மனு மீதான விசாரணை இன்றும் நடைபெறவிருக்கிறது.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...