Monday, October 9, 2017


விஐபி கலாசாரத்துக்கு முடிவு கட்டிய ரயில்வே

By DIN | Published on : 09th October 2017 02:07 AM |



ரயில்வே வாரியத் தலைவரை வரவேற்கவும், வழியனுப்பவும் மூத்த அதிகாரிகள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விஐபி கலாசாரத்துக்கு ரயில்வே அமைச்சகம் முடிவு கட்டியுள்ளது.
துறைசார்ந்த பணி காரணமாக வருகை புரியும் ரயில்வே வாரியத் தலைவர், உயரதிகாரிகள் ஆகியோரை அவர்களுக்கு அடுத்த நிலையில் பணிபுரியும் அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்று அவர்கள் பணிமுடிந்து திரும்புகையில் வழியனுப்பவும் வேண்டும் என்பது கடந்த 36 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது.

கடந்த 1981-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ரயில்வே சட்ட விதிகள் இதற்கு துணை புரிந்தது. இந்நிலையில், இந்த நடைமுறைக்கு முடிவு கட்டும் வகையில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதிய வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில்வே வாரியத் தலைவரை விமான நிலையம் அல்லது ரயில் நிலையத்துக்குச் சென்று உயரதிகாரிகள் இனி வரவேற்கத் தேவையில்லை. அதேபோல், அவர் பணி முடிந்து வீடு திரும்பிச் செல்லும்போது ரயில் நிலையம் அல்லது விமான நிலையத்துக்குச் சென்று உயரதிகாரிகள் வழியனுப்பவும் தேவையில்லை. 

அந்த நடைமுறையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
ரயில்வே அதிகாரிகள் நீண்ட நாள்கள் விடுப்பில் இருக்கக் கூடாது. பணி காரணமாக வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டால் சொகுசு வசதிகளை எதிர்பார்க்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரும் மலர்க்கொத்து அல்லது பரிசுப் பொருள்கள் அளித்து தன்னை வரவேற்க வேண்டாம் என்று ரயில்வே வாரியத்தின் தலைவர் அஸ்வனி லோஹனியும் தெரிவித்துள்ளார்.

புதிய வழிகாட்டுதல்கள் குறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், "ரயில்வேயில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களை உயரதிகாரிகள் தங்களது வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது' என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024