தாய்லாந்து சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!
By RKV | Published on : 12th October 2017 03:50 PM |
தாய்லாந்தின் பிரிஸ்டைன் பீச்சுக்குப் போய் விடுமுறைகளில் குதூகலிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லாமல் போகும்? கடற்கரைகளும், தென்னை மரங்களும், வெண்ணெயில் வடித்தெடுத்த சிற்பங்கள் போன்ற அழகுப் பெண்களும், குழந்தைகளுமாக சொர்க்கபூமியாயிற்றே தாய்லாந்து. ஆனால், இனி தாய்லாந்துக்குச் செல்வதென்றால், புறப்படுவதற்கு முன்பு நீங்கள் சில விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட பிறகே அங்கே செல்ல வேண்டும். அதிலும் கடற்கரைச் சந்தோசங்களுக்காக மட்டுமே தாய்லாந்து செல்லும் ஆசை கொண்டவர்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுண்டு.
தாய்லாந்தின் கடற்கரைப் பகுதிகளில், சுற்றுலாப் பயணிகள் புகைத்து விட்டு வீசிச் சென்ற எண்ணற்ற சிகரெட் துண்டுகளைக் கண்டு அதிர்ந்து போன தாய்லாந்து அரசு, தற்போது, தாய்லாந்து கடற்கரையில் புகை பிடிக்கத் தடை விதித்திருக்கிறது. தடையை மீறி யாரேனும் சட்டத்தை மதிக்காமல் கடற்கரைகளில் புகை பிடிப்பார்களானால் அவர்களுக்கு கேள்வியே இன்றி ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து மெரைன் மற்றும் கோஸ்டல் மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது. கோஸ்டல் துறையின் தலைவரான ஜதுபன் புருபாத், அடுத்த மாதத்திற்குள் தாய்லாந்தின் 20 க்கும் மேற்பட்ட கடற்கரைகளில் இந்தத் தடை நீட்டிக்கப் படவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தாய்லாந்தின் இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சரான ஜெனரல் சுரஸக் காஞ்சனரத்துடன் கலந்தாலோசித்து விட்டே இம்முடிவை எடுத்திருப்பதாக ஜதுபன் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் தற்போது மா பிம், லாம் சிங், பாங் சேன், சா அம், காயோ தகியப், போ புத், ஹாத் சாஇ ரீ, பதாங், பட்டாயா, ஜோம்தியோன், கோ ஹாய் நாக், கோ ஹாய் நா உள்ளிட்ட 20 கடற்கரைகளில் புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.
பதாங் கடற்கரைப்பகுதியில் 2.5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் சுமார் 63,000 முதல் 1,38,000 வரையிலான சிகரெட் துண்டுகள் தாய்லாந்து மெரைன் மற்றும் கடல்வளத்துறை மூலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சர்வே அந்தமான் கோஸ்டல் ரிசர்ச் மற்றும் மேம்பாட்டுத்துறையின் கண்காணிப்பின் கீழ் நடத்தி முடிக்கப் பட்டுள்ளதாம். எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள கடற்கரைப் பகுதிகளில் எல்லாம் தடையை மீறி எவரேனும் புகைபிடித்தால் தாய்லாந்து போலீஸ் வண்டு அள்ளிக் கொண்டு போகும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓர் ஆண்டு சிறைத்தண்டனையோ அல்லது 1 பாட்( 3000 டாலர்கள்) தண்டமோ வசூலிக்கப்படுமாம்.
அதற்காக சுற்றுலாப் பயணிகள் தங்களது புகைக்கும் சுதந்திரத்தில் நாங்கள் தலையிடுவதாக நினைத்து விடக்கூடாது. சுற்றுலாப் பயணிகளுக்கு புகைப்பதற்கென்றே தனியான இடங்கள் கடற்கரைப்பகுதிகளில் ஒதுக்கப்படும். அவர்கள் அந்த இடங்களில் மட்டும் புகைக்க எந்த விதத் தடைகளும் இல்லை. ஆனால் புகைத்துக் கொண்டே கடலில் கால் நனைக்க ஆசைப்பட்டால் அதற்கு மட்டும் அனுமதி இல்லை. கூடிய விரைவில் தாய்லாந்தில் உள்ள அனைத்துக் கடற்கரைப் பகுதிகளிலும் இந்த தடையை அமுல்படுத்தும் திட்டம் எங்களிடம் இருக்கிறது. என்றும் ஜதுபன் தெரிவித்தார்.
எனவே விடுமுறைகளில் தாய்லாந்து சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருப்பவர்கள் இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு உஷாராகப் புறப்பட்டீர்கள் என்றால் நல்லது!
Image Courtesy: Financial Express.
No comments:
Post a Comment