Sunday, October 15, 2017

வேலை போனால் என்ன? என்னால் வடாபாவ் விற்றுக் கூட கோடிகளில் சம்பாதிக்க முடியும்! நிரூபித்த மும்பை இளைஞர்!


By RKV  |   Published on : 14th October 2017 11:47 AM  |
000sujay_sohani


2007 ஆம் ஆண்டில் இந்தியாவை உலுக்கிய ஆட்குறைப்பு அபாயத்தில் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்தியர்கள் பலரும் கூடத் திடீரெனத்  தங்களது வேலையை இழந்து அவதியுறும் நிலை ஏற்பட்டிருந்தது. வேலையிழப்புக்கு முதல் மாதம் வரையிலும் கை நிறைய பையையும் நிரப்பிக் கொண்டிருந்த வருமானத்தை நிரந்தரம் என்றெண்ணித் தங்களது உழைப்பை அயராது வாரி வழங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் பலர் வேலை இழப்பின் பின் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி செய்வதறியாது திகைக்கும் நிலை ஏற்பட்டது. அப்படித் தவிப்புக்கு உள்ளானவர்களில் ஒருவர் தான் மும்பையைச் சேர்ந்த சுஜய் சோஹானி. வேலை இழந்தவர்களின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நிகழும் என்பது இங்கே யாரும் அறியாத ரகசியமில்லை! ஆனால் நிகழ்ந்தவற்றில் அப்படியே தேங்கி மனம் குன்றிப் போனால் மிச்ச வாழ்க்கையை என்ன செய்வது?
இந்த யோசனை வந்த பின் சுஜயின் மனம் தெளிவாகி விட்டது. தெளிவான மனதுடன் சுஜய் தனது கல்லூரிக் கால நண்பருடன் இணைந்து ஒரு சுயதொழிலைத் தொடங்கினார். அதில் அவருக்குக் கிடைத்த வருமானம் அவர் முன்பு லண்டனில் பார்த்துக் கொண்டிருந்த பகட்டான வேலையில் கிடைத்த சம்பளத்தைக் காட்டிலும் மிக அதிகம். அப்படியென்ன தொழில் செய்தார் சுஜய்? புதிதாக ஒன்றுமில்லை, எல்லோரும் அறிந்த தொழில் தான். வட பாவ் கேள்விப்பட்டிருப்பீர்களே?! சென்னையில் கூட இன்று வடபாவ் விற்கப்படாத ஸ்னாக்ஸ் மற்றும் ஸ்வீட் கடைகளைக் காண்பது அரிது. வட இந்திய சாட் ஐட்டங்களில் ஒன்றான வட பாவ், பானி பூரியை அடுத்து வட இந்தியர்களின் தேசிய உணவுவகைகளில் ஒன்று. தென்னிந்தியர்கள் மசால் வடையை விரும்புவதைப் போலவே வட இந்தியர்கள் வட பாவ்க்காக தங்கள் இன்னுயிரையும் அளிக்கச் சித்தமாக இருப்பார்கள். வடபாவின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் அது வட இந்திய, தென்னிந்திய எல்லைகளைக் கடந்து தற்போது சர்வதேச ரசனைக்குரிய ஸ்னாக்ஸ் ஐட்டக்களில் ஒன்றாகி விட்டது.
சுஜய் தன் நண்பர் சுபோத்துடன் இணைந்து தொடங்கியது இந்த வடபாவ் தொழிலைத்தான்.
முன்னதாக சுஜய் லண்டனில் பார்த்துக் கொண்டிருந்த வேலையும் இதனோடு தொடர்புடையது தான். லண்டனில் இருக்கும் பிரசித்தி பெற்ற ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ஒன்றில் சுஜய் உணவு மற்றும் பானங்கள் பிரிவில் மேலாளராகப் பணிபுரிந்திருந்தார். 2009 இல் பூதம் போலக் கிளம்பித் தாக்கிய ஆட்குறைப்பு நேரத்தில் சுஜய் தனது வேலையை இழக்க நேரிட்டது. வேலையை இழந்தாரே தவிர வேலை தந்த அனுபவங்களை இழந்தாரில்லை, அந்த அனுபவம் தான் இப்போது சொந்தத்தொழில் தொடங்கிய நிலையில் கை கொடுத்தது.
மும்பை ரிஸ்வி கல்லூரியில் உடன் படித்த மாணவரும், நண்பருமான சுபோத்துடனான நட்பை சுஜய் தனது கல்லூரிக் காலத்தின் பின்னும் தொடர்ந்து பராமரித்து வந்ததால், ஆட்குறைப்பு நேரத்தில், தனக்கேற்பட்ட சிக்கல்களை ஒரு நண்பராக சுபோத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்படிப் பகிர்ந்து கொண்டதால், ஒரு கட்டத்தில் தெளிவு பெற்று உருவானது தான் சுஜயின் வடபாவ் தொழில். வேலையை இழந்தாலும், லண்டனை விட்டு வெளியேற விரும்பாத சுஜயுடன் அவரது நண்பர் சுபோத் கை கொடுத்தார். நண்பருக்காக சுபோத் லண்டன் சென்று அவருடன் கூட்டாகத் தொழில் செய்ய சம்மதம் தெரிவித்தார். 
இந்த இரு நண்பர்களும் லண்டனில், தங்களது சொந்த ஊர் ஸ்பெஷலான வடபாவை வெற்றிகரமாக லண்டனில் விற்று வருமானம் பார்க்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. முதன்முதலான வடபாவ் விற்கலாம் என்று முடிவு செய்ததும் அதற்கான இடம் தேடி இந்த நண்பர்கள் இருவரும் லண்டனில் ஒரு தெரு பாக்கியின்றி சுற்றி அலைந்திருக்கின்றனர். ஆனால், இடம் வசதியாகக் கிட்டினால், வாடகை கட்டுப்படியாகாது, வாடகை கட்டுப்படியானால் இடம் விற்பனைக்குத் தோதாக இல்லை எனும் நிலையில் தொடர்ந்து தேடி தங்களுக்கான சிறந்த இடத்தை ஒரு வழியாகக் கண்டு பிடித்து விட்டாலும் அங்கேயும் வாடகை சற்று அதிகம் தான். 2010 ஆம் ஆண்டில் இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதென்றால் வடபாவ் விற்க அனுமதி கிடைத்த மிகச்சிறிய இடத்திற்கு வாடகை மட்டும் மாதம் 35,000 ரூபாய்கள். வேற் வழியின்றி ஒப்புக் கொண்டு நண்பர்கள் இருவரும் கடையைத் தொடங்கினார்கள். முதலில் தங்களது பொருளை விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சாலையில் கடக்கும் அனைவருக்குமே இலவசமாக வடபாவ் சாப்பிடக் கொடுத்திருக்கிறார்கள். பண்டத்தின் ருசி வாடிக்கையாளரை ஈர்க்கவே மெது மெதுவாக தொழில் சூடு பிடிக்கத் தொடங்கியது. 
பிறகு முதலில் கிடைத்த கடையை விட்டு விட்டு இடவசதி நிறைந்த ஹவுன்ஸிலோ ஹை ஸ்ட்ரீட்டில் ஸ்ரீ கிருஷ்ணா வடபாவ் என்ற பெயரில் புதுக் கடையை கடையைத் திறந்தார்கள். 
ஆரம்பத்தில் வடாபாவ் மற்றும் டபேலி எனும் இரண்டே இரண்டு ஸ்னாக்ஸ்களுடன் ஒரு ஐஸ்கிரீம் பார்லரின் முன் பகுதியில் மிகச்சிறிய இடத்தில் தொடங்கப்பட்ட இவர்களது கடைக்கு இன்று லண்டனில் இரு இடங்களில் கிளைகள் உண்டு. அதில் தயாராகும் உணவு ஐட்டங்களின் எண்ணிக்கையும் பாவ் பாஜி, வட மிசல், பேல் பூரி, பானி பூரி, ரக்தா பட்டீஸ், கச்சோரி, சமோஸா, எனத் தற்போது 60 ஐத் தாண்டி விட்டது. வார இறுதி நாட்களில் போஹா மற்றும் சாபுதானா கிச்சடி கூட அங்கே கிடைக்கிறது. அது மட்டுமல்ல எல்லாவிதமான பண்டிகைகளுக்கும் கேட்டரிங் சர்வீஸ் செய்து கொடுக்கவும் இன்று அவர்கள் தயார். தங்களது விடாமுயற்சி மற்றும் தொழில் மீதிருந்து பக்தியால் இன்று அந்த நண்பர்கள் தொடங்கிய தொழிலின் ஆண்டு நிகர லாபம் எவ்வளவு தெரியுமா? இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதென்றால் கிட்டத்தட்ட 4.4 கோடி ரூபாய்.
7 வருட தொடர் போராட்டத்தில் விளைந்த வெற்றி இது. ஆட்குறைப்போ அல்லது வேறு ஏதாவது காரணத்தால் வேலை இழப்போ எதுவானாலும் சரி, எப்போதுமே கடின உழைப்பைத் தந்து வாழ்வில் முன்னோக்கி நகரத் தேவையான சவால்களுடன் புது முயற்சிகளைத் தொடங்கத் தயாராக இருப்பவர்களுக்கு வெற்றி உறுதி என்பது இவர்கள் மூலமாக மீண்டும் ஒருமுறை மெப்பிக்கப்பட்டிருக்கிறது.
வாழ்வின் இக்கட்டான தருணங்களிலும் மனிதர்களுக்குத் தேவையாக இருப்பது மூன்றே மூன்று தான்.
 
  • தெளிந்த சிந்தனை
  • நல்ல நட்பு
  • விடாமுயற்சி
இந்த மூன்றும் சுஜய்க்கு  கிட்டியதால் மட்டுமே அவர் இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபர்!

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...