Thursday, October 12, 2017


காவல்துறையின் கடமை 


By ஆர். வேல்முருகன்  |   Published on : 12th October 2017 01:33 AM  | 
கடந்த மூன்று நாள்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் புறநகர் பயணிகள் ரயிலில் செல்லும்போது பட்டாக் கத்தியை ரயில் நிலையங்களில் தரையைத் தேய்த்துச் சென்றனர். அதிலிருந்து எழும் நெருப்பைக் கண்டதாலும் மாணவர்களின் மன நிலை புரிந்ததாலும் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். 
இந்தச் சம்பவத்தை யாரோ ஒருவர் செல்லிடப்பேசியில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். அதையடுத்து போலீஸார் வீறுகொண்டு எழுந்து சில மாணவர்களைக் கைது செய்து சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று காட்டியுள்ளனர்.
சென்னையின் சில குறிப்பிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ரயில் நாள் மற்றும் பேருந்து நாள் கொண்டாடும் போது ஒரு சிலருக்காவது அரிவாள் வெட்டு விழுவது வாடிக்கை. 
தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மை காரணமாகத்தான் இது நடைபெறுவதாகப் பெரும்பாலான மாணவர்கள் கருதுகின்றனர்.
மாணவர்கள் ரயிலில் பட்டாக்கத்தியுடன் வரும்போது அங்குள்ள பயணிகளோ அல்லது அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீஸாரோ என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. பொதுமக்கள் மாணவர்களிடம் பேச முடியாது என்பது தெரிந்ததே. 
ஆனால், ரயில்வே போலீஸார் என்ன செய்தார்கள்? குறைந்தபட்சம் தாங்கள் பார்த்ததை அடுத்த ரயில் நிலையத்தில் உள்ள போலீஸாரிடம் சொல்லி மாணவர்களைக் கைது செய்திருக்கலாம். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.
இந்தச் சம்பவத்தைப் பதிவேற்றம் செய்த பிறகு மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலர் கைது செய்யப்படலாம். 
ஆனால் எந்த ஓர் அரசியல் கட்சியும் இதைப்பற்றி குறைந்தபட்சம் ஒரு கண்டன அறிக்கைகூட வெளியிடவில்லை என்பது வருத்தம் தரும் விஷயம். அவர்களின் குடும்பத்தினர் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அதன்விளைவு கடுமையாக இருந்திருக்கலாம்.
ஆனால் இம்மாணவர்களைப் பொதுமக்கள் கூட்டமாகச் சேர்ந்து தாக்கி சில மாணவர்களுக்குக் கையும் காலும் முறிந்திருந்தால் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சியினரும் வரிந்து கட்டிக் கொண்டு அறிக்கை வெளியிட்டிருப்பார்கள். 
மருத்துவமனையில் மாணவர்களைப் பார்க்கப் படையெடுத்து ஆளாளுக்குப் புகைப்படத்துடன் பேட்டியும் கொடுத்திருப்பார்கள். போலீஸார் தடியடி நடத்தியிருந்தாலும் இதுதான் நடக்கும்.
சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்றில்லை பள்ளி மாணவர்கள் கூட பெரும்பாலும் பேருந்துகளுக்குள் வருவதேயில்லை. ஜன்னல் கம்பிகளில்தான் தொங்கி வருகின்றனர். 
பெற்றோர்கள் அந்த மாணவர்களைப் படிக்க அனுப்பினார்களா அல்லது சர்க்கஸ் செய்ய அனுப்பினார்களா என்பது தெரியவில்லை. பேருந்துகளுக்குள் அவர்களின் ஆட்டமும் பாட்டமும் சொல்லி மாளாது. 
அவர்கள் பேசும் பேச்சால் பேருந்தில் உள்ள பயணிகள், குறிப்பாக, பெண்கள் முகம் சுளித்தாலும் மாணவர்கள் கண்டு கொள்வதில்லை.
முன்பெல்லாம் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும்போது பெற்றோர், கண்ணையும் காதையும் மட்டும் விட்டுவிடுங்கள் என்பார்கள். ஆனால் இப்போது அவ்வாறு சொல்வதற்கும் பெற்றோர்கள் தயாராக இல்லை. 
பெரும்பாலான ஆசிரியர்களுக்கும் மாணவர்களை அடித்துத் திருத்தும் தகுதியில்லை. கண்டிப்புடன் இருக்கும் ஒரு சில ஆசிரியர்களும் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற அரசின் உத்தரவைச் செயல்படுத்துவதில் தீவிரமாக இருக்கின்றனர்.
மிகக் குறைந்த அளவு மாணவர்கள்தான் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். காவல்துறையினர் நினைத்தால் இது போன்ற செயல்களை எளிதில் தடுக்க முடியும். ஆனால் காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்வதிலிருந்து பின்வாங்குகின்றனர். 
அப்பாவிப் பொதுமக்களைத் தேவையில்லாமல் வதைக்கும் போலீஸாருக்கு மாணவர்கள் செய்வது தவறு என்று தோன்றவில்லையா?
அடுத்தவர்களுக்குத்தான் பிரச்னை நமக்கில்லை என்று காத்திருந்தால் நமக்குப் பிரச்னை வரும்போது அதைத் தடுப்பதற்கான காலம் முடிந்திருக்கும் என்பதைப் போலீஸார் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
கைது செய்யப்பட்ட மாணவர்களைக் கல்லூரிகளில் இருந்து நீக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள காலங்களில் போலீஸார் மிகக் கடுமையாகப் போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். 
விதியை மீறுபவர்கள் மாணவர்கள் என்றாலும் தயவு தாட்சண்யமின்றி கண்காணிப்புக் கேமராக்களின் உதவியுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பெற்றோரை அழைத்து வந்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பேச வேண்டும். தேவைப்பட்டால் சிறந்த மன நல மருத்துவர்களின் உதவியோடு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங்கூட செய்யலாம்.
இவை அனைத்தும் ஒரே நாளில் நடந்துவிடும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் காவல்துறையினர் மனது வைத்தால் சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. 
மாணவர்கள் கொண்டாடும் ரயில் நாள் மற்றும் பேருந்து நாளைத் தடை செய்தாலும் தவறில்லை. மீறி கொண்டாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தால் போதும். 
அதற்குத் தேவை துணிவுதான். அந்தத் துணிவு நமது காவல்துறையிடம் உள்ளதா?

    No comments:

    Post a Comment

    Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

    Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...