Monday, October 16, 2017

ஆருஷி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையானாலும் கைதிகளுக்கு தல்வார் தம்பதி பல் சிகிச்சை

Published : 16 Oct 2017 09:25 IST

தஸ்னா



ராஜேஷ் - நுபுர் தம்பதி - THE HINDU


‘‘மகள் ஆருஷி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட தல்வார் தம்பதியினர், சிறையில் இருந்து சென்ற பிறகும் கைதிகளுக்கு பல் சிகிச்சை அளிப்பார்கள்’’ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி அருகே நொய்டாவில் 14 வயது சிறுமி ஆருஷி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தாள். வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜும் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த 2 கொலைகளையும் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார், தாய் நுபுர் தல்வார் ஆகியோர் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உத்தரபிர தேச மாநிலம் தஸ்னா சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இருவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து இன்று இருவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தஸ்னா சிறை அதிகாரிகள் கூறியதாவது;

ராஜேஷ் மற்றும் நுபுர் இருவரும் பல் மருத்துவர்களாக உள்ளனர். எனவே, சிறையில் இருந்து விடுதலையாகி சென்றாலும், 15 நாட்களுக்கு ஒரு முறை சிறைக்கு வந்து பல் பிரச்சினைகள் உள்ள கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். சிறை மருத்துவமனையில் செயல் படாமல் இருந்த பல் மருத்துவப் பிரிவை மீண்டும் தொடங்குவதற்கு தல்வார் தம்பதியினர் நிறைய உதவிகள் செய்தனர். கைதிகள் மட்டுமன்றி சிறை அதிகாரிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தல்வார் தம்பதியினர் சிகிச்சை அளித்தனர்.

இவ்வாறு சிறை அதிகாரிகள் கூறினர்.

ராஜேஷ் தல்வாரின் சகோதரர் தினேஷ் தல்வார் கண் மருத்துவராக உள்ளார். அவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சிறைக்கு வந்து கைதிகள் உட்பட அனைவருக்கும் சிகிச்சை அளிப்பார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. - பிடிஐ

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024