Friday, February 6, 2015

வரி பாக்கி: எப்படியெல்லாம் வசூலிக்கிறாங்க...?!



சென்னை: சொத்துவரியை வசூலிக்க, திருநங்கைகளை அழைத்துவந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல் முன்பு நடனமாட வைத்து, சென்னை மாநகராட்சி நூதன வசூலில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈக்காட்டுத் தாங்கலில் பன்னாட்டு நிறுவனத்தின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை பெரும் பணம் படைத்த தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கும் அளவிலான அனைத்து வித வசதிகளோடும் இயங்கிவரும் இந்த ஹோட்டல், சென்னை மாநகராட்சிக்குச் சொத்துவரி செலுத்தவில்லை.

இதைத்தொடர்ந்து இன்று காலையில் உதவி வருவாய் அலுவலர் தமிழ் தலைமையில் அதிகாரிகள் ஓட்டலுக்குச் சென்றனர்.

ஹோட்டல் முன்பு தண்டோரா அடித்து திருநங்கைகளை நடனமாட வைத்தனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் சொத்து வரி கட்டாததற்கான நோட்டீசை வழங்கினார்கள்.

அவர்களுடன் ஹோட்டல் நிர்வாகிகள் சிலர் நேரில் வந்து சொத்து வரி குறித்துப் பேசினர்.அவர்களிடம் உண்மை நிலையை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கிய பின்னர், ஹோட்டல் நிர்வாகத் தரப்பினர் சொத்து வரிக்காக ரூ.33 லட்சத்து 90 ஆயிரத்துக்கு காசோலையைக் கொடுத்தனர்.

இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் , ‘‘நாங்கள் ஹோட்டலுக்கு இதுவரை சொத்துவரி பாக்கி வைத்ததே கிடையாது. சொத்து வரி செலுத்த மார்ச் மாதம் வரை அவகாசம் உள்ளது. ஆனால் அதற்குள் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து விட்டனர்’’ என்றனர்.

இது தொடர்பாக மாநகராட்சியின் உதவி வருவாய் அலுவலர் தமிழ், "சொத்து வரிக்கான ரசீது கொடுத்து 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும். 15 நாட்கள் தாண்டினால் இதுபோல நோட்டீஸ் கொடுத்து வரியை வசூலிப்போம். மும்பையில்தான் தண்டோரா போட்டு திரு நங்கைகளை நடனமாட வைத்து நட்சத்திர ஓட்டல்களில் சொத்து வரி வசூலிப்பார்கள். அதே பாணியில் தற்போது சென்னையிலும் தண்டோரா போட்டு திருநங்கைகளை நடனமாட வைத்து சொத்து வரிக்காக நோட்டீஸ் கொடுக்கிறோம்" என்றார்.

எப்படியோ..வரி பாக்கி வசூலானால் சரிதான்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024