Wednesday, October 11, 2017


அக்டோபர் 10: உலக மனநல தினம்! மன அழுத்தத்தை அதிகரிக்கின்றதா பணியிடங்கள்?

Published on : 10th October 2017 03:27 PM



உலகம் முழுவதிலும் மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த 1992-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் அக்டோபர் 10-ம் தேதி மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக மனநல தினத்துக்கான இந்த வருடக் கருப்பொருளாக உலக சுகாதார மையம் அறிவித்திருப்பதாவது ‘பணியிடத்தில் மனநலம் பேணுதல்’ என்பதாகும். உலக சுகாதார மையத்துடன் இனைந்து தேசிய மனநல கூட்டமைப்பு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட கருத்தைப் பிரகடனம் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதிலும் 150-கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் இந்தத் தினம் ஆஸ்திரேலியா போன்ற ஒரு சில நாடுகளில் மட்டும் மனநல வாரமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒரு தற்கொலை நிகழ்கிறது, அதாவது ஆண்டுக்கு எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அதிலும் பெரும்பான்மையானோர் வேலையிடத்தில் ஏற்படும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்பவர்கள் என்னும் அதிர்ச்சி தகவலை தருகிறது ஒரு ஆய்வு. உளவியல் ரீதியான மனநல விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்குவதன் மூலம் இதுபோன்ற தற்கொலை எண்ணங்களைத் தவிர்க்கலாம் என்றும் உளவியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

ஒரு பிரபல நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 33% பேர் தாங்கள் வேலையில் ஏற்படும் பிரச்னை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் கூறியுள்ளார்கள். அவர்களில் 90% பேர் மன அழுத்தத்தாலும், 78% பேர் கவலையாலும், 60% பேர் மனச் சோர்வாலும், 52% பேர் தூக்கமின்மையாலும் பாதிக்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பெரும்பாலும் 8 முதல் 9 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, ஆனால் இதையும் தாண்டி பலர் அதிக நேரம் இரவு முழுவதும் அவர்கள் கண் விழித்து வேலை செய்வது மிகப் பெரிய அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.



தூக்கம் என்பது நாம் உடலுக்கு மட்டும் தருகின்ற ஓய்வு அல்ல, சதா சர்வ நேரமும் எண்ணற்ற விஷயங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கும் மனதிற்கும் தருகின்ற ஓய்வாகும். அந்த வகையில் உறக்கம் என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான ஒன்று. அந்த உறக்கத்தைத் தியாகம் செய்து பணி செய்வதால் கட்டாயம் மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு ஏற்பட்டு இறுதியில் எந்த வேலைக்காக அவ்வளவு கஷ்டப்பட்டோமோ அந்த வேலையிலேயே கவனம் செலுத்த முடியாமல் போகும். இன்னிலையில் ஏற்கனவே இருந்த மனச் சோர்வு பிறகு வேலையில் கவனம் செலுத்த முடியாததால் ஏற்படும் மன அழுத்தம் இவையனைத்தும் சேர்ந்து மனநலத்தை முற்றிலும் பாதிக்கும். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவே இந்த வருடம் ‘பணியிடத்தில் மனநலம் பேணுதல்’ என்ற கருப்பொருளை தேர்வு செய்திருக்கிறது உலக சுகாதார மையம்.

இதில் இருந்து தங்கள் ஊழியர்களைக் காப்பாற்ற நிறுவனங்கள் வேலை நேரத்திற்கும் மேலாக ஒருவர் அதிக நேரம் பணி செய்வதை ஊக்குவிக்காமல், அதிக பணி சுமையை அலுவலர்களுக்குக் கொடுக்காமல், ஒருவேளை ஒருவர் மன சொர்வு அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை உளவியல் ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற செய்து அதிலிருந்து அவர்கள் விடுபட உதவ வேண்டும். பணி செய்பவர்களுக்கு ஏற்றப் பணி சூழலை ஏற்படுத்தித் தந்து, அவர்கள் மன ஆரோக்கியத்தைச் சீர் படுத்த யோகா, தியானம் அல்லது ஆன்மிக பயிற்சிகளை அவர்களுக்குத் தர வேண்டும். மேலும் எப்பொழுதும் வேலை பற்றிய எண்ணம் மட்டும் இல்லாமல் சமூக பணிகளிலும் அவர்களை ஈடுபடச் செய்து அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...