இன்லண்ட் லெட்டரை மறக்க முடியுமா? வாசகர்களே தினமணிக்கு கடிதமெழுத ஒரு நல்வாய்ப்பு!
By கார்த்திகா வாசுதேவன் | Published on : 10th October 2017 06:12 PM |
போஸ்ட்மேன், நம் மக்களின் வாழ்க்கையில் டீச்சர், டாக்டர், டிரைவர், கண்டக்டர் போல போஸ்ட் மேன் என்ற வார்த்தையும் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக இருந்தது. அதற்கு எளிமையான உதாரணம் சொல்ல வேண்டுமெனில் 80 களில் வந்த தமிழ் திரைப்படங்களில் சிலவற்றைப் பார்வையிடுங்கள். நிச்சயம் 10 ல் 4 படங்களிலாவது போஸ்ட்மேன் கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும். அப்படி பொதுமக்களுக்கும், போஸ்ட் மேனுக்குமான உறவு, ஆத்மார்த்தமானதாக இருந்தது. அதனால் தான் போஸ்ட்மேன், மணியார்டர், தந்தி போன்ற வார்த்தைகள் பொது மக்களது அன்றாட வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தன.
கடிதங்களை அடுத்து தகவல் தொடர்பின் அடுத்த கட்ட வளர்ச்சியான டெலிபோன் என்ற வசதி கூட ஆரம்ப காலங்களில் தபால் நிலையங்களில் தான் ஏற்படுத்தப்பட்டது. ஊரில் யாருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தாலும், தபால் நிலையங்களுக்கு ஓடி வந்து தான் பேசி விட்டுப் போவார்கள். இப்படி போஸ்ட்மேன்களோடு, போஸ்ட் ஆஃபீஸ்களும் (தபால் நிலையங்களும்) நம் மக்களது வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தன.
80 களின் பிற்பகுதியில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட பிரம்மாண்ட வளர்ச்சியின் பின் சந்தைக்குள் புகுந்த கம்ப்யூட்டர், மற்றும் அலைபேசிகளின் அபிரிமிதமான பயன்பாட்டினால் உலகமே ஒரு குளோபல் கிராமமாகச் சுருங்கி விட்டது. ஆனாலும், இப்போதும் கூட இந்திய அஞ்சல் துறையின் சேவை இந்தியாவைப் பொறுத்தவரை குறைந்து விட்டதாகக் கருதமுடியாது. இப்போதும் அலுவலக ரீதியான முக்கியமான கடிதங்கள், தனியார் நிறுவனங்களின் வாடிக்கையாளர் கடிதங்கள், அரசு அலுவலகக் கடிதங்கள், வங்கிகளின் வாடிக்கையாளருடனான தொடர்புகள் மற்றும் அறிவிப்புகள் உள்ளிட்டவை போஸ்ட் கார்டு, கூரியர் தபால், பதிவுத் தபால், போன்றவை மூலமாகத் தான் கையாளப்படுகின்றன. இதை ஏன் இப்போது ஞாபகப்படுத்த வேண்டும் என்றால்;
இன்று ‘இந்திய தபால் தினம்’!
நேற்று அக்டோபர் 9 ஆம் தேதியன்று உலகெங்கிலும் சர்வதேச தபால் தினம் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி இன்று அதாவது அக்டோபர் 10 ஆம் நாள், இந்தியாவில் தபால் தினம் நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அக்டோபர் 9, 1874 இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்டது. அந்தத் தினமே உலக தபால் தினமாகக் தற்போது கொண்டாடப்படுகிறது. மொத்தம் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் அந்த தினத்தை உலக தபால் தினமாகக் கொண்டாடி வருகின்றன. 1969 ஆம் ஆண்டு ஜப்பான், டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் கொண்டாடுவதென முடிவெடுத்து அதை உலகின் பல நாடுகள் இன்று வரை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன.
உலகிலேயே அதிக தபால் நிலையங்களைக் கொண்ட நாடு இந்தியா தான், இந்திய அஞ்சல் துறை 1764ல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.
இந்தியாவில் தபால் துறையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி என்பது ஆங்கிலேயே காலனி ஏகாதிபத்தியத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. அதற்கு முன்பு வரை நமது இந்திய அரசர்கள் புறாக்கள் மற்றும் பருந்துகளின் காலில் கடிதச் சுருள்களை கட்டி விடுதல், ஒற்றர்கள் மூலமாக கடித ஓலைகளை அனுப்புதல் என்று தான் தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு தான் தபால் அனுப்பும் முறை, அரசு எந்திரத்துக்குள் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது முதன்முறையாக தங்களது வர்த்தகப் பயன்பாட்டுக்காக 1764- 66 க்கும் இடைப்பட்ட காலத்தில் கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் அவர்கள் தபால் நிலையங்களை நிறுவினர். இதை பொதுமக்கள் பயன்பாட்டுக்குமாக மாற்றி அமைத்தவர் அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ். இதன் மூலமாகப் புண்ணியம் கட்டிக் கொண்ட பெருமை அவரைத் தான் சேரும். ஏனெனில் அதற்கு முன்பு வரை அஞ்சலகங்கள் என்பவை கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக தகவல் பரிமாற்றங்களுக்கு மட்டுமானவையாகவே இருந்தன.
ஸ்பீட் போஸ்ட்...
எகிப்தில் வர்த்தகம் செய்து வந்த தாமஸ் வஹ்ரன் 1820 ஆம் ஆண்டு வாக்கில் அங்கே தமக்கேற்பட்ட வியாபாரத் தோல்வியை அடுத்து தமது அடுத்த புதிய முயற்சியாக இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்குமான தகவல் தொடர்பை அதி விரைவாக்கித் தரும் முயற்சியைத் தொடங்கினார். ஏனெனில், அந்நாட்களில் தபால்கள் கடல்மார்க்கமாக மட்டுமே பெறப்பட்டு, அனுப்பப் பட்டு வந்தன. இந்த முறையில் ஒரு கடிதம் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்து சேர மூன்று மாதங்களுக்கும் அதிகமாக நேரம் எடுத்துக் கொண்டது. எனவே தாமஸ், கடிதங்களை அனுப்பிப், பெற நிலவழி மார்க்கங்களைத் தேடி கண்டடைந்து செயல்படுத்தி கடிதங்களைப் பெறுவதற்கான கால தாமதத்தை 35 நாட்களாகக் குறைத்தார். ஆனாலும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் அவர் தமது புதிய தகவல் தொடர்புத் திட்டத்துக்கான அனுமதியைப் பெற மேலும் 10 ஆண்டுகள் அவகாசம் தேவைப்பட்டது.
அந்தக் காலத்தில் கடிதங்கள் தாமதமாக பெறப்பட்டதற்கான ஒரு உதாரண சம்பவம்...
2015 ஆம் ஆண்டில் 80 வயதுப் ஃப்ரெஞ்சுப் பெண்மணி ஒருவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் அவரது முப்பாட்டனாருக்கு வந்திருக்க வேண்டிய கடிதம். அனுப்பப் பட்ட ஆண்டு 1877. அவரது வீட்டிலிருந்து 6 மைல் தொலைவில் உள்ள ஒரு வாடிக்கையாளர் இவரது தாத்தாவின் ஸ்பின்னிங் மில்லில் இருந்து நூற்பதற்குப் பஞ்சு கேட்டு விண்ணப்பித்திருந்த அந்தக் கடிதம் கிட்டத்தட்ட நூற்றாண்டுகளுக்கும் மேலாக தாமதமாகி 2015 ஆம் ஆண்டில், சரியான முகவரி எழுதப்பட்டிருந்ததால் இவரை வந்தடைந்திருந்தது. இதைப் போல தாமதமாக வந்து சேர்ந்த கடிதங்களுக்கான உதாரணங்கள் அனேகமுண்டு இந்திய தபால்துறை வரலாற்றில்!
சரியான முகவரி இல்லாத கடிதங்களை என்ன செய்வார்கள்?
ஒழுங்காக முகவரி எழுதப்படாத அல்லது தவறான முகவரி குறிப்பிடப்பட்டு திருப்பி அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும் டெட் லெட்டர் ஆஃபீஸுக்கு அனுப்பப்படுகின்றன (அதிகாரப்பூர்வமாக திருப்பி அனுப்பப்பட்ட கடிதங்களுக்கான அலுவலகம் (Returned Letter Office) கடிதங்கள் அனைத்தும் அங்கே சில காலம் காத்திருப்பில் வைக்கப்பட்டு யாரும் தேடுவார் இல்லையெனில் பின்பு அக்கடிதங்கள் அழிக்கப்பட்டுவிடும். பார்சல்கள் அல்லது புத்தக பண்டில்கள் எனில் அவை குறைந்தபட்சம் ஒரு வருட காலம் காத்திருப்பில் வைத்திருக்கப் படும். பின்னர் அவற்றைத் தேடி யாரும் அணுகவில்லை எனில் அவை அழிக்கப்பட்டு விடுமாம்.
சில சுவாரஸ்யங்கள்...
சுதந்திர இந்தியா முதலில் வெளியிட்ட தபால் தலையில் இடம்பெற்றது நமது இந்திய தேசியக் கொடி.
சுதந்திர இந்தியா வெளியிட்ட தபால்தலை முத்திரையில் இடம்பெற்ற முதல் மனிதர் எனும் பெருமைக்குரியவர் தேசப்பிதா மகாத்மா காந்தி.
2011 ஆம் ஆண்டில் காஷ்மீரில் தால் ஏரியில் மிதக்கும் தபால் அலுவலகம் முதன்முதலாகக் கொண்டு வரப்பட்டது.
கடிதங்கள் பிற்காலத்தில் இலக்கிய வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தன. கடித இலக்கியம் என்றொரு பிரிவே சிறப்புறப் பேணப்பட்டது. பண்டித நேரு, தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு தான் ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் மாணவப் பருவத்தில் எவரும் தவற விடக்கூடாத அளவுக்கான அருமையான புத்தகமானது.
தமிழிலும் கடித இலக்கிய வரிசையில்;
மறைமலையடிகள், கோகிலாம்பாள் கடிதங்கள்,
மு. வரதராசனாரின் ‘செந்தாமரை’ கடித இலக்கிய வரிசை,
வள்ளலார் கடித இலக்கிய வரிசை
காந்தி கடித இலக்கிய வரிசை
அறிஞர் அண்ணா ‘தம்பிக்கு’ என்ற பெயரில் எழுதிய கடித இலக்கிய வரிசைகள்,
கலைஞரின் ‘உடன்பிறப்பே’ கடிதங்கள்,
கி.ரா வின் கரிசக் காட்டுக் கடிதாசி வரிசைகள் என கடித இலக்கிய மரபின் செம்மையையும், சிறப்பையும் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
கடிதம் எழுதுவதை ஒரு கலையாக எண்ணி சீர் மிக்க கடிதங்கள் பலவற்றை எழுதி அவற்றை கடித இலக்கியப் பதிவாக்கி பிற்கால சந்ததியினர் வாசித்து வாழ்வின் உன்னதங்களை அறிந்து கொள்ள வழிகோலி மறைந்த தமிழறிஞர்கள் பலர் நம்மிடையே உண்டு. ஆகவே கடிதங்கள் என்பவை வெறுமே தகவல் பரிமாற்றங்களுக்கு மட்டுமேயானவை என்று அவற்றின் மகத்தான சமூகப் பங்களிப்பை குறுக்கி விடத் தேவையில்லை.
அஞ்சலகக் குறியீட்டு எண் (பின்கோட்) எதைக் குறிக்கிறது?
இந்தியாவின் அஞ்சலகக் குறியீட்டு எண் 6 இலக்கங்கள் கொண்டது. அதில் முதல் இலக்கம் மாநிலத்தையும், இரண்டாவது இலக்கம் துணை பிராந்தியத்தையும், மூன்றாவது இலக்கம் மாவட்டத்தையும், மீதமுள்ள மூன்று இலக்கங்கள் தபால் அலுவலகம் அமைந்துள்ள இடத்தையும் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது.
உலகம் முழுக்க மக்களிடையே இப்போது ‘கைப்பட கடிதம் எழுதும்’ வழக்கம் கொஞ்சம், கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகிறது. என்ன தான் மின்னஞ்சல், வாட்ஸ் அப், எஸ் எம் எஸ் என்று தகவல் பரிமாற்றங்கள் தடையற நிகழ்ந்தாலும் அவையெல்லாம் நமது சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்டதான ஒரு கடிதத்தை வாசிக்கும் போது கிடைக்கும் இன்பத்திற்கு ஈடாகாது. எனவே கைப்படக் கடிதம் எழுதும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தினமணி.காம், இந்தக் கட்டுரை வாயிலாக உங்களுக்கு ஒரு அருமையான அனுபவத்தைத் தர முயற்சிக்கிறது.
இன்லண்ட் லெட்டரில் அல்லது போஸ்ட் கார்டில் அல்லது A 4 ஷீட் கடிதம் வாயிலாக காவியம் படைக்க எண்ணும் ஆசை இருப்பவர்கள்...
ஒரு வித்யாசமான அனுபவத்திற்காக, உங்களது நெருங்கிய நட்புகளுக்கோ, அல்லது அன்பானவர்களுக்கோ, அல்லது பெற்றோருக்கோ, உடன் பிறந்தவர்களுக்கோ யாருக்காக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களில் ஒருவருக்கு உங்களது மனதிலிருக்கும் உணர்வுகளை எல்லாம் வார்த்தைகளாக்கி, உங்கள் கைப்பட ஒரு கடிதம் எழுதுங்கள். அதை ஒரு படி எடுத்து வைத்துக் கொண்டு ஒரிஜினலை அவர்களுக்கு அனுப்பி விட்டு, பிரதியை எங்களுக்கு அனுப்புங்கள். முகவரிக்கான இடத்தில் மின்னஞ்சல் வழக்கத்திலோ அல்லது வாட்ஸப் பழக்கத்திலோ முகவரிக்குப் பதிலாக அலைபேசி எண்ணையோ, மின்னஞ்சல் முகவரியையோ எழுதி விடாதீர்கள். ‘தினமணி’ முகவரிக்கு அனுப்புங்கள்.
கடிதங்கள் எங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசித் தேதி... 20.10.17
10 நாட்கள் அவகாசம் போதும் தானே!
எடுங்கள் உங்கள் எழுதுகோலை, நிரப்புங்கள் மையை... படையுங்கள் உங்கள் மகா காவியத்தை...
அனுப்ப வேண்டிய முகவரி...
தினமணி.காம்
எக்ஸ்பிரஸ் கார்டன்,
29 செகண்ட் மெயின் ரோடு, அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
சென்னை - 600058
சுவாரஸ்யமான, வித்யாசமான கடிதங்கள் தினமணி.காம், சிறப்புக் கட்டுரைப் பிரிவில் பிரசுரிக்கப்படும்.
No comments:
Post a Comment