Wednesday, October 11, 2017

ஒரு மில்லினர் வீட்டு ‘ஸோ சிம்பிள்’ திருமணம்... இரண்டு கம்ப்யூட்டர்கள் மட்டுமே திருமணச் செலவாம்!

By RKV | Published on : 10th October 2017 11:53 AM




இந்தியா என்றதும் வெளிநாட்டுக்காரர்களுக்கு உடனடியாக ஞாபகம் வருவது என்னவென்று நினைக்கிறீர்கள்? முதலில் சென்னையின் இட்லி, தோசை, சாம்பார் என்று நினைத்து விடாதீர்கள். அதெல்லாம் வட இந்தியர்களுக்கு மட்டும் தான் ஞாபகம் வரும். பொதுவாக இந்தியா என்றதும் உலகத்தின் பொதுப்பார்வை என்ன தெரியுமா? பிரியாணி, பாலிவுட், படாடோபமான நமது பகட்டுத் திருமணங்கள் இவ்வளவு தானாம். இந்த மூன்று விஷயங்களுக்குள் அடங்கிப் போகிறதாம் இந்தியர்களின் வாழ்க்கை. தென்னிந்தியர்களையும் இப்போது இந்த பிரியாணி வகைகள் ஒரேயடியாய் மயக்கித் தான் வைத்திருக்கின்றன என்பதற்கு நமது திருமணங்களில் தவறாது பரிமாறப்படும் பிரியாணிகளே சாட்சி! இன்றைய தேதிக்கு பிரியாணி இல்லாமல் ஒரு திருமணத்தை நிறைவாக நடத்தி முடித்து விடத்தான் முடியுமா என்ன? அதை, விடுங்கள்... அப்புறம் நமது திருமணங்கள்... அடடே ரகம். பணமதிப்பிழப்பு இக்கட்டு நேரங்களில் கூட கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக பிரமுகரான ஜனார்த்தன ரெட்டியால், தன் மகளது திருமணத்தை 500 கோடி ரூபாய் செலவிட்டு டாம்பீகமாய் நடத்தி முடிக்க முடிந்தது என்றால் இந்தியத் திருமணங்களில் ஆடம்பரம் எத்தகைய இடத்தை வகிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் திருமணங்கள், பல குடும்பங்களைக் கடனாளியாக்கி தவிக்க விட்டிருக்கின்றன என்று சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும்.

இந்தியத் திருமணங்கள் என்றாலே, விதம், விதமான பட்டும், நகைகளும், ஊரை அசத்தும் கல்யாணச் சாப்பாட்டு மெனுக்களுமாக பகட்டு பலவிதங்களில் பல்லைக் காட்டும். இந்தியத் திருமணங்கள், இரு மனங்களை இணைக்கும் சங்கம விழாக்கள் மட்டுமல்ல, இரு குடும்பங்களின், சொத்து மதிப்பை பொருட்காட்சியாக்கி ககை விரிக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவும் கூடப் பார்க்கப் படுகிறது. இரு குடும்பங்கள் என்று கூறி திருமண வீட்டாரை மட்டும் குறை சொல்வானேன். திருமணத்தில் கலந்து கொள்ளச் செல்வோரையும் சேர்த்தே கற்பனை செய்து பாருங்கள். அவர்களுக்கும் கூட திருமண விழாக்களில் கலந்து கொள்வது என்பது, தங்களிடமுள்ள நகைகளையும், விதம் விதமான விலையுயர்ந்த ஆடைகளையும் சமூகத்திற்குக் காட்டி தங்களது அந்தஸ்தைப் பறைசாற்றிக் கொள்ளக் கிடைத்த ஒரு வாய்ப்பே என்றால்... அது மிகையில்லை.

இந்தியத் திருமணங்களின் பொது இலக்கணம் இப்படியாக இருக்கும் போது, யாராவது, அதிலும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், ஒரு கோடீஸ்வரர், தமது மகனுக்கு எவ்விதப் பகட்டுகளுமின்றி மிக எளிமையாக பதிவுத் திருமணம் செய்து வைத்தால் அது நிச்சயம் அதிசயமான விஷயமாகத்தான் கருதப்படும்.



கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான பொறிஞ்சு வெலியத் என்பவரது மகன் சன்னி வெலியத்தின் திருமணம் தான் அத்தனை எளிய திருமணமாக நடந்து முடிந்திருக்கிறது. பொறிஞ்சு வெலியத், சுமார் 1200 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி என அவரது புரோஃபைல் காட்டுகிறது.



தனது மகனது திருமணம் குறித்து பொறிஞ்சு வெலியத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

இன்று என் மகனது திருமணம் கேரளாவில், சார் பதிவாளர் அலுவலகத்தில் இனிதே நடந்து முடிந்தது. சார் பதிவாளர் வேண்டுகோளின் படி, அலுவலகத்துக்கு என இரண்டு கம்ப்யூட்டர்களை வாங்கி அன்பளிப்பாக அளித்தோம். திருமணத்திற்கான செலவென்றால் அது ஒன்று மட்டும் தான் :)

என்று தெரிவித்துள்ளார்.

ஒரு கோடீஸ்வரராக இருந்து கொண்டு, மகனுக்கு இத்தனை எளிமையாகத் திருமணம் நடத்தி வைத்ததில் ஏதாவது உள்நோக்கம் உண்டா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்; ‘ இதில் எந்த உள்நோக்கமும் இல்லை, என் திருமணமும் இப்படித்தான் நடந்தது. அது மட்டுமல்ல என் மகன் அமெரிக்காவில் பணிபுரிகிறார். அவர், திருமணம் முடிந்ததும் விரைவாக அமெரிக்கா திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருந்தார். உடனடியாகச் சென்று முடித்தாக வேண்டிய அலுவல் அங்கிருந்தது. எனவே மணமகள் வீட்டாரிடம் பதிவுத் திருமணத்திற்கு சம்மதமா? என்று கேட்டதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். அதனால் எளிமையாக திருமணத்தை முடித்துக் கொண்டோம். அதோடு திருமணம் என்றில்லை பொதுவாக எல்லா விஷயங்களிலுமே மக்கள் அவரவர் அறிவிற்கும், ஞானத்திற்கும் உட்பட்ட வகையில் முடிவெடுத்துச் செயலாற்றுகிறார்கள். அவ்வளவு தானே தவிர, இதில் பிரமாதமாகப் பேச ஒன்றுமில்லை’. என்ற ரீதியில் பதில் அளித்திருக்கிறார் பொறிஞ்சு வெலியத்.

பொரிஞ்சு வெலியத் ஈக்விட்டி இண்டலிஜென்ஸ் எனும் நிறுவனத்தின் ஸ்தாபகராகவும், செயல் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்தியாவில் வளர்ந்து வரும் சிறிய அளவிலான பங்கு வர்த்தக நிறுவனங்களில், மிக வேகமாக முன்னேற்றமடைந்து வரும் ஸ்தாபனங்களில் இவருடையதும் ஒன்று எனக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...