தீபாவளி பண்டிகையில் வாழ்த்து அட்டைகள் வேண்டாம்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
By DIN | Published on : 11th October 2017 02:08 AM
தீபாவளி பண்டிகையின்போது வாழ்த்து அட்டைகளை அனுப்புவதற்குப் பதிலாக, இணைய வழியே வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளுமாறு தமது அலுவலர்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையானது காகிதப் பயன்பாட்டை குறைப்பதுடன் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான சிறு முயற்சியாகவும் இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, வருகின்ற தீபாவளி பண்டிகையின்போது, காகித வாழ்த்து அட்டைகளை சுகாதாரத் துறை அலுவலர்கள் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, இணைய வழியே வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
இதன் மூலமாக, காகிதப் பயன்பாடு பெருமளவு குறைவதோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். இதற்கு வசதியாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வலைதளத்திலேயே டிஜிட்டல் வாழ்த்து அட்டைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை, பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பதிவிறக்கம் செய்து மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment