Wednesday, October 11, 2017


டெங்கு: 20,000 பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ்
By DIN | Published on : 11th October 2017 04:43 AM




தமிழகம் முழுவதும் சுற்றுப்புறங்களைப் பராமரிக்காமல் டெங்கு காய்ச்சல் பரவுவதற்குக் காரணமாக இருந்த 20 ஆயிரம் பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு (ஜனவரி முதல் செப்டம்பர் வரை ) 11,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்னர் என்று அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் க.குழந்தைசாமி ஆகியோர் தலைமையில் செவ்வாய்க்கிழமை களப்பணிகள் நடைபெற்றன. களப் பணிகளை ஆய்வு செய்த பிறகு ஜெ.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: சுகாதாரத் துறையின் தீவிர சோதனை மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 20,000 பேர், டெங்கு கொசு புழுக்களை உற்பத்தி செய்யும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. சென்னையில் மட்டும் சுமார் 2,000 கடைக்காரர்கள் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் பழைய பொருள்களைச் சேமித்து வைத்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் பொது சுகாதாரத் துறை மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸுக்கு இரண்டு நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நோட்டீஸை அலட்சியப்படுத்தினால்...: சுகாதாரத் துறையின் எச்சரிக்கை நோட்டீஸை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.மேலும், ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் தண்டனை சட்டப்பிரிவில் இடம் உள்ளது.
பொது மக்களுக்கு வேண்டுகோள்: தமிழகத்தில் 2 கோடி வீடுகள், லட்சக்கணக்கான நிறுவனங்கள் இருப்பதால் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க உதவ வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. டெங்குவைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றார் ஜெ.ராதாகிருஷ்ணன்.
சிகிச்சை பெறுவோருக்கு ரூ.2,000: புதுக்கோட்டையில் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பணிகளைப் பார்வையிட்ட சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ''டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு ரூ.2,000 வழங்கப்படும்'' என்றார்.

நீதிமன்றம் உத்தரவு: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்ற (மதுரை) கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜெ.அப்துல் குத்தூஸ் ஆகியோர் மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
கட்டுப்பாட்டில் உள்ளது


தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மதுரையில் இருந்து சென்னை செல்லும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது : தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து அரசு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்களுக்கு உரிய மருத்துவ சேவையை அளித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் காய்ச்சலுக்கு பரிசோதனை செய்து உரிய மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. டெங்கு காய்ச்சல் குறித்து பலர் தவறான புள்ளி விவரங்களைப் பேசி வருகின்றனர். ஆனால் அரசு, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்கள் குறித்து சரியான விவரங்களை அறிவித்து இருக்கிறது என்றார். 

24 மணி நேர உதவி மையம்
டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் குறித்த தகவல்கள் மற்றும் புகார்களைப் பெறுவதற்காக சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. 

டெங்கு காய்ச்சல் குறித்து கூடுதல் தகவல்களை பொது மக்கள் பெறவும், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள் குறித்த புகார்களைத் தெரிவிக்க 104 என்ற எண்ணையும், 94443 40496, 93614 82899 ஆகிய செல்லிடப்பேசி எண்களையும் 044 - 2435 0496 / 2433 4811 ஆகிய தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தூய்மை செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்கு புழுக்கள் உற்பத்தியாகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால், பொது சுகாதார சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி குறிப்பிட்ட நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தரமான சிகிச்சை: காய்ச்சல் நோயாளிகளுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் நெறிமுறைபடி சிகிச்சை அளிக்க, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
திரவ உணவுகள் அவசியம்: காய்ச்சல் குறைந்த பின்பும் நீர்ச் சத்துக் குறைவு மற்றும் இதர பிரச்னைகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, காய்ச்சல் நீங்கிய பின்பும் மூன்று நாள்களுக்கு கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரை அணுக வேண்டும். போதிய நீர் மற்றும் திரவ உணவுகளை அருந்த வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...