Friday, October 20, 2017

11,மாவட்டங்களுக்கு,புயல்,எச்சரிக்கை,வங்கக்கடல்,காற்றழுத்த,தாழ்வு,மண்டலம்

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகம், புதுச்சேரியில், 11 மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம், புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில், துறைமுகங்களில், புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.



தென்மேற்கு பருவமழை, வடமாநிலங்களில் முடிவுக்கு வந்துள்ளது. தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், முடிவடையும் நிலையிலும், தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம், ஆந்திரா இடையே, ஒரு வாரத்திற்கு முன், வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவானது. இது, வங்க கடலின் மத்திய பகுதியில் நுழைந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பின், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது.

நகர்கிறது

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருகிறது. நேற்று பிற்பகலில், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில், ஒடிசாவின் சந்த்பாலிக்கு, தெற்கே, 390 கி.மீ., துாரத்திலும்; புரிக்கு தென் கிழக்கே, 280 கி.மீ., துாரத்திலும் மையம் கொண்டிருந்தது. மணிக்கு, 16 கி.மீ., வேகத்தில் ஒடிசாவை நோக்கி நகர்கிறது.

இன்று அதிகாலை, புரிக்கும், சந்த்பாலிக்கும் இடையே தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, கரையை கடக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி, சென்னை, கடலுார், நாகை, துாத்துக்குடி உட்பட, தமிழகம், புதுச்சேரியில், 11 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, சென்னை,கடலுார், நாகை, புதுச்சேரி, பாம்பன், எண்ணுார், துாத்துக்குடி, காரைக்கால் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில், ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. குளச்சல், ராமேஸ்வரம் துறைமுகங்களுக்கு புயல் குறித்த முன் எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள், வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவை ஒட்டிய கடற்பகுதியை நோக்கி, மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

துவங்குது பருவ மழை

காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னமாக மாறி, பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம், தமிழகத்தில் நிலவியது. ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றாலும், தமிழக கடற்பகுதியை விட்டு நகர்ந்துள்ளதால், பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என, தெரிகிறது.எனினும், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், தமிழகம், புதுச்சேரியின்

பல இடங்களில், லேசானது முதல், கனமழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது, தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையை துவக்கி வைக்கும் வகையில் அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், நேற்று காலை, 8.30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், திருக்காட்டுப்பள்ளி, 2; துாத்துக்குடி, புள்ளம்பாடி மற்றும் பூதப்பாண்டியில், 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. சம்பா சாகுபடி துவங்கி உள்ள நிலையில், 2016 போல் வறட்சி இல்லாமல், இந்த ஆண்டு பெரும் மழை கிடைக்கும் என, விவசாயிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பாம்பனில் 1ம் எண்புயல் கூண்டு

வங்கக் கடலில் உருவான புயலால், ராமேஸ்வரம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த அழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்து ஒடிசா சந்த்பாலி கடற்கரையில் இருந்து 440 கி.மீ., துாரமும், ஒடிசா பூரி கடற்கரையில் இருந்து தென் கிழக்கில் 340 கி.மீ.,துாரத்தில் மையம் கொண்டுள்ளது. 

இதனால் தொலைதுார புயல் எச்சரிக்கையாக நேற்று மாலை, பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் மீன்பிடிக்கவும், பாம்பன் கடற் கரையில் பாதுகாப்பாக கப்பல், படகுகளை நிறுத்தி வைக்க மீன்துறையினர் அறிவுறுத்தினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY