Saturday, October 14, 2017



தித்திக்கும் தீபாவளி வந்தாச்சு! கடைகளில் அலைமோதும் கூட்டம் நள்ளிரவு வரை தொடரும் ஷாப்பிங்

 தித்திக்கும் தீபாவளி வந்தாச்சு! கடைகளில் அலைமோதும் கூட்டம்  நள்ளிரவு  வரை தொடரும் ஷாப்பிங்
கோவை;தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள சூழலில், கோவை நகரிலுள்ள, ஒப்பணக்காரவீதி, காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில், துணிகள் வாங்க, குடும்பத்துடன் கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்; சாலைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
அனைத்து வளங்களையும் சிறப்புகளையும் கொண்டுள்ள கோவையில், நவராத்திரி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயுதபூஜை, விஜயதசமி விழாக்களும் இனிதே நிறைவடைந்தன. அடுத்து, தீபாவளி கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது கோவை.இன்றிலிருந்து நான்காவது நாள் தீபாவளி. மிகக் குறைந்த நாட்களே உள்ளதால், போனஸ் வாங்கியுள்ள தொழிலாளர்கள், தீபாவளி பண்டிகைக்கு, குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான ஆடை, ஆபரணங்கள் வாங்கிக் கொடுக்கும் முனைப்புடன் கடை வீதிகளில் வலம் வருகின்றனர்.வியாபாரிகள் இவர்களை குறிவைத்து காலை, 9:00 மணிக்கே கடைகளை திறந்து விடுகின்றனர். கடைகளுக்கு முன் வாழைத்தோரணங்கள் கட்டி, வாடிக்கையாளர்களை வரவேற்கின்றனர். அனைத்து சாலைகளும் களைகட்டியுள்ளன.சாலைகளின் இருபுறமும் பைக், ஸ்கூட்டர்கள் ஆக்கிரமித்துள்ளன. ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான பார்க்கிங் ஏரியா முழுக்க, கார், கால்டாக்சிகள் ஆக்கிரமித்துள்ளன. பஸ்களில் வந்திறங்கும் பயணிகள் வெள்ளம் சாலைகளில் வழிந்தோடுகிறது.
உக்கடம் பைபாஸ் சாலை சந்திப்பில் துவங்கும் நெரிசல், ஒப்பணக்காரவீதி, வைசியாள்வீதி, ரங்கேகவுடர் வீதி, பெரியகடைவீதி, ராஜவீதி, வெரைட்டிஹால் ரோடு, என்.எச்.ரோடு, மில்ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு இணைப்பு வரை நீடிக்கிறது.காந்திபுரத்தில், நுாறடி சாலை, கிராஸ்கட் சாலையிலும் மக்கள் மற்றும் வாகன நெரிசல் நீடிக்கிறது. வாகனங்கள் செல்வதற்கோ, சாலையோரம் நிறுத்துவதற்கோ இடமில்லை. ஆடைகளை தேர்வு செய்ய, குடும்பத்தினர், கும்பல் கும்பலாக, கடைகள் தோறும் ஏறி இறங்குகின்றனர்.
பெரியகடைவீதி, ராஜவீதி, கிராஸ்கட் சாலை, நுாறடி சாலை, காளிங்கராயன் சாலைகளில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள, ஏராளமான செருப்புக்கடைகளிலும், நைட்டி உள்ளிட்ட உள்ளாடை கடைகளிலும் விற்பனை அமோகமாக நடக்கிறது.ராஜவீதி, ஐந்துமுக்கு, சவுடம்மன் கோவில் அருகே ஏராளமான பாத்திரக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. நெல்லைலாலா, ஸ்ரீகிருஷ்ணா, அன்னபூர்ணா, திரஜ்லால் உள்ளிட்ட இனிப்புக்கடைகளில் தீபாவளிக்கானஇனிப்பு வாங்க முன்பதிவு நடந்து வருகிறது. குட்டீஸ்களுக்கான ஆடைகளை தேர்வு செய்ய, ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோடு, மேற்கு மற்றும் கிழக்கு திருவேங்கடசாமி சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கோவையில், காலை, 10:00 மணிக்கு துவங்கிய தீபாவளி 'பர்ச்சேஸ்' நள்ளிரவு, 12:00 மணி வரை நீடிக்கிறது. இரவு, 10:00 மணியோடு வியாபாரம் நிறைவு என்று சொல்லும் ஜவுளிக்கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நள்ளிரவு, 12:00 மணி வரை வியாபாரத்தை தொடர்கின்றனர்.நள்ளிரவு வியாபாரத்துக்கென, சிறப்பு விற்பனையாளர்களை நியமிக்கின்றனர். சில கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்னாக்ஸ், காபி, சிற்றுண்டியும் கொடுக்கப்படுகிறது.
கோபுரம் நிறுவி கண்காணிப்பு!
காந்திபுரம் கிராஸ்கட் சாலை, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில், சிறப்பு கண்காணிப்பு கோபுரம் நிறுவி, போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நகை பறிப்பை தவிர்க்க கூடுதல் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.டவுன்ஹால், ஒப்பணக்காரவீதி, ராஜவீதி, கிராஸ்கட் சாலையில் மக்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாலை நேரத்தில் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...