Tuesday, October 17, 2017

சித்தா படிப்பில், 'சீட்' கிடைத்தும் பணமின்றி பரிதவிக்கும் மாணவி

சித்தா படிப்பில், 'சீட்' கிடைத்தும் பணமின்றி பரிதவிக்கும் மாணவி
பெரம்பலுார்: அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், சித்த மருத்துவம் படிக்க, 'சீட்' கிடைத்தும், வறுமை காரணமாக கல்லுாரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.
அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, கீழசிந்தாமணி கிராமத்தை சேர்ந்த குணபத்மபிரியா, 17. பிளஸ் 2 பொதுத் தேர்வில், 1,114 மதிப்பெண் பெற்றார். மருத்துவக் கல்லுாரியில் சேர, 'நீட்' தேர்வு எழுதியதில், 77 மதிப்பெண்களே எடுத்தார்.
இதனால், சித்த மருத்துவம் படிக்க விண்ணப்பித்தார். கவுன்சிலிங்கில், கோவை, தனியார் சித்த மருத்துவக் கல்லுாரியில், சீட் கிடைத்தது. கல்வி கட்டணம், 35 ஆயிரம் ரூபாய் செலுத்தி, வரும், 19ம் தேதிக்குள் சேர வேண்டும். மிகவும் வறுமை நிலையில் உள்ள பத்ம பிரியாவின் பெற்றோர், '35 ஆயிரம் ரூபாய் செலுத்தி, படிக்க வைக்க இயலாது' என, தெரிவித்து விட்டனர்.

மாணவி பத்மபிரியா கூறியதாவது: என் தந்தை மாற்றுத் திறனாளி. வழக்கறிஞரான அவரால், நீதிமன்றத்தில் நீண்ட நேரம் நின்று வாதாட முடியாததாலும், போதிய வருமானம் இல்லாததாலும், வழக்கறிஞர் தொழிலை விட்டு, திருக்குறள் ஞானமன்றத்தில் சேர்ந்து, திருக்குறளை பரப்பி வருகிறார். தாய், கூலி வேலைக்கு சென்று, குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், முன்னாள் முதல்வர், ஜெயலலிதா ஆகியோரிடம் விருது பெற்றுள்ளேன்.
சித்த மருத்துவம் படிக்க சீட் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உதவ விரும்புவோர் - 85250 -10849 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024