Wednesday, October 11, 2017


வியாபாரமாகிறதா செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை? - ‘கையில காசு... வயித்துல குழந்தை’


Published : 10 Oct 2017 06:24 IST

டி.எல்.சஞ்சீவிகுமார்

செற்கைக் கருவூட்டல் சிகிச்சையில் நாட்டில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது தமிழகம். மற்ற மாநிலங்களை விட குறைவான கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் மையங்கள் பெருகி வருவதால் தொழில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் இல்லாததால் இந்தத் துறையில் பயிற்சி இல்லாத மருத்துவர்களும் தரமற்ற சிகிச்சை முறைகளும் ஏமாற்று பேர்வழிகளும் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
சமீபத்தில் சென்னையில் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மையத்தை நடத்தி வந்த பெண் மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கப்பட்டார். இவர் மீதான கொலை முயற்சிக்கு தொழில் போட்டியே காரணம் என்று கூறிய காவல் துறையினர், இதே துறையில் சிகிச்சை மையம் நடத்தி வரும் மருத்துவரை கைது செய்துள்ளனர். செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மையங்களை நடத்துவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இந்த மையங்களுக்கான விதிமுறைகளை வகுத்திருந்தாலும் அங்கீகாரமற்ற மையங்கள் அதிகரித்திருப்பதே மேற்கண்ட தொழில் போட்டிக்கும் தரமற்ற சிகிச்சைக்கும் காரணம் என்கிறார்கள் இந்தத் துறையில் இருக்கும் மருத்துவர்கள்.
 

சிக்கல்களை மறைக்கும் மையங்கள்

இதுகுறித்து இதே துறையில் இருக்கும் பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர்கள் சிலர் கூறும்போது, “செயற்கை கருவூட்டல் சிகிச்சையில் இன்று பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. Artificical reproductive technology (ART), In - Vitro fertilisation (IVF), Intra - Uterine injection (IUI) என்று இதில் சிகிச்சை முறைகள் இருக்கின்றன. குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினரிடம் ஆணின் விந்தணு மற்றும் பெண்ணின் கருமுட்டைகளை எடுத்து அதனை செயற்கைக் குழாயில் கருவூட்டல் செய்து அதனை பெண்ணில் கர்ப்பப் பைக்குள் செலுத்துவது அடிப்படையான சிகிச்சை முறை. இந்தத் துறையில் ஏற்பட்டிருக்கும் மருத்துவ அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக தற்போது செயற்கைக் குழாய் அல்லாமல் நேரடியாகவே பெண்ணின் கருப்பைக்குள் ஆணின் விந்தணுக்களை செலுத்தி கருவூட்டல் செய்யும் முன்னேறிய IVF சிகிச்சை முறையே இன்று பரவலாக அளிக்கப்படுகிறது.
இதிலும் எதிர்மறை சுழற்சி மூலம் மாதவிடாயின் முதல் நாளிலிருந்து தொடங்கும் சைக்கிள் ஆன்டோகோனிஸ்டி என்ற சுழற்சிமுறை சிகிச்சையும் இருக்கிறது. மாதவிடாய் தொடங்கிய 22-ம் நாளிலிருந்து தொடங்கும் ஆன்டோகோனிஸ்டி சைக்கிள் எனப்படும் சிகிச்சையும் இருக்கிறது. இந்த வகையான சிகிச்சைகள் 5 வார காலத்துக்கு அளிக்கப்படுகிறது.
கருவை கருப்பைக்குள் மாற்றியப் பின்பு கருவுற்றிருப்பதை உறுதி செய்ய இரு வாரங்கள் காத்திருக்க வேண்டும். அவ்வாறு உறுதி செய்வதுடன் இந்த சிகிச்சை மையங்களின் பணி நிறைவடைகிறது. அதன் பின்பு கருவுற்றிருக்கும் பெண் வழக்கமான மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதேசமயம் மேற்கண்ட சிகிச்சைகளின்போது குறிப்பிட்ட சதவீதம் பெண்களுக்கு ஓவுலேஷன் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் சிண்ட்ரோம் (OHSS) எனப்படும் ஹார்மோன் சமமின்மைக் காரணமாக அளவுக்கு அதிகமாக கருமுட்டை உற்பத்தியும் ஏற்படும். தவிர, IVF சிகிச்சை மூலம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் 50 சதவீதம் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு. பெண்களின் கருத்தரிப்பு 35 வயதிலிருந்து பெருமளவு குறைவதால் கரு முட்டைகளின் தரம் குறைதல், அடர்த்தி குறைவது இயல்பானதே. அதேசமயம் ஆண்களின் வயது அதிகரிக்கும்போதும் விந்தணுக்களில் டி.என்.ஏ. சிதைவு, தரம் குறைவது, குறைபாடுள்ள உருவம், எண்ணிக்கை, அசைவு குறைந்துபோவது போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல சிக்கல்களை சொல்லலாம். இவை எல்லாம் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை முறையில் இருக்கும் பின்னடைவுகள்.

குழந்தை பிறக்காவிட்டால் பணம் வாபஸ்

ஆனால், இந்த பின்னடைவுகளை எல்லாம் மறைத்துவிட்டு, எங்களிடம் வந்தால் 100 சதவீதம் குழந்தைப்பேறு நிச்சயம் என்று அறிவிப்புகளை வெளியிட்டு பல சிகிச்சை மையங்கள் இயங்கி வருகின்றன. இன்னும் பல சிகிச்சை மையங்களோ குழந்தைப் பேறு இல்லை எனில் பணம் வாபஸ் என்றெல்லாம் விளம்பரம் செய்து தொழில் போட்டியை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குகின்றன. இவை எல்லாம் மருத்துவ சிகிச்சை என்கிற தார்மீக சேவை முறையை கேள்விக்குறியாக்குகின்றன.
இந்த சிகிச்சை என்றில்லை, மருத்துவத்தின் எந்தச் சிகிச்சையிலும் 100 சதவீதம் குணப்படுத்திவிடுவோம் அல்லது தீர்வு கண்டுவிடுவோம் என்று சொல்வது மருத்துவ தர்மம் அல்ல. நிரூபணமான அறிவியல் உண்மையும் கிடையாது. அப்படி இருக்கும்போது செயற்கைக் கருவுட்டல் மற்றும் குழந்தைப்பேறு 100 சதவீதம் நிச்சயப்படுத்த முடியாது. ஆனால்,இன்று தமிழகம் முழுவது பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படும் இதுபோன்ற மையங்கள் அதிகரித்துவிட்டதால் தொழிலின் தரம் குறைந்துவிட்டது. போலிகளும் அதிகரித்துவிட்டார்கள். தவிர, மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்து விற்பனையாளர்களுடன் மருத்துவர்கள் வணிக ரீதியான தொடர்பு வைத்திருப்பதிருப்பதுபோல இந்தத் துறை மருத்துவர்கள் இதே துறையிலிருக்கும் இடைத்தரகர்களுடன் தொடர்பு வைத்துள்ளார்கள். ” என்கிறார்கள்.

சாதனையாளர் குழந்தை வேண்டுமா?

செயற்கைக் கருவூட்டலுக்காக சென்னையில் மட்டும் சுமார் 20 அங்கீகாரம் பெற்ற தரமான சிகிச்சை மையங்கள் இருக்கின்றன. ஆனால், அங்கீகாரம் இல்லாமல் சுமார் 50 மையங்கள் வரை செயல்படுவதாக மருத்துவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். மேற்கண்ட சிகிச்சைகளுக்கு ரூ.20,000 தொடங்கி ரூ.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். கருமுட்டை மற்றும் விந்தணு வங்கிகளில் கருமுட்டைகள் ரூ.30,000 முதல் 70,000 வரையிலும் விந்தணுக்கள் ரூ. 10,000 முதல் 70,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. தரம் குறைந்த மற்றும் இறந்துபோன விந்தணுக்களை, கருமுட்டைகளை விற்பனை செய்வது போன்ற பிரச்சினைகள் இந்தத் துறையிலும் சகஜம்தான் என்றாலும் மருத்துவர் ஒருவர் சொல்லும் விஷயம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
“இந்தத் துறையில் விந்தணுக்களையும் கருமுட்டைகளையும் வாங்கித் தரவும் விற்றுத் தரவும் ஏராளமான இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். ‘குழந்தை இல்லை’ என்று சில மருத்துவர்களிடம் தம்பதியர் வந்த சில நிமிடங்களுக்காக தம்பதியரின் விபரங்கள் இடைத் தரகர்களுக்குச் சென்றுவிடும். தம்பதியரை அணுகும் அவர்கள், ஏதோ பொம்மையை விற்பனை செய்வது போல ‘உங்களுக்கு எதுபோன்ற குழந்தை வேண்டும்? வெள்ளையாக அல்லது சிகப்பாக குழந்தை பிறப்பதற்கு பிரத்தியேகமான விந்தணுக்கள், கருமுட்டைகள் இருக்கின்றன. சிறந்த விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்களின் விந்தணுக்கள், கருமுட்டைகள்கூட எங்களிடம் கிடைக்கும். அவற்றை வைத்து குழந்தை பெற்றுகொண்டால் உங்களுக்கு அதே போன்ற சாதனையாளர் குழந்தை பிறக்கும்’ என்றெல்லாம் மூளைச் சலவை செய்கிறார்கள். இதை கேட்டு லட்சக்கணக்கான ரூபாயை இழந்த தம்பதியர்கள் எல்லாம்கூட இருக்கிறார்கள்” என்றார் அந்த மருத்துவர்.
நாட்டின் 10 சதவீதத்தினருக்கு குழந்தையின்மைச் சிக்கல் இருக்கிறது. மும்பையின் பன்னாட்டு மக்கள் தொகை ஆய்வியல் நிறுவனம் அளித்திருக்கும் அறிக்கையின்படி 16 சதவீதம் பெண்கள் குழந்தையின்மை சிக்கலில் இருக்கிறார்கள். குழந்தையின்மையால 17 சதவீதம் பெண்ளுக்கு மண வாழ்க்கையில் சிக்கல் எழுந்துள்ளது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட செயற்கைக் கருவூட்டல் மையங்கள் சுமார் 800 மட்டுமே இருக்கின்றன. ஆனால் 3,500 அங்கீகாரம் இல்லாத மையங்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்.
நடப்பாண்டில் இந்தத் தொழிலின் வளர்ச்சி விகிதம் 19 - 21 சதவீதமாகவும், ஒட்டுமொத்த கூட்டு வருடாந்திர வளர்ச்சி வீதம் ரூ. 2500 கோடியாகவும் இருக்கிறது. இதிலிருந்தே இந்த தொழிலின் விஸ்வரூபத்தை புரிந்துகொள்ளலாம்.
குழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்... வாடகைத் தாய்!
இதே துறையின் மற்றொரு பரிணாமம் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்வது. கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் வாடகைத் தாய் சட்ட மசோதா - 2016-க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டாலும் பழைய நடைமுறைகள் எதுவும் மாறவில்லை என்கிறார்கள் அந்தத் துறையில் இருப்பவர்கள். ஆண், பெண் மலட்டுத் தன்மை சிக்கல்களைத் தாண்டி பெண்கள் பலருக்கு கர்ப்பப் பை புற்றுநோய், கர்ப்பப் பைக் கட்டி, கர்ப்பக் காலத்தில் தொடர் ரத்தப்போக்கு, தொடர் கருக்கலைப்பு, கர்ப்பப்பை நீக்கம் ஆகிய காரணங்களால் குழந்தை பெற முடியாமல் போகிறது. இவர்களுக்கான வாய்ப்பாக கருதப்படுகிறது வாடகைத் தாய் முறை.
குழந்தைப் பேறு இல்லாத தம்பதியரின் விந்தணு, கருமுட்டை இரண்டையும் எடுத்து, சோதனைக் குழாய் மூலம் கருவாக்கம் செய்து, அதனை வாடகைத் தாயின் கர்ப்பப் பைக்குள் செலுத்தி, குழந்தையை வளர்த்து பெற்றுக்கொடுப்பது வாடகைத் தாயின் பணி. இதற்காக பல லட்சங்கள் வரை வாடகைத் தாய்க்கு அளிப்பதாக கூறப்படுகிறது. சில ஆயிரங்கள் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களும் உண்டு. கோடிகள் புரளும் இந்தச் சந்தையிலும் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 30,000 குழந்தைகள் பிறப்பதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். சர்வதேச அளவில் இந்தியா இதில் முதலிடத்தில் இருக்கிறது.
சுவிட்சர்லாந்து, கனடா, பின்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, சவூதி அரேபியா உள்ளிட்ட 26 நாடுகளில் வாடகைத் தாய் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 1993-ம் ஆண்டிலிருந்தே வாடகைத் தாய் முறை நடைமுறையில் இருந்தாலும் 2000-ம் ஆண்டுகளுக்கு பின்புதான் இந்த முறையில் ஏராளமான குழந்தைகளைப் பிறப்பித்தார்கள். வெளிநாடுகளில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறக்க ரூ. 80 லட்சம் வரை செலவாகும் நிலையில் இந்தியாவில் ரூ.8 லட்சம் வரை மட்டுமே இதற்காக செலவாகிறது.
இதனால், 2000-களின் தொடக்கத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்து இந்திய வாடகைத் தாய்கள் மூலம் குழந்தைப் பெற்றுக்கொண்டார்கள். இதில் சமூக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. பெண்ணியவாதிகள் பலரும் இதற்கு எதிராக குரல் எழுப்பினார்கள்.
கடந்த 2002-ம் ஆண்டு ஜப்பானிய தம்பதியர் குஜராத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தைக்கு ஏற்பாடு செய்தனர். வாடகைத் தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும்போதே ஜப்பான் தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால், குழந்தையை யார் வளர்ப்பது என்கிற பிரச்சினை உருவாகி விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இதன் பிறகுதான் முதன் முதலாக உச்ச நீதிமன்றம் வாடகைத் தாய் முறையில் சில வழிகாட்டுதல்களை உத்தரவிட்டது.
பின்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், ‘வாடகைத் தாயாக இருக்க சம்மதிக்கும் பெண், மூன்று முறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க வேண்டும்; வாடகைத் தாய் ஏற்கெனவே இரு குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும்; குழந்தையில்லாத தம்பதியரிடம் பெறும் தொகை (குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம்) வாடகைத் தாய்க்கு அளிக்கப்பட வேண்டும்; வாடகைத் தாயின் கர்ப்பக் காலத்தில் மருத்துவ பராமரிப்பு செலவுக்காக மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்பட வேண்டும்’ என்பது உட்பட சில வழிகாட்டுதல்களை வகுத்தது.

மேற்கை ஈர்க்கும் இந்தியக் குழந்தைகள்

எந்த வகையிலும் குழந்தை பிறப்புக்கு வழியில்லாத தம்பதியர் மட்டுமே வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் வாடகைத் தாய் முறையின் அடிப்படை அம்சமே. ஆனால், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள காரணங்களாக மூத்த மருத்துவர் ஒருவர் சொல்லும் காரணங்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. “அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் தம்பதியர்களுக்கு இந்தியக் குழந்தைகளின் மீது ஈர்ப்பு அதிகம். ஆன்ம பலத்திலும் உடல் உறுதியிலும் இந்தியக் குழந்தைகள் அவர்கள் நாட்டுக் குழந்தைகளைவிட சிறப்பாக இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அதனால், இந்திய வாடகைத் தாய்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். அதேசமயம் அவர்கள் நாட்டில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதைவிட இங்கே 90 சதவீதம் செலவு குறைவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
நமது நாட்டிலேயே மேல் தட்டுப் பெண்கள் பலருக்கு குழந்தைகள் மீது விருப்பம் இருந்தாலும் சுயமாகக் குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கு விருப்பம் இல்லை. கர்ப்பக் கால பராமரிப்பு, பிரசவ வலி, மார்பகங்கள் தொய்வு, பிரசவத்துக்கு பின்னர் உடல்ரீதியாக ஏற்படும் தொய்வு, அழகு குறைந்துபோதல் என்று பல்வேறு காரணங்கள் அவர்கள் தரப்பில் சொல்லப்படுகின்றன. இதனால் குழந்தை பெறும் தகுதி இருந்தும் வசதியான பெண்கள் பலர் வாடகைத்தாயை நாடுகிறார்கள்.

குழந்தை பெற தடை விதிக்கும் நிறுவனங்கள்

இவை தவிர்த்து, தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் இங்கே இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள கடும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. இதுபோன்ற நிறுவனங்களில் இளம் பெண்கள் பணிக்கான நேர்முகத் தேர்வின்போதே, குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த நிபந்தனைகளை விதிக்கின்றன. குறிப்பிட்ட ஆண்டுகள் வரை அல்லது குறிப்பிட்ட திட்டப் பணிகள் நிறைவடையும் வரை குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்றும் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொள்ளும் நிறுவனங்களும் இருக்கின்றன. குழந்தை பெற்றுக்கொண்டால் நிறுவனத்தின் பணிகள் பாதிப்பது, இரவுப் பணி பார்க்க இயலாதது ஆகியவை இதற்கான காரணங்களாகச் சொல்லப்பட்டாலும் இது சட்ட விரோதமான செயல்தான்...” என்கிறார் அவர்.

என்ன சொல்கிறது வாடகைத் தாய் மசோதா?

கடந்த 2012-ம் ஆண்டிலிருந்தே வாடகைத் தாய் மசோதா குறித்து விவாதிக்கப்பட்டாலும் 2016-ம் ஆண்டில்தான் இந்த மசோதா முழு வடிவம் பெற்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த மசோதாவில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டு, பழைய நடைமுறைகள் முற்றிலுமாகவே மாற்றப்பட்டுள்ளன. அதன்படி வெளிநாட்டினர் இந்தியப் பெண்களை வாடகைத் தாயாகப் பயன்படுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. சட்டப்பூர்வமான இந்திய தம்பதியர் அதுவும் திருமணமாகி 5 ஆண்டுகள் குழந்தை இல்லாதவர்கள் மட்டுமே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடியும். திருமணம் ஆன உறவு முறை பெண், அதுவும் ஒருமுறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க முடியும்.
ஏற்கெனவே குழந்தை இருப்பவர்கள், தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்துக்கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்பவர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. இது வியாபாரம் இல்லை; மருத்துவ சேவை என்பதால் வாடகைத் தாயாக இருப்பவர்களுக்கு தனிக் கட்டணம் எதுவும் கிடையாது. மாறாக மருத்துவ செலவுகள் மட்டுமே வழங்க வேண்டும். வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் இதர குழந்தைகளுக்கான அனைத்து சட்டப்பூர்வமான உரிமைகளும் உண்டு.
இந்தியாவில் இனி புதியதாக இதுதொடர்பான மருத்துவமனைகளுக்கு அனுமதி இல்லை. இந்த விஷயத்தில் விதிகளை மீறுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்’ என்கிறது புதிய சட்ட மசோதா.

பிரச்சினைக்குத் தீர்வு என்ன?

முதலில் தம்பதியர் உடனடியாக அல்லது குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் குழந்தை வேண்டும் என்கிற மனப்பாங்கை கைவிட வேண்டும். சில மாதங்கள் அல்லது ஓரிரு ஆண்டுகள் குழந்தை பிறக்கவில்லை என்றவுடனே அவர்களுக்கு குழந்தையே பிறக்காது என்று முடிவு செய்துகொள்ள வேண்டாம். மூத்த மகப்பேறு மருத்துவர்களின் ஆலோசனையின்படி உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் உடலுறவு குறித்த ஆலோசனை பெற்று குழந்தையைப் பெற முயற்சிக்க வேண்டும். பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகளுக்கு பிறகு குழந்தையைப் பெற முடியாது என்று தெரிந்தால் மட்டுமே அங்கீகாரம் பெற்ற செயற்கைக் கருவூட்டல் மையங்களை நாடலாம்.

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...