வியூகம் 04: யூடியூபிலும் படிக்கலாம்!
Published : 10 Oct 2017 10:55 IST
பா
டல்கள், நகைச்சுவை காட்சிகளைப் பார்த்து ரசிப்பதற்கு மட்டுமல்ல, பாடங்களைப் படிப்பதற்கும்கூட யூடியூப் சிறந்த ஊட்கம்தான். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மனிதவள மேம்பாட்டு துறையும் அதன்கீழ் இயங்கிவரும் யு.ஜி.சி. உள்ளிட்ட அமைப்புகளும் கல்வித்துறை சார்ந்த பல்லாயிரக்கணக்கான காணொலிகளை உருவாக்கி இணையதளத்தில் தொடர்ந்து பதிவேற்றிவருகின்றன. இந்தக் காணொலிகள் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளவை.
பல துறைகள், பல்லாயிரக் காணொலிகள்
யு.ஜி.சி.யால் தொடங்கப்பட்ட கல்வித் தகவல்களுக்கான கூட்டமைப்பு (சி.இ.சி.) பேராசிரியர்களைக்கொண்டு ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட காணொலிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது. கலை, அறிவியல், தத்துவம், மேலாண்மை, வணிகவியல், தகவல் தொடர்பு, சுற்றுலா, விளம்பரம், இசை என ஏறக்குறைய எல்லாத் துறைகளுக்கும் காணொலிக் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தக் காணொலிகள் குறிப்பிட்ட பாடப்பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றுவோரின் விரிவுரைகளாக அமைந்துள்ளன. 20 நிமிடங்கள் தொடங்கி 1 மணி நேரம்வரை கால அளவு கொண்டவை. பேராசிரியர்களின் விரிவுரைகள் யு.ஜி.சி. பாடத் திட்டத்தின்படி அமைந்தவை என்பதால் யு.ஜி.சி. நடத்தும் நெட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்தக் காணொலிகளையும் தங்களது படிப்பின் ஒரு பகுதியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
யூ.பி.எஸ்.சி. நடத்தும் குடியுரிமைத் தேர்வுகளுக்கும் இந்தக் காணொலிகள் பயனுள்ளதாக இருக்கும். வரலாறு, புவியியல், அரசியலமைப்பும் சட்டங்கள், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த காணொலிகள் யூ.பி.எஸ்.சி. முதனிலைத் தேர்வுக்கும் முதன்மைத் தேர்வுக்கும் பயனுள்ளவை. முதன்மைத் தேர்வில் அரசியல் அறிவியல், சமூகவியல், பொருளாதாரம், பொது மேலாண்மை ஆகிய பாடங்களை விருப்பப் பாடங்களாகத் தேர்வு செய்துள்ளவர்களுக்கும் இந்தக் காணொலிகள் நல்லதொரு வாய்ப்பு. ‘Cec Ugc’ என்ற யூடியூப் சேனலில் இந்தக் காணொலிகளைக் காணலாம்.
வாசிப்பைச் சுவாரசியமாக்க
செய்தி மற்றும் தகவல் தொழில்நுட்பங்களின் வழியாகக் கற்பிக்கும் தேசிய அளவிலான திட்டத்தின்கீழ் வித்யா மித்ரா Vidya Mitra என்ற பெயரிலும் காணொலிகள் உருவாக்கப்பட்டு யூடியூபில் பதிவேற்றப்பட்டுவருகின்றன. மனித உரிமைகள், குற்றவியல் உள்ளிட்ட பல பாடப் பிரிவுகளுக்கான காணொலிகள் இந்தச் சேனலில் உள்ளன. குறிப்பாக, சமூகப் பணிகளுக்கான கல்வி என்ற பிரிவின்கீழ் அமைந்துள்ள 300-க்கும் மேற்பட்ட காணொலிகள் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கும் கட்டுரை தாளுக்கும் உதவியாக இருக்கும்.
மனித வளத் துறையும் யு.ஜி.சி. அமைப்பும் உருவாக்கியுள்ள இந்த ஆயிரக்கணக்கான காணொலிகள், குறிப்பிட்ட பாடப்பிரிவில் நெட் தேர்வு எழுதுவதற்கும், யூ.பி.எஸ்.சி. உள்ளிட்ட தேர்வுகளில் பொது அறிவு தாள்களை இன்னும் சிறப்பாக எழுதுவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்களது தயாரிப்பில் புத்தக வாசிப்போடு காணொலிகள் பார்ப்பதையும் இணைத்துக்கொள்ளலாம். எப்போதுமே படித்துக்கொண்டிருக்க முடியாது, சிலநேரம் சலிக்கவும் செய்யலாம், அப்போது காணொலிகளைப் பார்ப்பது வாசிப்புக்கு மாற்றாக இருக்கும்.
ஒரு பாடத்தைப் படிப்பதற்கு முன்பு அது தொடர்பான காணொலியைக் காண்பது ஒரு அறிமுகமாக இருக்கும். அல்லது ஒரு பாடத்தைப் படித்து முடித்தபிறகு, காணொலியைக் காண்பது அதை நினைவுபடுத்திக்கொள்வதாக இருக்கும். ஒரே பாடத்தை மீண்டும் மீண்டும் படிக்கவும் நினைவுபடுத்திக்கொள்ளவும் வேண்டியிருக்கும்போது, பாட நூல்களோடு காணொலிகளையும் சேர்த்துக்கொள்வது வாசிப்பை இன்னும் சுவாரசியமாக மாற்றும்.
No comments:
Post a Comment