மாணவர் மனம் நலமா? 03- இதற்குப் போய் பயப்படலாமா?
Published : 10 Oct 2017 10:54 IST
டாக்டர் டி.வி. அசோகன்
கல்லூரியில் படித்துவரும் எனக்கு அடிக்கடி தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகிறது. மனம் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளது. எதிர்மறையான எண்ணங்கள் உண்டாகின்றன. என்ன தீர்வு?
- குமாரசாமி: நெல்லிக்குப்பம்
உடனடியாக ஒரு மனநல மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில், மனநலப் பிரிவில் ஆலோசனையும், தேவைப்பட்டால் சிகிச்சையும் பெறுவது நல்லது.
இந்த உலகத்தில் தான் வாழத் தகுதியில்லை என்று ஒருவர் நினைக்கும்போது தன்னைப் பற்றி, தன் சூழ்நிலையைப் பற்றி, தன் எதிர்காலத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் கொள்ள தொடங்கிவிடுகிறார். அதீத எதிர்மறையான எண்ணங்கள் அவரை அடுத்த கட்டமான தற்கொலைக்குத் தள்ளுகின்றன. சிலருக்கு தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டாலும், அந்த முயற்சியில் ஈடுபடவிடாமல் குடும்பப் பிணைப்பு, குழந்தைகள் போன்ற விஷயங்கள் தடுத்துவிடும். இருந்தாலும் அவர்களும் ஆபத்தான நிலையில்தான் இருக்கிறார்கள்.
தற்கொலைக்கு இட்டுச்செல்லும் பிரதான காரணங்களை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
1. மனவருத்தம்
சமூகத்தில் தான் ஒதுக்கப்படுகிறோம் என்கிற நினைப்பு, உடலில் ஏற்படும் ரசாயன மாறுதல், மரபணு மூலமாக பரம்பரைக்கு கடத்தப்படும் சில கூறுகள் இப்படி பல காரணங்களால் மனவருத்தம் ஏற்படுகிறது. முதலில் தூக்கம், பசி, வேலை செய்யும் திறன் இவற்றில் மாறுதல்கள் ஏற்படும். அதுவரை பிடித்த விஷயங்கள்கூட இப்போது சுவாரசியம் இல்லாமல் தோன்றும். ஆனால் மற்றவர்களுக்கு வெளிப்படையாகத் தெரியாது. ஒரு கட்டத்தில் வாய்விட்டு அழும்போதுதான், உறவினர்களும் நண்பர்களும் பிரச்னையின் தீவிரத்தை உணரத் தொடங்குவார்கள். சற்று யோசிப்பதற்குள் மனவருத்தத்துக்கு உள்ளானவர், தற்கொலை செய்துகொள்வர்.
2. மனச்சிதைவு
எண்ணங்களில் சிதைவு, தனித்திருக்கும்போது காதுகளில் குரல் கேட்பது, குழப்பமான சிந்தனைகள், இவற்றை உள்ளடக்கிய ‘ஸ்கிஸோஃபிரினியா’ என்கிற ‘மன அழற்சி நோயும்’ இன்னொரு காரணம். பரம்பரையாக, நரம்பியல் ரசாயன மாறுதல்களால் ஏற்படும் இப்பிரச்னையில், திரும்பத் திரும்ப, “நீ செத்துவிடு” என்று மாறி மாறிக் குரல் கேட்கும்போது, சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
3.பேரிடர் நிகழ்வுகளினால் ஏற்படும் மனநோய்
பேரிடர் நிகழ்வுகளின் விளைவினால், நிலைகுலைந்து போகும்போது சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
4. ஆளுமைக் கோளாறுகள்
பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன் இன்மை, சார்புத்தன்மை, சாதாரண விஷயங்களுக்கும் அளவுக்கு அதிகமாக பயப்படுதல், அனாவசிய சந்தேகம், வன்மம், கட்டுக்கடங்காத கோபம் ஆகியவை தற்கொலைக்கு இட்டுச்செல்லும்.
5. குடிப்பழக்கம்
பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பதற்காகச் சிலர் குடிக்கின்றனர். நாளடைவில் உடல்ரீதியாக, மனரீதியாக, சமூகரீதியாக பாதிக்கப்பட்டு விரக்த்தியின் எல்லைக்குப் போகிறார்கள்.
6. சூதாட்டம், பொருளாதாரப் பிரச்சினைகள் கூடத் தற்கொலைக்குப் பெரும் காரணங்களாகிவிடுகின்றன.
7. தீர்க்க முடியாத நாள்பட்ட உடல்நோய்கள் கூடத் தற்கொலைக்கு முன்னுரை எழுதிவிடுகின்றன.
தற்கொலையினைத் தவிர்ப்பது எப்படி?
1. வெற்றி மட்டும்தான் வாழ்க்கையின் நோக்கம் என்று சொல்லிக்கொடுக்கும் நாம்,தோல்வி ஏற்படும்போது அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லித்தர தவறிவிடுகிறோம்.
2. மாணவர்களை புத்தகப் பொதி சுமக்கும் ரோபோட் நிலைக்குத் தள்ளாமல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கொண்டாட்டங்கள் ஆகியவற்றை அனுமதிக்க வேண்டும். அதேபோல நல்ல நட்பும், உற்றார் உறவினரின் சூழலும் நல்ல மனநிலையை உருவாக்க உதவும்.
3. எல்லாவற்றுக்கும் எல்லைகள் வகுத்துக்கொள்வது நல்லது.
4. குடும்ப நிகழ்வுகள் குழந்தைகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தன்னுடைய குடும்பப் பொருளாதாரச் சூழலை மீறி, தகுதிக்கு மீறி அதீத ஆசைகளை வளர்த்துக்கொள்வதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும்.
5. மற்றவர்களிடமிருந்து ‘சான்றிதழ் பெறுவதற்காக அல்ல வாழ்க்கை’ என்பதை அனைவரும் உணர வேண்டும்.
6. வாழ்க்கையில் எதிர்கொண்ட நேர்மறையான, எதிர்மறையான நிகழ்வுகளை குடும்ப உறுப்பினர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் சரியான புரிதல் இருந்தால், தற்கொலையைத் தவிர்க்கலாம்.
8. பெற்றோரிடம் குழந்தைகள் மனம்விட்டுப் பேசும் சூழல் வாய்க்கப்பெற்றாலே பல பிரச்சினைகளை மருத்துவர் இல்லாமலேயே தவிர்க்கலாம்.
9. மனநோய்களுக்கும் உடல் நோய்களுக்கும் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, வாழ்க்கையை அதன் நிறைகுறைகளோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்தெடுங்கள்!
நான் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறேன். தனித்திருக்கவும் பயமாக உள்ளது, கூட்டமான இடத்தைக் கண்டாலும் பயப்படுகிறேன். இதிலிருந்து எப்படி மீள்வது?
- ஷீலா,திருநெல்வேலி
தனிமையில் இருக்க பயப்படுவதை,'அகோராஃபோபியா' என்பார்கள். கலந்துரையாடும் சூழ்நிலைகளில் இருக்க அல்லது கூட்டத்தோடு இருக்கப் பயப்படுவதை,'சோஷியல் ஃபோபியா' என்பார்கள். மூன்றாவது வகை,மொட்டைமாடி, பல்லி, ரத்தம் உயரமான இடம் போன்றவைகளை கண்டு ஏற்படும் பயம். கடுமையான பயமும், பதற்றமும் சேரும்போது, panic attacks எனப்படும் ‘பேரச்சத் தாக்குதல்’ ஏற்படுகிறது. இந்த தாக்குதல் எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் சட்டென்று ஏற்படும். சிரமமான சுவாசத்தோடு, அதீத இதயத்துடிப்பும் சேர்ந்து இறந்துவிடுவோமோ என்கிற பயம்கூட ஏற்படும்.
பயத்தை எப்படிப் போக்குவது?
6வது மாடிக்குப் போக பயம் என்றால், படிப்படியாக முதல் மாடியிலிருந்து அவரை போகச் சொல்ல வேண்டும். அல்லது தடாலடியாக, ஆறாவது மாடிக்கு அவரை அழைத்துச் சென்று, பயம் முழுவதும் உணர்ந்த நிலையில், ‘இவ்வளவுதானா’என்கிற நிலையை எட்டுவதன் மூலம், அவரைவிட்டு அந்தப் பயம் விலக வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு கூட்டமும், தனிமையும் பயம் தருகிறது என்றால் அத்தகையச் சூழலைக் கண்டு விலகிப் போகாதீர்கள். நீங்களே முன்வந்து கூட்டத்தோடு கலந்திடுங்கள், தனிமையில் இருந்து அவற்றை வென்றெடுங்கள்.
தெளிவில்லாத நிலையில் ஏற்படும் குழப்பம், நம்முள் பயத்தை ஏற்படுத்துகிறது. தோல்விநிலையும் அப்படித்தான். பயம் மறையும்வரை பயமுறுத்திய சூழலில் பழகுவது நல்லது. பதற்றம் தணிக்கும் மருந்துகளும், நடத்தை மாற்று சிகிச்சை முறைகளும் நல்ல பலன் தருபவை. பயத்துக்கான தீர்வு எண்ணங்களைவிட, செயல்களில் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.மேரி க்யூரி சொன்ன மாதிரி, ‘நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. புரிந்து கொண்டால்போதும்”.
(தொடர்புக்கு: tvasokan@gmail.com).
‘மாணவர் மனம் நலமா?’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் டி.வி. அசோகன். வாசகர்கள் தங்களுடையப் படிப்புத் தொடர்பான உளவியல் சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.
முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ் நாளிதழ்,
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002,
மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in
|
No comments:
Post a Comment