ஆளுமை மேம்பாடு: தன்னம்பிக்கையைப் பெருக்குவது எப்படி?
Published : 10 Oct 2017 10:52 IST
முகமது ஹுசைன்
Published : 10 Oct 2017 10:52 IST
முகமது ஹுசைன்
எல்லையற்ற தன்னம்பிக்கையுடன் யாரும் இங்கே பிறப்பதில்லை. யாரேனும் ஆச்சரியப்படும் அளவுக்குத் தன்னம்பிக்கை உடையவராக இருந்தால், அதற்குப் பின்னால் கண்டிப்பாகப் பல வருட உழைப்பு இருக்கும். தேர்வில் அடைந்த தோல்வியோ அல்லது ஆசிரியர் கடிந்து பேசியதோ அல்லது வேலையில் பெற்ற தகுதிக்குக் குறைவான வருடாந்திர மதிப்பீடோ அல்லது தகுதிக்கு ஏற்ப வழங்கப்படாத ஊதிய உயர்வோ நம் தன்னம்பிக்கையை அசைத்துப்பார்க்கக்கூடும். சில நேரம் நமக்கு நெருக்கமானவர்கள் நல்லெண்ணத்தில் சொல்லும் அறிவுரைகூட தன்னம்பிக்கையைப் பாதிக்கலாம். ஆனால், மாக்ஸ்வெல் மால்ட்ஸ் சொன்னதுபோல, ‘தன்னம்பிக்கை இன்றி வாழ்வது, வாழ்நாள் முழுவதும் ஹேண்ட் பிரேக் பிடித்தபடி வண்டி ஒட்டுவதற்குச் சமம்.’
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நம்முடைய திறமை மீது நாம் எந்நேரமும் கொள்ளும் சந்தேகமும் தன்னம்பிக்கையைப் பாதிக்கலாம். எப்போது தன்னம்பிக்கை இழக்கத் தொடங்குகிறோமோ, உடனடியாக அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். பிறகு மீண்டும் தன்னம்பிக்கையைப் பெருக்கும் வழிகளில் ஈடுபட வேண்டும். அதற்குக் கீழே உள்ள ஆறு வழிகள் உதவும்.
உருவகப்படுத்துதல்
தன்னம்பிக்கை குறையும்போது, நம்மை நாமே மிகவும் குறைவாக மதிப்பிடுவோம். இந்தக் குறைவான மதிப்பீடு பெரும்பாலும் தவறாகவே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில் எது நம்மைப் பெருமை கொள்ள வைக்குமோ அதை கற்பனைசெய்து பார்க்கும் உத்திதான் உருவகப்படுத்துதல். இந்த வழிமுறை நம்மை மீண்டும் எழவைக்கும்.
பயத்தை எதிர்கொள்ளல்
“நீங்கள் பாதுகாப்பற்றவர் என்றால், உலகில் ஏனைய அனைவரும் அவ்வாறே என்பதை நினைவில்கொள்ளுங்கள். போட்டியை மிகைப்படுத்தி உங்களைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்” என்றார் கனடாவைச் சேர்ந்த வணிக ஜாம்பவானும் எழுத்தாளருமான டி. ஹார்வ் எகர். பயத்தை நேருக்கு நேர் எதிர்கொள்வதுதான் அதை வெல்வதற்கு உரிய வழி. நம்மைப் பயமுறுத்தும் காரியத்தைத் தினமும் செய்வதன் மூலம் நாம் பெறும் அனுபவம், நம் தன்னம்பிக்கையைப் பெருக்கிப் பயத்தை வெல்ல உதவும்.
சுய விமர்சனம் செய்தது போதும்
சிக்கலுக்கான தீர்வு வெளியே உள்ளதா அல்லது நம்மிடமே உள்ளதா என்பதை முதலில் கேட்பது அவசியம். இதற்கு Cognitive behavioral therapy போன்ற வழிமுறைகள் கைகொடுக்கும். இந்த உளவியல் அணுகுமுறை மூலம் நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றினாலே பல பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும் என்பது புரியவரும். உதாரணத்துக்கு, நம்மை ஒரு தோல்வியாளர் என்று உள்மனம் சொல்கிறது என்றால், நாம் அதனிடம் தோல்வியாளர் என்பதற்கும், தோல்வியாளர் இல்லை என்பதற்குமான ஆதாரத்தை கேட்க வேண்டும். ஒரு மாறுதலுக்கு, நம்மை நாமே விமர்சிப்பதை நிறுத்திவிட்டு நம்மை ஆமோதிக்கும்போது நிச்சயம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
வெற்றி மீது கவனம்
பலர் எளிதில் அடைய முடியாத குறிக்கோளை இலக்காக நிர்ணயித்துவிடுவார்கள். பின்னர் அதை அடைய முடியாமல் தோல்வி அடைந்து இருக்கும் தன்னம்பிக்கையையும் இழந்து தவிப்பார்கள். அதற்குப் பதிலாக எளிதில் அடையக்கூடிய குறிக்கோளை இலக்காகக் கொண்டு, பின்பு அதில் வெற்றி பெறுவதன் மூலம் நமது தன்னம்பிக்கையை வளர்த்து, பின்னர் படிப்படியாக நம் குறிக்கோளின் கடினத் தன்மையை அதிகரிக்கலாம்.
எல்லைகளை வரையறுத்தல்
நமக்கு இணக்கமானவர்களுக்கு அனுசரித்துப்போவது அவசியம்தான். அதே நேரத்தில் மற்றவர்களுக்காக நாம் வாழ முடியாது இல்லையா! ஆக, ‘இல்லை’ என்று சொல்லிப் பழக வேண்டும். நம்முடைய எல்லைகளை மதிப்பதற்குப் பிறருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். நம் வாழ்க்கை எந்த அளவுக்கு நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நமது தன்னம்பிக்கையும் இருக்கும்.
யாரும் யாருக்கும் இளைத்தவர் இல்லை
“வேறு யாரேனும் ஒரு நபராக மாற விரும்பும் மனிதனைவிட ஒரு வீணான மனிதன் வேறு யாரும் இல்லை” – மர்லின் மன்றோ
தன்னம்பிக்கை குறைவாக இருக்கும்போது, மற்றவர்களை அவர்களுடைய தகுதிக்கு மீறி உயர்வாக மதிப்பீடு செய்வோம். ஆனால், நம்மைவிட உயர்ந்தவரும் இல்லை, நமக்குத் தாழ்ந்தவரும் இல்லை என்கிற புரிதல் அவசியம். ஒரு வகையில் எல்லோரும் சமமான திறமையைக் கொண்டவர்கள்தான். இந்த எண்ணத்தை மனதில் ஆழமாக விதைத்தால், தன்னம்பிக்கை தானாகவே பெருகும்.
தன்னம்பிக்கை எப்போதும் நிலையாக இருப்பதில்லை. பெரிய தலைவர்கள்கூட சில நேரம் தன்னம்பிக்கை இழப்பார்கள். ஆனால், இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவது, எந்தக் கடினமான சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்கும் திறனை அளிக்கும். அந்த நம்பிக்கை கடினமான சூழ்நிலையை எளியதாக மாற்றியமைக்கும்.
No comments:
Post a Comment