Thursday, October 12, 2017

தலையங்கம்

பட்டாசு இல்லாத தீபாவளியா?


அடுத்த சில நாட்களில் தீபாவளி திருநாள் இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களாலும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

அக்டோபர் 12 2017, 03:00 AM

அடுத்த சில நாட்களில் தீபாவளி திருநாள் இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களாலும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து, தித்திக்கும் பலகாரங்களை சாப்பிடுவதும், வண்ண வண்ண மத்தாப்புகளைக் கொளுத்தி வெடிகளை போடுவதும்தான். பட்டாசு இல்லாத தீபாவளி, தீபாவளியாக இருக்காது. ஆனால், இந்த ஆண்டு டெல்லியில் அதாவது, தேசிய தலைநகரப் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்ற காரணத்திற்காகத்தான் இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சுற்றுச்சூழல் பாதிப்புக்கு பட்டாசு விற்பனை மட்டும் காரணமல்ல. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் அறுவடைக்குப்பின் இருக்கும் காய்ந்த பயிர்களை எரிப்பதால் கிளம்பும் புகைகளால்தான் பெரிதும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. பட்டாசினால் 2 நாட்கள் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படலாம். இதுமட்டுமல்லாமல், பட்டாசு விற்பனைக்குத்தான் சுப்ரீம் கோர்ட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளதே தவிர, தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிப்பதற்கும், கொளுத்துவதற்கும் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. இதனால், டெல்லியில் பட்டாசு வாங்க முடியாவிட்டாலும், பக்கத்தில் உள்ள அண்டை மாநிலங்களில் பட்டாசு வாங்கி வெடிக்க வகை இருக்கிறது. இதை சாக்காக வைத்துக்கொண்டு, சீனபட்டாசுகள் ஊடுருவவும் வாய்ப்பு இருக்கிறது.

டெல்லியில் விற்பனையாகும் பட்டாசுகள் தமிழ்நாட்டில் உள்ள சிவகாசியில் இருந்துவரும் பட்டாசுகள்தான். சிவகாசியில் உற்பத்தியாகும் மொத்த பட்டாசுகளில் 20 முதல் 25 சதவீதம்வரை டெல்லியிலும், அதன் சுற்றப்புற பகுதிகளிலும்தான் விற்பனையாகிறது. எனவே, சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கும் இது பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே, 28 சதவீத சரக்கு சேவைவரியால் பெரிதும் பாதிப்படைந்துள்ள, உற்பத்தி குறைந்துள்ள சிவகாசி பட்டாசு தொழில், இந்தத்தடையால் மேலும் பாதிக்கப்படும். சிவகாசிப் பகுதி ஒரு வறண்டபகுதியாகும். இங்கு விவசாயமோ, வேறுதொழில்களோ இல்லாதநிலையில், காலம்காலமாக பட்டாசுத் தொழில்தான், ஏறத்தாழ 8 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பையும் அளித்து அவர்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. சுப்ரீம் கோர்ட்டு இந்த ஆண்டு தடைவிதித்துவிட்டது. மற்ற மாநில ஐகோர்ட்டுகளிலும் பட்டாசுக்கு எதிர்ப்பாளர்கள், இதுபோல வழக்குகளை தொடர்ந்தால், நிச்சயமாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முன்உதாரணமாக வைத்து, எல்லா ஐகோர்ட்டுகளிலும் பட்டாசுக்கு தடைவிதிக்க வாய்ப்பு இருக்கிறது.

தீபாவளி நேரத்தில் அதிகபட்சமாக 2 நாட்கள்தான் மக்கள் பட்டாசுகளை வெடிப்பார்கள். இந்த 2 நாட்களுக்கு தடைவிதிப்பதன் மூலம் ஆண்டு முழுவதும் நடக்கும் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும். இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரம் பட்டுப்போய்விடும். இந்தத்தொழில் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பையும், அதை விற்பனை செய்ய கொண்டுசெல்லுதல், விற்பனை செய்யும் வியாபாரிகள், அவர்கள் கடையில் பணிபுரியும் தொழிலாளர்கள் என்று மறைமுக வேலைவாய்ப்புகளையும் நிறையபேருக்கு தருகிறது. அரசாங்கத்துக்கு இது வருமானம் ஈட்டித்தரும் தொழிலாகும். இதுமட்டுமல்லாமல், இந்துக்களை பொறுத்தமட்டில், தீபாவளி என்பது தீபத்திருநாள். அன்று பட்டாசு கொளுத்துவது என்பது கொண்டாட்டத்தில் பிரிக்கமுடியாத ஒரு பகுதியாகும். எவ்வளவு ஏழை குடும்பமாக இருந்தாலும் குழந்தைகள் ஒரு மத்தாப்பாவது கொளுத்துவார்கள். பட்டாசு இல்லாத தீபாவளி நிச்சயமாக ஜொலிக்காது. ஒரேயடியாக பட்டாசு விற்பனையை தடைசெய்வதற்கு பதிலாக, உற்பத்தியாளர்களை சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பட்டாசுகளை எதிர்காலத்தில் தயாரிப்பதற்கான வழிமுறைகளை காணவேண்டும் என்று உத்தரவிடலாம். பட்டாசு வெடிக்கும் நேரத்தையும் கட்டுப்படுத்தலாம். உலகில் மேல்நாடுகளில் தேசிய திருவிழா நாட்களிலும், பல்வேறு உலக விளையாட்டுப்போட்டிகளிலும் வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், மத்திய அரசாங்கம் உடனடியாக ஒரு சீராய்வு மனுவை வியாபாரிகளைப்போல சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து, பட்டாசு தொழிலையும், அதை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்புகளையும் பாதுகாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...