Sunday, October 15, 2017

வேண்டும் வரமளிப்பார், வெள்வேல மர நிழலில் வீற்றிருக்கும் திருவேற்காடு வேதபுரீஸ்வரர்!
சிவராஜ்

திருவேற்காடு என்றவுடன் தேவி கருமாரி அம்மன் கோயில்தான் நினைவுக்குவரும். அதே திருவேற்காட்டில் பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.




63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த மண். இத்தல முருகப்பெருமான், அருணகிரிநாதரின் 'திருப்புகழ்' பாடல் பெற்றவர். தொண்டை மண்டலத் தேவாரத் திருக்கொயில்களில் 23 வது கோயிலாகத் திகழ்கிறது. 12 பாடல்களால் திருஞான சம்பந்தர் பாடித் துதித்த திருவிடம்; சேக்கிழார் போற்றிய திருத்தலம் எனப் பல சிறப்புகளைக்கொண்டது இந்த வேதபுரீஸ்வரர் கோயில்.

நான்கு வேதங்களும் வேல மரங்களாக மாறி நின்று ஈசனை வழிபட்டக் காரணத்தால், வேற்காடு (வேல் காடு) என்று பெயர் பெற்றது. தேவி கருமாரி அம்மன் கோயிலிலிருந்து தென்மேற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி இருக்கும் கோயிலுக்கு முன்பாகப் புதுபிக்கப்பட்டிருக்கும் திருக்குளம்.

திருமணக் கோலத்தில் காட்சி

ஐந்து நிலை ராஜகோபுரத்தைத் தரிசித்து உள்ளே நுழைந்தால், உயர்ந்து விரிந்த கூரை ரம்மியத்தைக் கொடுக்கிறது. பீடத்துடன் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரம் கைகூப்பி வணங்கச் செய்கிறது. கருவறையை நோக்கி இருக்கும் நந்தி சிறிதாக- அழகாக அமைக்கப்பட்டுள்ளது. பிரதோஷத் தினத்தில் நந்தி அபிஷேகம் காண பக்தர்கள் பெருமளவில் கூடுவார்கள்.

சிவலிங்கத்தின் பின்னால் கிழக்கு நோக்கி ஈசனும் அம்பாளும் திருமணக்கோலத்தில் அகத்திய முனிவருக்குத் திருக்காட்சி கொடுக்கும் தரிசனம் காண கண் கோடி வேண்டும். பக்தர்கள் அனைவரும் கருவறை வாயில்வரை அர்த்த மண்டபத்தில் நின்று இறைவனைத் தரிசிப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். சிவன் பார்வதியுடன் கணபதி எழுந்தருளிய சந்நிதி உள்ளது. மூலவரின் கருவறை விமானம் யானையின் பின்புறத் தோற்றம் (கஜபிருஷ்டம்) கொண்டது.



பைரவர் வழிபாடு

சந்திரர், சூரியர், தாமரை வடிவில் நவகிரகங்கள் உள்ளனர். பிராகாரத்தின் தென்புறத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிள்ளையாரைத் தனித் தனியாகத் தரிசிக்கலாம். சைவக் குரவர்கள் நால்வர், 63 நாயன்மார்கள் வரிசையாக எழுந்தருளியிருப்பது பரவசத்தைத் தருகிறது. மேற்குப் புறத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாய சோழன், சேக்கிழார், வடக்கே சண்டிகேஸ்வரர், நின்ற கோலத்தில் பிரம்ம தேவன், துர்க்கை முதலிய தெய்வங்களும் எழுந்தருளி இருக்கின்றனர்.

கருவறையின் பின்புறத்தில் லிங்கோத்பவர் அருள்புரிகிறார். மாத சிவராத்திரி நாள்களில் மாலை வேளையில் அவருக்கு 5 நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்க்கை இனிதாகும். கல்வி, ஞானம், செல்வம், இறையருள் கிட்டும்.

பாலாம்பிகை தெற்கு நோக்கியபடி தனிச் சந்நிதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். அருகில் நடராஜர், சிவகாமி அம்பாள் உள்ளனர். அம்பிகை சந்நிதி அருகில் பைரவர் உள்ளார். இவரை சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டுவந்தால் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, 'அர்த்தாஷ்டமச் சனி' பாதிப்புகள் விலகும்.

சனீஸ்வரருக்குத் தனிச் சந்நிதி பெரிதாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர், மூர்க்க நாயனாருக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

பரசுராமர் பூஜித்த ஈசன்

அக்கினி, எமன், நிருதி, வாயு, வருணன் மற்றும் குபேரன் ஆகியோரும், ராமலிங்க அடிகளாரும் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். பாரதப் போரில் பங்கேற்க விரும்பாத பலராமர், தீர்த்த யாத்திரை சென்றபோது திருவேற்காட்டில் பூஜித்தார்.

அவர் பூஜித்த லிங்கம், 'பலராமேசர்' என்ற திருநாமத்துடன் திரிபுராந்தகேச லிங்கத்துக்கு தெற்கில் அமைந்துள்ளது. இதேபோல் பரசுராமரும் திருவேற்காட்டுக்கு வந்து இத்தல மந்தாகினி தீர்த்தத்தில் நீராடி, வேல மரத்தடியில் எழுந்தருளியுள்ள சிவலிங்கத்தை பூஜித்துள்ளார். பின்பு சிவலிங்கம் ஒன்றை அமைத்தும் வழிபட்டுள்ளார். அவர் பூஜித்த லிங்கத்தை பரசுராமேஸ்வரர்' என்று அழைக்கின்றனர்.

தசீசி என்ற சிவனடியாரின் சக்தியால் திருமாலின் சக்கரம் தனது வலிமையை இழந்தது. திருவேற்காட்டு வேதபுரீஸ்வரரை வழிபட்டு திருமால், தனது சக்கராயுதத்தின் வலிமையை மீண்டும் பெற்றார். திருமால் இத்தல ஈசனை வழிபட வந்தபோது, ஆதிசேஷன் எனும் பாம்பும் வந்து வழிபட்டது.

அப்போது, 'திருவேற்காடு மண்ணில் இருப்பவர்களைத் தீண்ட மாட்டேன்' எனக் கூறியதாம். எனவே, 'விஷம் தீண்டா பதி' என்றும் இந்தத் தலம் போற்றப்படுகிறது.



முருகர் வழிபட்ட பெருமான்

முருகப் பெருமான், சுப்பிரமணியராகக் காட்சியளிக்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர், சூரபத்மனைக் கொன்ற பாவம் நீங்க வேலால் கிணறு உருவாக்கி (வேலாயுதத் தீர்த்தம்), இத்தலத்தில் உள்ள வேதபுரீஸ்வரரை வழிபட்டார். அந்த 'ஸ்கந்த லிங்கம்' முருகனுக்கு முன்பாகவே வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது கார்த்திகை மாத ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நீராடி வேதபுரீஸ்வரரை வழிபட்டால் தோல் சம்பந்தமான நோய்கள் அகலும் என்பர்.

பிராகாரத் தூணில் ஐந்துதலை நாகம் குடைப்பிடிக்க, காலடியிலும் நாகத்துடன் தேவி கருமரியம்மன் வீற்றிருக்கும் சிற்பம் சிறப்பு வாய்ந்தது.

பூவுக்குப் பதில் கண்

ஈசனுக்குத் தன் கண்ணைக் கொடுத்த கண்ணப்பநாயனாரின் பக்தி பலருக்கும் தெரியும். திருமால் தன் கண்ணைத் தந்த கதை தெரியுமா?

திருமாலுக்கும் ததீசி எனும் சிவபக்தருக்கும் பகை ஏற்பட்டதாம், இருவருக்குமான சண்டையில், திருமாலின் அனைத்துப் பாணங்களும் வீணாகின. ததீசியை அவரது சிவபக்தி காத்தருளியது.

இறுதியாக, சக்கராயுதத்தைப் பிரயோகித்தார் திருமால். அதிலிருந்தும் ததீசி தப்பினார். பிறகு, திருமால் சிவபூஜையில் ஈடுபட்டார், தினமும் ஆயிரம் மலர்களால் வழிபட எண்ணினார்.

ஒருநாள்... பூ ஒன்று குறைந்துபோக, தன் கண்ணைப் பெயர்த்து ஆயிரமாவதுப் பூவாக சிவனாருக்குச் சமர்ப்பித்தார். அந்த நிமிடமே சிவனார் திருக்காட்சி தந்தார். இழந்த கண்ணையும் தந்து 'சுதர்சன கண்ணன்' என்றும் பெயர் சூட்டி அருள்புரிந்தார் என்கிறது தலபுராணம்.

இதைக் கண்டு மனமுருகிய ஆதிசேஷன், `எங்கள் திருமால் ரத்தம் சிந்திய இத்திருவிடத்தில், எவரையும் தீண்ட மாட்டோம்; எவருக்கும் தீங்கு செய்ய மாட்டோம்' என உறுதி ஏற்றதாம். திருமால் அப்போது சிவபூஜை செய்த திருவிடம்... திருவேற்காட்டின் ஒரு பகுதியான கண்ணப்பாளையம் ஆகும்.

தெய்வீக மரத்தின் மகிமை

வெளிப்பிராகாரத்தில், கம்பீரமாக நிற்கிறது வெள்வேலமரம். கும்ப ராசியிலும் சனிக்கிழமை மற்றும் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18 வரையிலான தினங்களில் பிறந்தவர்கள் போற்றிக் கொண்டாட வேண்டிய தெய்வீக ஸ்தல விருட்சம்.

இவர்கள் இந்த மரத்தைக் கட்டிப்பிடித்தாலோ இதன் நிழலில் அமர்ந்தாலோ மரம் சேமித்து வைத்திருக்கும் மின்காந்த அலைகள் அவர்களின் உடலில் மாபெரும் சக்தியை ஏற்படுத்தும் என்கின்றன வானவியல் - மூலிகை சாஸ்திரங்கள்.

எப்படிச் செல்வது?

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் கோவிலுக்குச் செல்லலாம். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேலப்பன்சாவடியிலிருந்து 2 கிலோமீட்டர் சென்றால் திருவேற்காடு வரும். அங்கு பஸ் நிலையத்தின் வடக்கே கருமாரி அம்மன் கோயிலும் மேற்கே வேதபுரீஸ்வரர் கோயிலும் உள்ளன.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...