Sunday, October 15, 2017


மனோலம், தேன்குழல் முறுக்கு... பாஸ்போர்ட் எடுத்த செட்டிநாட்டு பலகாரங்கள்!

vikatan
பாலமுருகன். தெ
சாய் தர்மராஜ்.ச

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நாட்டரசன்கோட்டையில், செட்டிநாட்டுப் பலகாரம் என்றாலே தனி மவுசுதான். இதற்கென்றே தனி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். செட்டிநாடு, கட்டடக்கலைக்கு மட்டும் புகழ்பெற்றதல்ல; பலகார வகைகளுக்கும்தான். கடல் தாண்டி விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறது இதன் பெருமை. அந்த அளவுக்குப் புகழ்பெற்று விளங்கிக்கொண்டிருக்கிறது செட்டிநாட்டுப் பலகாரம். இதன் பட்டியலில் தேன் குழல், முறுக்கு, கைமுறுக்கு, சீப்புச்சீடை, பாசிப்பருப்பு உருண்டை, பொடிசீடை, மனோலம், அதிரசம், எள் அடை என ஸ்பெஷல் அயிட்டங்கள் பட்டியல் நீண்டுகொண்டேபோகிறது.

செட்டிநாட்டுப் பலகாரத் தோற்றம்:

அந்தக் காலத்தில் செட்டியார் வீடுகளில், பலகாரம் செய்வதற்கென்றே ஆள்கள் இருப்பார்கள். அந்த மாதிரியான ஆள்களுக்கு ஒவ்வொரு பலகாரம் செய்வதற்கான செய்முறைகளைக் கற்றுக்கொடுத்தார்கள். செட்டியார் வீடுகளில் கருப்பட்டிப் பணியாரம், குழிப்பணியாரம், வெள்ளை பணியாரம், மசாலா பணியாரம் எனத் தயார்செய்வது வழக்கமான ஒன்று. அப்போதைய ஃபேமஸ், கந்தரப்பம். அதாவது, அரிசி-பருப்பு வகையுடன் வெந்தயம் சேர்த்து செய்யப்படும் பலகாரம். இவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவைதான் இன்றைக்குப் பல்வேறு வகையான செட்டியநாட்டுப் பலகாரங்கள்.



இங்கு தயாரிக்கக்கூடிய பலகாரங்கள் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். எனவேதான், வெளிநாடுகளுக்கு நம்பிக்கையோடு அனுப்பிவருகிறார்கள். அதற்கான ரகசியம் வேறொன்றுமில்லை. எல்லாமே பலகாரம் செய்யும் மாஸ்டர் கையில்தான் இருக்கிறது. சரியான கைப்பக்குவம். அவ்வளவே! அதே நேரத்தில் சுத்தமான ரீஃபைண்ட் ஆயில். ஒருமுறை பயன்படுத்தியதை மறுமுறை பயன்படுத்துவதில்லை. இதுவும் தரத்துக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.



பலகாரங்களின் அழகு மகிமை:

செட்டிநாடுகளில் தயாரிக்கப்படும் பலகாரங்கள், கலைநயத்துடன் காட்சியளிக்கும். கைசுத்து முறுக்கைப் பார்த்தாலே தெரியும், அதன் அழகும் கலையும். செட்டிநாடுகளில் தயாரிக்கும் முறுக்கும் அதிரசமும் மொறுமொறுப்பாகவும் மெதுவாகவும் இருக்கும். இங்கு தயாரிக்கப்படும் பலகாரங்கள், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் வகையில் இருக்கும். உடல்நலத்துக்குக் கெடுதல் தராது.

உலகம் சுற்றும் வாலிபன்:

செட்டிநாட்டுப் பலகாரங்கள், சென்னை, கோவை, மதுரை என தமிழகத்தில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என தமிழர்கள் இருக்கும் எல்லா நாடுகளுக்கும் பயணமாகிக்கொண்டிருக்கின்றன. தீபாவளி நேரம் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் பலகாரங்கள் செய்யும் பணி, மும்முரமாக காரைக்குடி சுப்பிரமணிபுரத்தில் உள்ள வீட்டில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பெரும்பாலும் வீடுகளில்தான் இந்தப் பலகாரங்கள் பெரிய அளவில் தயாரிக்கப்படுகின்றன. அதன் உரிமையாளரான அலமேலுவைச் சந்தித்தோம்.



மனோலம்:

இந்தப் பலகாரம், நகரத்தார் வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும். திருமணத்துக்கான சீர்வரிசையில் மனோலம், கைசுத்து முறுக்கு இவை இரண்டும்தான் இடம்பெற்றிருக்கும். மனோலம் என்றதும், பலருக்கும் புரியாது. பருப்புவகைகள், பொரிகடலை, கொப்பரைத்தேங்காய், வெல்லம், நெய் இவையெல்லாம் சேர்த்து செய்யக்கூடியதுதான் `மனோலம்'.

தேன்குழல்:

முறுக்குவகைகளில் ஒன்று. குழல் போன்று இருக்கும். உளுந்தைப் பக்குவமாக வறுத்துக்கொள்ள வேண்டும். அரிசியைக் கழுவி ஊறல்கொடுக்காத வகையில் அரைத்து நெய் சேர்த்து செய்யக்கூடிய முறுக்கு இது. மற்ற முறுக்குகளைவிட மிருதுவாக இருக்கும்.

சீப் சீடை:

ரொம்பச் சுவையானது இது. உளுந்தைப் பச்சையாகவும் பொன்னிறமாகவும் மிதமான பக்குவத்தில் மாவாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, அரிசி மாவோடு தேங்காய்ப்பால் ஊற்றி தேவையான அளவுக்கு உப்புச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.



பாசிப்பயறு மாவு உருண்டை:

பொரிகடலை மாவு உருண்டை, ரவா உருண்டை இந்த இரண்டும் எல்லா இடங்களிலும் கிடைக்கும். ஆனால், பாசிபயறு மாவு உருண்டை நாங்க செய்யுறது மாதிரி வேறு எங்கேயுமே கிடைக்காது. இந்த உருண்டைகளை, குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. உடல்நலத்துக்கும் ரொம்ப நல்லது.

சின்ன சீடை:

இது ஸ்பெஷலான பலகாரம். சீடை ரொம்பப் பொடிசு பொடிசாக இருக்கும். இந்தச் சீடையை ஒரு வயசு குழந்தைகள் முதல் 90 வயசு பல் இல்லாத கிழவன் வரைக்கும் சாப்பிடக்கூடியவகையில் தயாரிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு வாயில் போட்டவுடனேயே கரைந்துவிடும். இது ரொம்பச் சுவையாக இருப்பதால், எல்லோருமே விரும்பிச் சாப்பிடுவாங்க. கேட்டு வாங்கிட்டுப் போறாங்க.

இந்த வருஷம் வாடிக்கையாளர்கள், அனைத்து வகையான பலகாரங்களும் சேர்த்து கிஃப்ட் பாக்ஸ் போடச் சொல்லியிருக்கிறார்கள். அது பற்றியும் யோசித்துக்கொண்டிருக்கிறோம்'' என்கிறார் அலமேலு.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...