Sunday, October 15, 2017


இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக’ தீபாவளியை மிஸ் பண்றோம்ல! #DiwaliNostalgia

சக்தி தமிழ்ச்செல்வன்

Chennai:

சாதாரண நாள்களைப்போல இல்லாமல், பண்டிகை தினங்களுக்கு தனி மவுசு இருக்கத்தான்செய்கிறது. மற்ற எல்லா பண்டிகைகளைவிடவும் தீபாவளிப் பண்டிகை மக்கள் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. எண்ணெய்க் குளியல், இட்லி, கறிக்குழம்பு, அதிரசம், முறுக்கு, புதுத் துணி, பட்டாசு, சுவீட் பாக்ஸ் என ரகளையான கொண்டாட்டங்கள் அரங்கேறும். தீபாவளிக்கான ஷாப்பிங்குகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் வேளையில், சற்று ரிலாக்ஸாக சிறுவயதில் நாம் கொண்டாடிய தீபாவளியை ரீவைண்ட் செய்ய நம் மனதின் மத்தாப்புகளைப் பற்றவைப்போம்...



அது ஒரு `பொட்டுவெடி'களின் காலம். தீபாவளி சீஸன் ஆரம்பிப்பதன் அடையாளமே சிறு பெட்டிக்கடைகளின் முன் ஒரு ரேக்கில் துப்பாக்கி, சுருள் கேப் (பொட்டுவெடி), சீனிவெடி இவை அடங்கிய ஓர் அட்டை தொங்குவதுதான். அதைப் பார்த்துவிட்டு பள்ளிகளில் நம் `தோஸ்த்'களிடம் அதைப் பற்றி சிலாகித்துக் கூறுவோம். பிறகு `நாங்கனாப்புல யாராம்' என ஆளாளுக்கு, `டேய்... இந்த வெடி அதைவிட பயங்கரமா வெடிக்கும்டா' எனக் கொளுத்திப்போடுவார்கள். ஒருவழியாக அந்தப் பொதுக்கூட்டம் `எல்லாரும் சாயங்காலமே துப்பாக்கி வாங்குறோம்' என்ற தீர்மானத்துடன் முடிவடையும். அப்பாவிடம் அடம்பிடித்து துப்பாக்கியும் சுருள் கேப்பும் வாங்கி அன்றே வெடித்துத் தீர்ப்போம். துப்பாக்கி தொலைந்தோ, உடைந்தோ போகிறபோது, சுருள் கேப்பை கல் மேல் விரித்துவைத்து இன்னொரு கல்லால் உரசி வெடிக்கச்செய்வோம். அந்த நிமிடம்தான் நாம் நம்மை `ஹீரோவாக' உணருவோம்.



வெடிக்கு அடுத்தபடியாக நம்மை ஈர்ப்பது புத்தாடைகள். அதுவும் நம் நண்பர்கள் புதுத்துணி வாங்கிவிட்டால் நாமும் நம் அப்பாக்களை புதுத்துணி வாங்கித் தரச் சொல்லி நச்சரிக்கத் தொடங்கிவிடுவோம். ஒரு சுபயோக சுபதினத்தில் நமக்கு புதுத்துணி கிடைத்துவிட, தீபாவளி வரும் வரை அவ்வப்போது அதை நுகர்ந்துபார்த்து `புதுத்துணி வாசனை' சுகிப்போம். தீபாவளிக்கு முன்பாக அம்மாக்கள் முறுக்கு சுடும்போது மாவுகளை, முறுக்குகளை காகம் கொத்திச் செல்லாமல் பொறுப்பான பிள்ளையாக காகம் விரட்டுவோம். அப்பாவின் கைகளைப் பற்றிக்கொண்டு கடைவீதிகளில் வெடிமருந்து வாடை வீச வெடி வாங்கியிருப்போம். குறிப்பாக, இரவு நேரங்களுக்கு உகந்த கம்பி மத்தாப்பு, சங்குச்சக்கரம், புஸ்வாணம் எனப் பல வெடிகள் வாங்குவோம். கூடுதலாக நமது வீரபராக்கிரமத்தைக்காட்ட ஒரு சீனிவெடி அல்லது மிளகாய்வெடி வாங்கிக்கொள்வோம். தீபாவளி அன்று சட்டைக்காலரின் நுனியில் மஞ்சள் தடவிய புதுத்துணி மாட்டிக்கொண்டு அத்தை, மாமா வீடுகளுக்குச் சென்று `வசூல் வேட்டை' நடத்துவோம். பிறகு, சீனிவெடிகளை நீண்ட பத்திக்குச்சிகொண்டு ஓடுவதற்குத் தயாரான நிலையில் பற்றவைப்போம். இரவில் நம்முடைய வெடிகளை எல்லாம் வெடித்துத் தீர்த்துவிட்டு, நண்பர்களுடன் சேர்ந்து மொட்டைமாடியில் நின்று ராக்கெட்டுகள் மேலெழுந்து சிதறும்போது வரும் வண்ணங்களை ரசித்திருப்போம்.



`சரஸ்வதிவெடி'களின் காலம்: கொஞ்சம் வளர்ந்த பிறகு, அம்மா முறுக்கு சுடும்போது காகம் ஓட்டாமல் கிரிக்கெட் விளையாடச் சென்றுவிடுவோம். வெடிகளின் பட்டியலில் கம்பி மத்தாப்பு, சங்குச்சக்கரம், புஸ்வாணம் போன்ற இரவு நேர வெடிகளின் அளவு குறைந்திருக்கும். தெளசண்ட்வாலா, லட்சுமிவெடி, சரஸ்வதிவெடி போன்ற `லாஸ்ட் பெஞ்சு' வெடிகள் நிறைய வாங்கிக்கொள்வோம். நம் தெருவில் இருக்கும் நமக்குப் பிடித்த பெண் வெளியே வரும் நேரம் பார்த்து வெடிகளை கையில் பிடித்துத் தூக்கிப் போட்டு வெடிக்கச்செய்வோம் (வெடிகளை கையில் பிடித்தோ, தூக்கிப் போட்டோ வெடிப்பது அபாயமானது). அன்று மாலை 6 மணியளவில் `இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக' என்ற வார்த்தைகளோடு போன தீபாவளிக்கு முந்தய தீபாவளி அன்று வெளியான திரைப்படத்தை ஒளிபரப்ப, நாமும் அதை அசராமல் காண்போம்.

தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்லும் நாளில், தீபாவளி அன்று அணிந்திருந்த புதுத்துணியையே அணிந்து வரச் சொல்வார்கள். அந்தப் புதுத்துணியை அணிந்துகொண்டு பள்ளிக்குச் செல்லும்போது எல்லோருமே நம்மையும் நம் டிரஸையுமே பார்ப்பதுபோன்ற ஒரு தோரணையயில் வலம் வருவோம்.



`புதுப்படங்களின்' காலம்: கல்லூரி நாள்களில் அப்பாவிடம் பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு நண்பர்களுடன் சென்று நாமே புதுத்துணி எடுத்துக்கொள்வோம். வெளியூர்களில் படிக்கும் நண்பர்கள் அனைவரும் ஒன்றாகச் சந்திக்கும் வாய்ப்பு, தீபாவளி போன்ற நீண்ட விடுமுறையின்போது மட்டுமே ஏற்படும். அதைக் கொண்டாடும் பொருட்டு, நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தீபாவளி அன்று வெளியான புதுப்படத்தைப் பார்த்துவிட்டு வருவோம்.

அந்தச் சமயங்களில் யாராவது வெடி வெடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால், `இவன்களுக்கு வேற வேலையே இல்லைடா!' என்றபடி கடந்து செல்வோம். வெடி வாங்குவது, வெடிப்பது போன்றவை எல்லாம் சிந்தனையில்கூட வராது. வேலைக்குச் சென்ற பிறகு புதுத்துணி எடுப்பதைவிட தீபாவளித் தள்ளுபடியில் ஏதாவது புது மொபைலையோ அல்லது புது பைக்கையோ வாங்குவதில்தான் ஆர்வமிருக்கும்.

நம் அப்பாக்கள், தீபாவளிக்கு வீட்டில் உள்ள அனைவருக்கும் புதுத்துணிகள் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவருக்கு மட்டும் புதுத்துணிகள் வாங்காமல் `எனக்கு இருக்கிற துணி பத்தலையா... எதுக்கு புதுத்துணி?' என்பார். இன்று நம்மில் பலர் தீபாவளிக்கு ஊருக்குப் போகையில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் புதுத்துணி எடுத்துவிட்டு நமக்கு எடுக்காமல் இருப்போம். அம்மாவோ, அப்பாவோ `ஏன்டா, உனக்கு எதுவும் துணி எடுக்கலையா?' எனக் கேட்கும்போது, `எனக்கு எதுக்கு புதுசு? இருக்கிறதை போட்டாலே போதும். வேணும்னா, அப்புறமா எடுத்துக்குறேன்' என்போம். இப்படித்தான் தலைமுறை தலைமுறையாகப் பரிணமிக்கிறது தீபாவளி!

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...