Monday, October 9, 2017


வாக்கி டாக்கி ஊழல் ஓவர் ஓவர்' - மவுனம் காக்கும் தமிழக அரசு

vikatan.com



தமிழகத்தில், அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது வைக்கப்படும் முறைகேடு புகாரில் இது லேட்டஸ்ட்! 'காவல் துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் வாக்கி டாக்கி கொள்முதல் செய்த விவகாரத்தில், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டிருக்கிறார்.


உள்துறை செயலர் கடிதம்

ஊடகத்தில் வந்த செய்தியை அடுத்து இப்போது இந்த விவகாரம் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் செய்யும் அளவுக்கு சென்றிருக்கிறது. ஏற்கெனவே, குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட டி.கே. ராஜேந்திரன் மீது மீண்டும் ஒரு புகார் கூறப்பட்டிருக்கிறது.

உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, செப்டம்பர் 23 ஆம் தேதியிட்டு டி.ஜி.பி-க்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 11 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டிருக்கிறார்.

காவல்துறையை நவீன மயமாக்குவதற்கு அரசு சார்பில், 47.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், வாக்கி டாக்கி வாங்குவதற்கு 83.45 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டது ஏன்? ஒதுக்கப்பட்ட நிதியைவிட இரண்டு மடங்கு தொகைக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டது ஏன்? டெண்டரில் பங்கேற்ற 'மோட்ரெல்லா இந்தியா' என்ற ஒரே ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டிருப்பது இதன் உண்மைத் தன்மையை சந்தேகிப்பதாக இருக்கிறது. இந்த நிறுவனம் டெண்டருக்கு விண்ணப்பிக்கும்போது, வாக்கி டாக்கி கருவிகளை இறக்குமதி செய்வதற்கு உரிய முகவர் உரிமை லைசென்ஸ் பெற்றிருக்கவில்லை. எனினும் அந்த நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

டெண்டர் விதிமுறை மீறல்


இதன் தொடர்ச்சியாக ஜூலை மாதக் கடைசியில்தான், 'இந்த லைசென்ஸை நாங்கள் வாங்கி விடுகிறோம்' என்று உறுதி செய்யும் ஆவணத்தைத் தாக்கல் செய்திருக்கின்றனர். எனவே, டெண்டர் விண்ணப்பம் செய்பவர்கள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள் இல்லாமல் எப்படி இந்த நிறுவனத்துக்கு டெண்டர் தரப்பட்டது என்பது குறித்தெல்லாம் விளக்கம் அளிக்க வேண்டும்.டெண்டருக்கு விண்ணப்பித்த மோட்ரெல்லா நிறுவனம், டெண்டருக்கான விதிமுறைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருக்கிறார்களா? அந்த நிறுவனத்துக்கு டெண்டர் இறுதி செய்யும் முன்பு அரசிடம் தெரிவிக்கப்பட்டதா... என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். டெண்டருக்கு விண்ணப்பித்த ஒரே ஒரு நிறுவனத்துக்கு எந்த விதிமுறையின் கீழ் டெண்டர் வழங்கப்பட்டது என்றும் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், இந்த டெண்டரில், ஜி.எஸ்.டி வரியால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். இப்படி டி.ஜி.பி-க்கு விளக்கம் கேட்டு உள்துறை செயலாளர் கடிதம் எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தில் உள்ள தகவல்கள் லீக் ஆனதால்தான் இந்த விவகாரமே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு தொடரும்

இந்நிலையில், புதிய ஆளுநர் புரோஹித்தை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'வாக்கி டாக்கி முறைகேடு தொடர்பாக டி.ஜி.பி-மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது குறித்து தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான ஆர்.எஸ் பாரதியிடம் பேசினோம். "தளபதி மு.க ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில், 'தேவையான நடவடிக்கை எடுக்கவும்' என்று கவர்னர், தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். அதன்பின்னர், 'என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம்' என்ற தகவலை தலைமைச் செயலாளர், ஆளுநருக்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு இதுபோன்று ஆளுநருக்கு விளக்கம் அளிக்காது என்றே நினைக்கிறேன். அடுத்தக்கட்டமாக தி.மு.க இது குறித்து நீதிமன்றத்தில் முறையிடும். நீதிமன்றத்தில், வழக்குத் தொடரும்போது, 'நீங்கள் ஆளுநரிடம் புகார் செய்திருக்கிறீர்களா...' என்று கேட்பார்கள். அதனால்தான் இப்போது ஆளுநரிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அரசுத் தரப்பில் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், உள்துறையைக் கையில் வைத்திருப்பவர் என்ற முறையில், எடப்பாடி பழனிசாமி தலையிட்டாரா என்பதையும் அரசு விளக்க வேண்டும்" என்றார்.

மூன்று மடங்கு அதிக விலை

இது குறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோவிடம் கேட்டோம். "உள்துறை செயலாளர் தெளிவாக கேட்டிருக்கிறார்.டெண்டரில் ஒன்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்காவிட்டால், ரத்து செய்து விட்டு மீண்டும் டெண்டர்விட வேண்டும். அந்த நிறுவனத்துக்கு லைசென்ஸ் இல்லை. லைசென்ஸ் இல்லாத நிறுவனத்துக்கு ஏன் கொடுக்க வேண்டும்? வாக்கி டாக்கியின் விலை அதிகபட்சமே 47 ஆயிரம் ரூபாய்தான். 50 ஆயிரம் என்று வைத்துக்கொண்டால்கூட, ஒரு வாக்கி டாக்கியை 2.08 லட்சம் ரூபாய்க்கு இவர்கள் வாங்கியிருக்கின்றனர். மொத்தம் 4 ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்கியிருக்கின்றனர். இந்தக் கூடுதல் தொகைக்கு 16 ஆயிரம் வாக்கி டாக்கிகளை வாங்கியிருக்கலாம்.

அடிப்படையான விஷயங்களைக் கேட்கிறார் உள்துறைச் செயலாளர். ஆனால், இப்போது உள்துறை செயலாளரையே மாற்றப்போவதாகச் சொல்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களுக்கு வளைந்து கொடுப்பதால்தான் டி.ஜி.பி-க்கு பணி நீட்டிப்புக் கொடுக்கின்றனர். அவருடைய கேடரில், அவரைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் டி.ஜி.பி-யாக ஆகக்கூடிய தகுதியில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை எல்லாம் மீறித்தான் இவருக்கு பதவியைக் கொடுத்திருக்கின்றனர்.

ஜெயலலிதா ஆட்சியில் உளவுத்துறையில் கண்ணப்பன் இருந்தார். அவருக்கு பணி நீட்டிப்பு கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால், அவரோ 'தனக்கு பணி நீட்டிப்பு வேண்டாம்' என்று சொல்லிவிட்டார். ஆனால், இவருடைய நேர்மையை என்னவென்று சொல்வது? ஆளுநர் முறைப்படி, எதிர்க்கட்சிக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். உள்துறைச் செயலாளர் கேள்வி கேட்டிருக்கிறார். டி.ஜி.பி தலைமையில் இதை விசாரணை செய்யக்கூடாது. ஏனெனில், இந்த மாதிரி சூழலில், சம்பந்தப்பட்டவரே விசாரணை நடத்தினால் உண்மை எப்படி வெளியே வரும்?

'ஏன் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது?' என்று தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் கேட்க வேண்டும். ஆனால், ஆளுநர் தன்னிச்சையாக அப்படிச் செய்வாரா என்று தெரியவில்லை. தலைமைச் செயலாளரிடம் அனுமதி வாங்கித்தான் டெண்டர் விட வேண்டும். இப்படி இருக்கும் சூழலில், தமிழக அரசே இதுகுறித்து விசாரணை செய்யக்கூடாது. மக்கள் வரிப்பணம்தான் இதில் கொள்ளயடிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

வழக்கம்போல இந்த விவகாரத்திலும் தமிழக அரசு, இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனமாக இருக்கிறது!

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...