Sunday, October 8, 2017

கரை புரளும் தீபாவளி உற்சாகம்... கூட்டம்... கொண்டாட்டம்!  கடை 

வீதிகளில் விறுவிறு வியாபாரம்!


தீபாவளியை முன்னிட்டு, கோவை மாநகர கடை வீதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது; தள்ளுபடி, சலுகை, இலவசம் என, நிறுவனங்கள் வாரி வழங்குவதால், வியாபாரம் உச்சத்தை எட்டியுள்ளது.வழக்கத்தை விட, இந்த ஆண்டில், ஐப்பசி முதல் நாளிலேயே தீபாவளி வந்து விட்டது. 

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து வந்ததால், செப்டம்பரிலேயே பண்டிகை உற்சாகம் களை கட்டத் துவங்கியது. கடந்த ஒரு வாரமாக, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், ராஜவீதி, டி.பி.ரோடு உள்ளிட்ட முக்கிய வர்த்தகப் பகுதிகளில், மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கே இடமின்றி, பொது மக்கள் தவித்து வருகின்றனர்.ஜவுளி நிறுவனங்கள், தங்கள் கடைகளின் முகப்புகளை பிரமாண்டமாக அலங்கரித்து, மக்களை வசீகரிக்கின்றன.

 ஓவியா சேலை, லெஹங்கா, விதவிதமான சுடிதார் என புதுப்புது டிசைன்களிலும், கவர்ச்சிகரமான வண்ணங்களிலும் ஆடைகளைக் குவித்து, பெண்களை ஈர்த்து வருகின்றன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டில், குழந்தைகளுக்கான ஆடைகள், அதிகளவில் இறங்கியுள்ளதாகக் கூறுகிறார் ஜவுளிக்கடை நிர்வாகி ஒருவர்.ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹோம் அப்ளையன்சஸ் என பல்வேறு நிறுவனங்களும், தள்ளுபடி, சலுகை மற்றும் பரிசுகளை வாரி வழங்கி வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு 'ஸ்லோகன்' போட்டி நடத்தி, அட்டகாசமான பரிசுகளை அள்ளித்தருகின்றன. இதனால், பொது மக்களுக்கு எந்தக் கடையில் எதை வாங்குவது என்பதில் பெரும் குழப்பமும் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும், எல்லாக் கடைகளிலும் கூட்டத்தைப் பார்க்க முடிகிறது.பல்வேறு கடைகளுக்கும் சென்று, 'ஷாப்பிங்' முடித்த பின், உறவுகள், நட்புகள் சகிதமாக, ஓட்டலில் சென்று சாப்பிடுவது, நமது மக்களுக்கு வாடிக்கையான விஷயம். அந்த வகையில், ஓட்டல்களிலும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

 கடந்த மாதத்தில், தொடர் மழை காரணமாக, பண்டிகை வியாபாரத்தைப் பார்க்க முடியாத சிறு வியாபாரிகள், சமீபத்திய நாட்களில் வியாபாரம் ஓரளவுக்கு நடப்பதால், நிம்மதிப் பெருமூச்சு அடைந்துள்ளனர்.ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பின், பல நாட்களாக இறங்கு முகத்தில் இருந்த வியாபாரம், கடந்த இரு வாரங்களாக மீண்டும் ஏறுமுகத்தில் இருப்பதாக வணிக நிறுவனங்கள் நடத்துவோர், மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில், வரும் வாரத்தில் வியாபாரம் உச்சத்தைத் தொடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., போன்றவற்றால் ஏற்பட்ட தேக்கநிலை மாறுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.

-நமது நிருபர்-

No comments:

Post a Comment

NEWS TODAY 19.10.2024