ஆர்.கே. நகர் தொகுதிக்கு டிச.31-க்குள் இடைத் தேர்தல்
By DIN | Published on : 13th October 2017 05:19 AM
சென்னைஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி தெரிவித்தார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். அவரது மறைவையடுத்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் சட்டப் பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அத்தொகுதியில் இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு, நிகழாண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.
இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் பணக் கட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் ஏப்ரல் 9-ஆம் தேதி அறிவித்தது. மேலும், உகந்த சூழல் வரும் போது இத்தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, ஆறு மாதங்களாக தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதியை தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி வியாழக்கிழமை அறிவித்தார். அப்போது, சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி, "இது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும்' என்றார்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலை விரைந்து நடத்தக் கோரி அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று நம்புவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment