Friday, October 20, 2017

தீபாவளி மது விற்பனை ரூ.240 கோடி : ரூ.90 கோடி சரிந்தது ஏன்?

தீபாவளி மது விற்பனை ரூ.240  கோடி : ரூ.90 கோடி சரிந்தது ஏன்?
தமிழகத்தில், தீபாவளியை ஒட்டி, இரண்டு நாட்களுக்கு, 500 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடக்கும் என, எதிர்பார்த்த நிலையில், 240 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகி உள்ளது. இது, 2016 தீபாவளியை விட, 90 கோடி ரூபாய் குறைவு.
தமிழக அரசின், 'டாஸ்மாக்' கடைகளில், ஆண்டு தோறும், தீபாவளிக்கு, பீர் மற்றும் மது வகைகள் விற்பனை அதிகம் இருக்கும். 2016 தீபாவளியை முன்னிட்டு, இரு தினங்களுக்கு, 330 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின. 
அதனால், இந்த தீபாவளிக்கு, 500 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை இருக்கும் என, டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்தது. ஆனால், 240 கோடி ரூபாய்கு மட்டுமே, மது விற்பனை நடந்துள்ளது.

இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமீபத்தில், மது வகைகள் விலை உயர்த்தப்பட்டும், விற்பனை பாதிக்கவில்லை. தீபாவளிக்கு, பணப்புழக்கமும் நன்கு இருந்ததால், 500 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. 
இதனால், 700 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், கடைகளில் இருப்பு வைக்கப்பட்டன.
தீபாவளிக்கு முந்தைய நாள் தான், மது விற்பனை நன்றாக இருக்கும். 
ஆனால், அன்று, 80 கோடி ரூபாயும், தீபாவளி நாளில், 160 கோடி ரூபாய் என, இரண்டு நாட்களில், 240 கோடி ரூபாய்க்கு தான் மது பானங்கள் விற்று உள்ளன. 2016 தீபாவளியின் போது விற்பனையான, 330 கோடி ரூபாயை ஒப்பிடும்போது, 90 கோடி ரூபாய் குறைவு.
தீபாவளிக்கு முதல் நாளான, 17ம் தேதி, இரவு வரை, மழை பெய்வது போல், மேகங்கள் சூழந்து காணப்பட்டன. முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், வழக்கமாக மதுக்கடைக்கு வருவோரும் வரவில்லை. புரட்டாசியை முன்னிட்டு, பல நாட்களாக, அசைவ உணவு சமைக்காதவர்கள், தீபாவளிக்கு அறுசுவை உணவு செய்தனர். இதனால், வீட்டை விட்டு, பலர் வெளியே வரவில்லை. இதுதவிர, சென்னை போன்ற நகரங்களில் இருந்து, எப்போதும் இல்லாத வகையில், பல லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனாலும், மது விற்பனை சரிந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY