Tuesday, October 17, 2017

குழந்தை மனம் அறிவோம்

By வசீகரன்  |   Published on : 17th October 2017 01:13 AM  |
குழந்தைகள்தான் வருங்காலத்தை ஆளப்போகிறவர்கள். எனவே நாட்டை நேசிக்கின்றவர்கள் குழந்தைகளையும் நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். 
குழந்தைகள் மீதான கவனம் அதிகப்படுத்தப்பட வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க வேண்டும். அவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக நாளை மின்னுவார்கள் என்பது திண்ணம்.
குழந்தைகள் மீது நாம் எதையும் திணிக்கக் கூடாது. குழந்தைகளோடு குழந்தைகளாக நாமும் மாற வேண்டும். குழந்தைகளை கோபித்துக் கொள்வது என்பது ஒரு வன்கொடுமை. பெற்றோர் தங்களுடைய சொந்த ஆசாபாசங்களை அவர்கள் மீது காட்டக் கூடாது.
குழந்தைகள் ஒன்றும் தெரியாதவர்கள் இல்லை. பலம் குறைந்தவர்களும் இல்லை. ஆற்றல் குன்றியவர்களும் இல்லை. பெரியவர்களின் முறையற்ற ஆளுமைகள்தான் அவர்கள் மூளையை மழுங்கடிக்கச் செய்கிறது. ஆற்றல் குன்ற வைக்கிறது.
பல நிலைகளில் குழந்தைகள் நமக்குச் சொல்லித் தருபவர்களாக இருக்கிறார்கள். உண்ணாவிரதம், மெளனவிரதம், காய் விட்டு ஒத்துழையாமை என காந்திய நெறிமுறை போராட்டங்களை எல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ளும் முறையை கடைப்பிடித்தவர்கள், உலகுக்கே சொல்லித் தந்தவர்கள் முதலில் அவர்கள்தான்.
குழந்தையை அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். அவ்வப்போது அமைதியான முறையில், இதனால் இதை இப்படிச் செய்ய வேண்டும். அதனால் அதை அப்படிச் செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதும். அவர்களது முன்னேற்றம் இயல்பாகவே வடிவமைக்கப்பட்டுவிடும்.
'நீ டாக்டராக வேண்டும்', 'என்ஜினியராக வேண்டும்', 'டான்ஸ் மாஸ்டராக வேண்டும்' என நமது நிராசைக் கனவுகளை எல்லாம் அவர்களது கனவாக்க முயலக் கூடாது. அது நம் கனவுகள் தானே தவிர, அவர்களது கனவுகள் அல்ல. 
நம் லட்சியங்களை அவர்களது லட்சியமாக்க வேண்டும் என நினைக்கக் கூடாது. குழந்தை தானே தனக்கான கனவு ஒன்றை கண்டுபிடித்துக் கொள்ளும். அந்தக் கனவு அக்குழந்தையின் எதிர்காலத்துக்கு கை கொடுக்கும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்கட்டும்.
குழந்தையின் மீது பிறமொழிகளை திணிக்காதீர்கள். முதலில் தாய்மொழியை நன்கு கற்றுக் கொடுங்கள். இயல்பான பேச்சு, இயல்பான செயல்பாடுகளே குழந்தையின் மனநலத்தைப் பாதுகாக்கும். ஏழு வயதுக்குப் பின்னரே குழந்தைக்கு பிற மொழிகள் அறிமுகம் ஆக வேண்டும். 
குழந்தை சில நாள்களிலேயே பிறமொழியை பேசிவிட வேண்டும் என்று எதிர்பார்த்தோம் என்றால் அது பேராசை மட்டுமல்ல, நாம் அந்தக் குழந்தையை வதை செய்கிறோம் என்றும் அர்த்தம்.
குழந்தை அழுது கொண்டே கற்கக்கூடாது. பள்ளிக்கூடம் இன்று விடுமுறை என்று ஒரு குழந்தை மகிழ்ச்சி அடைகிறது என்றால் அக்குழந்தை பள்ளிக்கூடத்தை கொடுமைக் கூடமாகப் பார்க்கிறது என்று தான் அர்த்தம். பள்ளிக்கூட விடுமுறையை குழந்தை விரும்பாத அளவுக்கு பள்ளிக் கூடங்கள் குழந்தைக் கூடங்களாக இருக்க வேண்டும்.
தவறு செய்யும் குழந்தையை அடிப்பதனாலோ, திட்டுவதனாலோ திருத்திவிட முடியும் என்று ஆசிரியரோ, பெற்றோரோ நினைப்பது மூட நம்பிக்கை. அடி வாங்கும் குழந்தை அடி கொடுப்பதைத்தான் கற்றுக் கொள்ளும். 
திட்டப்படும் குழந்தை கெட்ட வார்த்தைகளைத்தான் கற்றுக் கொள்ளும். மென்மையான முறையில் குழந்தைகளோடு உறவாடுவோம். அன்பான வழியில் தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம். 
குழந்தை எதிர்த்துப் பேசுகிறது என்றால் அதை காது கொடுத்து கேட்டு, பின்னர் அதற்கு அமைதியான முறையில் நீ சொன்னதில் இந்த விதத்தில் பிழை இருக்கிறது. சரிதானா என நீயே யோசித்துப் பார் எனச் சுட்டுவோம். குழந்தை புரிந்து கொண்டு தவறை உணர்ந்து வெட்கப்படுவதைப் பார்க்கலாம்.
நிறைய சம்பாதிக்க வேண்டும். அதற்காகத் தான் படிக்க வேண்டும் என்று கூறி குழந்தையின் பிஞ்சு மனதில் பண ஆசையை விதைக்காதீர்கள். கல்வியின் நோக்கம் வறுமையை ஒழிப்பது அல்ல. மடமையை ஒழிப்பது. பண்பை விதைப்பது. சிறந்த பண்புடைய, அறநெறிமிக்க மனிதனாக கல்வி அவசியம் என்றுதான் எடுத்துச் சொல்ல வேண்டும்.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை, 'இந்தியக் குழந்தைகள் கல்வியை புரிந்து கொள்ளுவதில் மிக மிக கீழ்நிலையில் உள்ளனர்' என்று கூறுகிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு இரண்டாம் வகுப்பு கணக்கைக்கூட போடத் தெரியவில்லை. 
ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தையால் இரண்டு இலக்க கூட்டல், கழித்தல் கணக்கைக்கூட போடத் தெரியவில்லை என்று உலக வங்கி செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது நம் கல்விமுறை தந்த குற்றம். நாம் குழந்தைகள் மீது பாடச் சுமைகளை ஏற்றுகிறோம். அதன் விளையாட்டு நேரங்களை அதனிடம் இருந்து பிடுங்கிவிட்டோம். கடுமையான வீட்டுப் பாடங்களை கொடுத்து போட வைக்கிறோம். தனிப் பயிற்சி (டியூசன்) வகுப்பு முகாம்களில் சிக்கி நசுங்குகின்றனர் குழந்தைகள். 
நல்ல பள்ளி என சொல்லி தொலைவில் உள்ள பள்ளியில் சேர்த்துவிட்டு பள்ளி ஊர்தியில் அதிகாலை வேளையிலேயே உள்ளே அடைத்து அனுப்பி வைக்கிறோம். அதற்கு பசிக்காத வேளையில் உணவை திணித்து அனுப்புகிறோம். 
அதற்கு பசிக்கும் வேளையில் பள்ளியில் பட்டினி கிடக்கிறது. அல்லது நாம் கொடுத்தனுப்பிய காசில் கண்ட உணவுகளை தின்று உடல் நலம் கெடுகிறது. பல குழந்தைகள் அதிக எடை போடுகின்றன. ஆரோக்கியம் அற்ற குழந்தை எப்படி உற்சாகமாக கல்வியை கற்கும்?
பள்ளிக்கூடம் சென்று வருவதே, குழந்தைகளுக்கு ஒரு பெரிய வதையாக இருக்குமேயானால், அந்த குழந்தை எப்படி கல்வி கற்கும்?
குழந்தையின் உள்ளம் ஒரு மலர். அதை வாட வைக்காதீர்கள்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...