Tuesday, October 17, 2017

ஹனிமூனுக்கு ஏன் ஹனிமூன் என்று பெயர் வந்தது!

By RKV  |   Published on : 16th October 2017 01:07 PM  | 
0000_honeymoon


திருமணத்துக்குப் பிறகு ஹனிமூன் செல்லாத தம்பதிகள் இப்போதெல்லாம் அரிதானவர்கள் ஆகி விட்டார்கள். ஹனிமூன் என்பது இன்றைக்கெல்லாம் புதிதாகத் திருமணமானவர்கள் பின்பற்றும் கட்டாயமான சம்பிரதாயங்களில் ஒன்றாகி விட்டது. ஹனிமூன் செல்லாத அல்லது ஹனிமூனை ஒரு பொருட்டாக நினைக்காத தம்பதிகளைக் கூட ‘அச்சச்சோ நீங்க ஹனிமூன் போகலையா? ஏன்? என்னாச்சு? என்பது மாதிரியான பரிதாபமான விசாரிப்புகள் ஏதோ பெரிதாக ஒன்றை தங்களது வாழ்வில் இழந்து விட்டதான உணர்வை ஏற்படுத்தி ஹனிமூன் போகாதவர்களின் மனவிசாரங்களை அதிகப்படுத்தி விடுகிறது. இப்போது இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருப்பவர்களில் எத்தனைபேருக்கு திருமணமான புதிதில் ஹனிமூனை மிஸ் பண்ணி விட்டோம் என்று பெரிய ஏக்கம் இருக்கக் கூடுமோ தெரியவில்லை. ஆனால், நீங்களும் கூட கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. இப்போது ‘லேட் ஹனிமூன்’ செல்வதும் ஒரு ஃபேஷன் என்றாகி விட்டது. ஆனால் அதில் என்ன ஒரு இஷ்டமான கஷ்டமெனில் லேட் ஹனிமூனுக்கு நீங்கள் உங்கள் குழந்தைகளையும் கட்டாயம் அழைத்துக் கொண்டு தான் சென்றாக வேண்டும். 
சரி இப்போது தங்களது வாழ்க்கையில் ‘ஹனிமூன்’ அனுபவங்களை தவற விடாமல் சென்று மகிழ்ந்தவர்களிடம் ஒரு கேள்வி. பட்டென பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். 
ஹனிமூனுக்கு, ஹனிமூன் என்று எப்படி பெயர் வந்தது?
அட என்னங்க இது?! உலகத்தில் திருமணம் ஆனவர்கள் எல்லோரும் செல்கிறார்களே என்று நாங்களும் ஹனிமூன் போனோம்! அப்படிப் போனது ஒரு குற்றமா? இப்படி கேள்வி எல்லாம் கேட்டு மண்டை காய வைக்கிறீர்களே? பதில் எல்லாம் எங்களுக்குத் தெரியாது. ‘ஹனிமூனுக்குச் போனோம் என்றால் போனோம்’ அவ்வளவு தான். ஆனால் அங்கேயும் போய் சண்டை தான் போட்டோம், அதை வேறு இப்போது நீங்கள் ஞாபகப்படுத்தி புண்ணியம் கட்டிக் கொண்டீர்களே! என்று யாராவது கொந்தளித்துக் குமுறி விடாதீர்கள். கூல்...கூல்! பதிலையும் நாங்களே சொல்லி விடுகிறோம்.
ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஸ்னரி வரையறையின் படி, திருமணத்திற்குப் பிறகு வரும் முதலாம் மாதத்தை ஹனிமூன் என்கிறார்கள். ஆனால் இன்றைய வழக்கப்படி, திருமணமான புதுத் தம்பதிகள், தங்களது திருமணத்திற்குப் பிறகு வீடென ஒரு கூட்டை அமைத்து தனியாக வாழும் காலம் வரும் வரையிலான நாட்களை ஹனிமூன் பீரியட் என்று குறிப்பிடுவது வழக்கம். இதை புதிதாக வேலையில் சேர்ந்தவர்களைக் கலாய்க்க கார்பரேட் கனவான்கள் பயன்படுத்தும் வார்த்தைகளோடு கூட ஒப்பிடலாம். புதிதாக வேலையில் சேர்ந்தவர்களுக்கு முதல் மூன்று மாத காலத்தை ‘ஹனிமூன் பீரியட்’ என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவது வழக்கம். கிட்டத்தட்ட அந்த ஹனிமூனும், இந்த ஹனிமூனும் ஒன்றே தான் என்பது, ஹனிமூன் சென்று வந்த அனுபவசாலிகளுக்கும் புதிதாக வேலையில் சேர்ந்து மூன்று மாதங்கள் கழிந்தவர்களுக்கும் நன்கு விளங்கக் கூடும்.
ஹனிமூனைக் கண்டுபிடித்த பெருமை ஜெர்மானியர்களையே சாருமென்றாலும் ஹனிமூன் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தவர்கள் பாபிலோனியர்களே! பண்டைய பாபிலோனில், திருமணமான தம்பதிகளில் பெண்ணைப் பெற்ற தந்த, திருமணத்திற்குப் பிறகு தன் மகளுக்கு ஆல்கஹாலுடன் தேன் சேர்த்து அருந்தத் தருவது வழக்கம். அதோடு பாபிலோனியர்கள் காலண்டர் கணக்கிடும் முறை சந்திரனை மையமாகக் கொண்டது. எனவே இந்த அடிப்படையில் திருமணமான முதல் மாதத்தை ‘ஹனி மந்தா’ என்றார்கள் அவர்கள். அதுவே பின்னாட்களில் மறுவி மக்களது புழக்கத்தாலும், பழக்கத்தாலும் ஹனிமூன் என்றானது. அது மட்டுமல்ல, திருமணமான தம்பதிகளுக்கு ஒரு மாதம் கழித்து, திராட்சை ரசத்துடன் தேன் கலந்து தரும் பழக்கம் பாபிலோனிய மன்னர் அட்டிலாவின் காலத்தில் நடைமுறையில் இருந்தது. அந்த அடிப்படையிலும் கூட ஹனிமூன் என்ற வார்த்தை தோன்றியிருக்கக் கூடும். என்கிறார்கள்.
ஆனால் இன்றைக்கு ஹனிமூன் என்றால் திருமணமான புதுத்தம்பதிகள் இருவர் மட்டுமாக தனியாக எங்காவது மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்றூ வருவதையே நாம் ஹனிமூன் என்று குறிப்பிடுகிறோம். இந்த வழக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திற்குப் பிறகே தோன்றியது. ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத புது மணமக்கள், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளும் பொருட்டு அவர்களை அப்படித் தனிமையில் அனுப்பி வைப்பது இன்று வரை தொட்டுத் தொடர்ந்து பின்பற்றப்படும் வழக்கங்களில் ஒன்றாகி இருக்கிறது. சில குடும்பங்களில் தேனிலவென்றால் திருமணத்திற்கு வருகை தர முடியாத தங்களது சொந்தங்களைத் தேடிச் சென்று காணும் ஒரு வாய்ப்பாகவும் கருதப்பட்டு, அப்படியான நெருங்கிய சொந்தங்களின் வீடுகளுக்குச் சென்று தங்கும் வாய்ப்பாகவும் இன்று அமைகிறது.
எது எப்படியோ தேனிலவென்பது புதுத்தம்பதிகளுடன் இலவச இணைப்புகள் என்று எவரும் ஒட்டிக் கொள்ளாமல், தம்பதிகள் தாங்கள் மட்டுமே தனியே சுற்றுலா சென்று வர கிட்டிய ஒரு வாய்ப்பு என சந்தோசப்பட்டுக் கொள்ளலாம். அப்புறம் தான் இருக்கவே இருக்கிறதே குழந்தைகள், புகுந்த வீட்டு உறவுகள், பிறந்த வீட்டு பந்தங்கள் என்று ஏராளமான கமிட்மெண்ட்டுகள். எல்லோரையும் பிறகெப்போதும் உங்களால் அத்தனை ஈசியாக கழட்டி விட்டு விட்டு தனியாக டூரெல்லாம் சென்று விட முடியாது தம்பதிகளே!
அதனால் கிடைக்கும் வாய்ப்பை, கிடைத்த நேரத்தில் உபயோகப்படுத்த மறந்து ஹனிமூன் வாய்ப்பை இழந்தவர்களாகி விடாதீர்கள்!
concept courtesy: ucweb.com
Image courtesy: google

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024