Tuesday, October 17, 2017

போனா வராது; பொழுது விடிஞ்சா கிடைக்காது! அதிகாரிகள், ஊழியர்கள் அடாவடி வசூல்: தவிர்க்க முடியாமல் வர்த்தகர்கள் தவிப்பு
t
போனா வராது; பொழுது விடிஞ்சா கிடைக்காது! அதிகாரிகள், ஊழியர்கள் அடாவடி வசூல்:  தவிர்க்க முடியாமல் வர்த்தகர்கள் தவிப்பு
கோவை:தீபாவளி பண்டிகையை காரணம் காட்டி அரசு அதிகாரிகள் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர்; இவர்களை தவிர்க்க முடியாமல், ஒதுக்கவும் முடியாமல் வர்த்தகர்கள் விழிபிதுங்கி உள்ளனர்.தீபாவளிக்கு 'போனஸ்' என்பதெல்லாம் மலையேறி, தற்போது தீபாவளி வசூல் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. ஏழை, பணக்காரன், அன்றாடம் காட்சிகளில் இருந்து அரசு அதிகாரிகள் வரை வசூல் இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவதில்லை. எல்லை மீறி கொண்டிருக்கும் தீபாவளி வசூல் குறித்து செய்திகள் வெளிவந்து கொண்டே உள்ளன.
ஆனால், இதை பற்றி எல்லாம் கவலைப்படாத, 'வசூல் ராஜாக்கள்' வலம் வந்து கொண்டே இருக்கிறார்கள். சராசரி மனிதர்கள் தீபாவளி வசூலில் ஈடுபட்டு வரும் நிலையில், தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வசூலில் சாதனை படைத்து வருகின்றனர்.இந்தாண்டு கோவை மாநகரில் பட்டாசு கடைகள் அமைக்க மொத்தம், 264 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் நான்கு பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, 260 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த வாரம் முதல் மாநகர் முழுவதும் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்த பட்டாசு கடைகளில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கடையில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க செல்கின்றனர். அப்போது ஒரு கடைக்கு, 2,000 முதல் 3,000 ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தப்படுகிறது. தீயணைப்பு துறையினர் ஒரு படி மேல் சென்று கடைக்கு, 5,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
இவர்களை பகைத்து கொள்ளவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் பட்டாசு கடை உரிமையாளர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.இதேபோன்று தீபாவளி அன்பளிப்பு கேட்டு, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தபால் துறை ஊழியர்கள், மின் வாரிய அதிகாரிகள் என பல அரசு துறை அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக வர்த்தகர்கள், குறு, சிறு தொழில் செய்வோரிடம் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு அதிகாரிகள் தங்கள் வாங்கும் தொகையை உயர்த்தி வருகின்றனர். இதனால், அரசு அதிகாரிகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.
பட்டாசு கடை உரிமையாளர்கள், வர்த்தகர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பணம் கேட்டு நச்சரிக்கின்றனர். இப்போது பணம் கொடுக்காமல் விட்டால், வேறு ஏதாவது வேலை சம்பந்தமாக சென்றால், இழுத்தடித்துவிடுவார்கள். இதற்கு பயந்தே அன்பளிப்பு கொடுத்து விடுகிறோம். சிலர் பணம் வேண்டாம் அதற்கு பதிலாக பட்டாசு, பரிசு கூப்பன்கள் கேட்கின்றனர். அன்பளிப்பு கேட்டு வருவோரை பகைத்து கொள்ளவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தவிக்கிறோம்' என்றனர்.
உணவு அதிகாரிகள்...
தீபாவளிக்கு இந்தாண்டு அதிகளவு இனிப்பகங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதுதவிர, விற்பனைக்காக வீட்டில் இனிப்புகள் தயாரிக்கும் நபர்களும் பதிவு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடைக்கு, 500 ரூபாய் முதல், 2,500 வரை வசூலில் ஈடுபடுவதாக விற்பனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு புறம் வசூலில் ஈடுபட்டு வரும் நிலையில், மருந்து கட்டுப்பாட்டு துறையிலும் இதேபோன்ற வசூல் அரங்கேறி வருகிறது. மாவட்டத்தில், 3,000க் கும் அதிகமான மருந்து கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு செல்லும் துறை அதிகாரிகள் கணிச மான தொகையை வசூலித்து விடுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.பலர் வசூலில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு சில அதிகாரிகள், தங்களை தேடி வரும் அன்பளிப்பு, இனிப்பு போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து வருவதையும் காண முடிகிறது.
நாங்கள் சளைத்தவர்கள் அல்ல!அரசு அதிகாரிகள் ஒருபுறம் வசூலில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் சிலர், அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளிடம் வசூலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஆயிரக்கணக்கில் 'கறந்து' வருகின்றனர். 100, 200 ரூபாய் கொடுக்கும் அதிகாரிகளிடம், 'நாங்கள் பெரிய மீடியாவில் இருந்து வந்திருக்கோம். அதுவும் மூணு பேர் வந்திருக்கோம். எங்களுக்கு இது பத்தாது. தலைக்கு 500 ஆவது கொடுக்கணும்' என விடாப்பிடியாக கேட்டு வசூலிக்கின்றனர்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...