Friday, October 20, 2017


தீபாவளி விடுமுறை நிறைவு: பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

By திருநெல்வேலி  |   Published on : 20th October 2017 08:13 AM  |
train

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகள் ஏராளமானோர் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றதால் திருநெல்வேலியில் பேருந்து, ரயில் நிலையங்களில் வழக்கத்தைவிட கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது.
தீபாவளி பண்டிகை புதன்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் திருநெல்வேலி மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி தீபாவளியைக் கொண்டாடினர். விடுமுறை முடிந்து அவரவர் வசிக்கும் பகுதிகளுக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் செல்லத் தொடங்கினர். இதனால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் ஆகியவற்றில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட மிகவும் அதிகமாக இருந்தது.
சிறப்புப் பேருந்துகள்: திருநெல்வேலியில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வழக்கமாக சுமார் 65 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், வியாழக்கிழமை கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னைக்கு 10, கோவைக்கு 4, திருப்பூருக்கு 2 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதவிர கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கூடுதலாக இயக்கப்பட்ட விரைவுப் பேருந்துகளும் திருநெல்வேலி வழியாக வந்து பயணிகளை ஏற்றிச் சென்றனர். இதுதவிர தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை, திருச்சி, கோவை, திருப்பூருக்கு ஆகிய ஊர்களுக்கு கூடுதலாக சுமார் 20 பேருந்துகள் இயக்கப்பட்டன.
அடிப்படை வசதிகள் இல்லை: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் தீபாவளி விடுமுறை முடிந்து செல்லும் பயணிகளுக்காக பேருந்துகள் மட்டுமே கூடுதலாக இயக்கப்பட்டன. ஆனால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவுக்குச் செய்யப்படவில்லை. குடிநீர்க் குழாய்களில் தண்ணீர் வராமல் மக்கள் பெரும் சிரமப்பட்டனர். இ-டாய்லெட் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும் என்ற பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்கள், விசாரணை அலுவலகங்கள் திறக்கப்பட்டன. அதனால் பொதுமக்கள் மிகுந்த பயனடைந்தனர். திருநெல்வேலியில் கூடுதல் கவுன்ட்டர்கள் உள்ளிட்டவை இல்லை. இதுதவிர வழக்கத்தைவிட அதிக பயணிகள் வந்து விசாரணை அலுவலகத்தில் பேருந்து குறித்து விசாரிக்க வந்தனர். அதற்கு தகுந்த முன்னேற்பாடுகள் செய்யாததால் பயணிகள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டது.
ரயில் நிலையம்: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலும் வியாழக்கிழமை பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமிருந்தது. நெல்லை விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில் உள்ளிட்ட சென்னை செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணிக்கும் அளவுக்கு கூட்டம் அதிகமிருந்தது. முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க நண்பகலில் இருந்தே பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது. அடுத்த ஆண்டில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரயில்களை மேலும் அதிகரிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024