Saturday, October 14, 2017

ஆடம்பரம் தவிர்ப்போம்


By ஐவி. நாகராஜன்  |   Published on : 14th October 2017 02:26 AM  
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்பது மிக பழைய மொழி. "திருமணம் என்பது யாரோடு வாழலாம் என்பதை விட யாரில்லாமல் வாழ முடியாது என்பதை அறிவதுதான்' என்று சொல்கிறார் டாக்டர் ஜேம்ஸ் டாப்சன். 
திருமணத்தைப் பற்றி கேலியாகவும், நகைச்சுவையாகவும், உணர்வுபூர்வமாகவும் பல்வேறுவிதமான விளக்கங்கள் இருந்தாலும் வெற்றி பெறும் திருமணம் என்றால் என்ன என்று அறுதியிட்டு கூறமுடிவதில்லை. யாரோ ஒருவர் உனக்கென்று உலகத்தில் எந்த மூலையிலாவது பிறந்திருப்பார் என்று கூறுகிறார்கள்.
அந்த சரியான ஒருவரை தேடிகண்டுபிடிப்பதுதான் வெற்றிகரமான திருமணத்திற்கு வழி என்று சொல்ல முடியுமா? திருமணத்திற்கு தயாராய் இருப்பவர் அல்லது அவரது பெற்றோர் அலைந்து திரிந்து ஜாதகம் பார்த்து எல்லாப் பொருத்தங்களும் பார்த்து அந்த தேவதையையோ அல்லது ராஜகுமாரனையோ கண்டுபிடித்து திருமணமும் நடக்கிறது என்று வைத்துகொள்வோம். 
அப்படி திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கைப் பயணம் உண்மையிலேயே இனிதாக நடைபெறுகிறதா? இருவரும் மனம் ஒத்துப்போகிறார்களா? இப்படி பல வினாக்கள் உண்டு.
திருமணத்திற்கு தேர்ந்தெடுக்கும் துணையைப் பற்றி, அவரது விருப்பு வெறுப்புகள் பற்றி ஒருவர் திருமணத்திற்கு முன்னரே நன்கு அறியவேண்டும். அதற்கு ஒரே வழி அந்த துணையோடு மனம் விட்டு பேசுவதுதான். 
பல்வேறு விஷயங்களில் இருவரும் தகவல்களை பரிமாறிக்கொண்டு மனம் ஒத்த தம்பதிகளாக வாழ முடியும் என்ற முடிவுக்கு வந்த பின்னரே திருமணத்தை நிச்சயிக்க வேண்டும். 
மன முதிர்ச்சியுறாத பருவத்தில் உடல் கவர்ச்சியை மட்டுமே முக்கியமாக கொண்டு தீர்மானிக்கப்படும் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியையே தழுவுகின்றன.
திருமணம் நிச்சயமாவது, வரதட்சணை, சீர் செய்வது இவற்றைப் பொருத்துதான் இன்றைய சமுதாயத்தில் அதிகமான திருமணம் அரங்கேருகின்றன. இரு மனம் இணைவதைவிட பணம் பரிமாறப்படுவதுதான் முக்கிய பங்கு வகிக்கிறது. 
ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று. கொண்டாடத்திற்கு உரியதும் கூட. ஆனால் திருமணத்திற்காக நாம் இன்று செலவழிக்கும் தொகை கொண்டாட்டம் என்பதை தாண்டி ஆடம்பர செலவு என்ற அளவுக்கு போய்கொண்டிருக்கிறது.
130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு 1 கோடி திருமணங்கள் நடக்கின்றன. திருமணத்திற்காக குறைந்தது 5 லட்சம் ரூபாயில் தொடங்கி 50 கோடி வரை செலவழிக்கப்படுகிறது. 
திருமணம் என்பது தங்களின் அந்தஸ்தை நிர்ணயிக்கும் அளவு கோல் என்று ஒவ்வொரு குடுபத்தினரும் நினைக்கின்றனர். ஆகையால்தான் அவர் அவர்கள் முடிந்தளவுக்கு ஆடம்பரமாக திருமணங்களை நடத்துகின்றனர். 
மணப்பெண்னுக்கு சீர் வரிசை, விருந்து, மறுவிருந்து அலங்காரங்கள் உறவினர்களுக்கு தாம்பூல பை என்று எல்லாவற்றிலும் பிரம்மாண்டமாக செய்யும் போக்கு வளர்கிறது.
இதன் காரணமாக பணம் தண்ணீராய் வாரி இறைக்கப்படுகிறது. நம் நாட்டின் ஓராண்டு பட்ஜெட்டே 22 லட்சம் கோடி ரூபாய்தான். ஆனால் நம் நாட்டில் திருமணத்திற்காக மட்டும் ஓர் ஆண்டில் 1.25 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 
இந்தத் தொகை ஒவ்வோர் ஆண்டும் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துக்கொண்டு செல்கிறது என்றும் அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 
நாட்டு மக்களுக்கு சோறு போடும் விவசாயத்திற்கே நம்முடைய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாயை செலவழிப்பதில்லை எனும்போது ஒன்றி இரண்டு நாள் கொண்டாட்டத்திற்காக 1.25 லட்சம் கோடி ரூபாய் செலவு என்பது மிக அதிகம்.
திருமணத்திற்காக இவ்வளவு பெரிய தொகை செலவழிக்க வேண்டியிருப்பதால், குறிப்பாக பெண்னைப் பெற்றுவிட்டால் திருமண செலவு என்பது அந்த பெண்ணின் பெற்றோருக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக மாறி விடுகிறது. 
அதுவே நடுத்தர குடும்பத்தில் பெண் குழந்தை மீதான ஆர்வமின்மை என்ற சமூக பிரச்னைக்கும் வழிவகுக்கிறது. இது தவிர கெளரவத்துக்காக கடன் வாக்கியாவது கல்யணத்தை தடபுடலாக நடத்த வேண்டும் என்ற நுகர்வு கலாசாரத்தால் பல பெற்றோர் பாதிக்கப்படுகின்றனர். 
பெண்ணுக்கு கல்யாணம் செய்துவிட்டு பெரும் கடன்காரர்களாகி நிம்மதி இழந்து தவிக்கும் பெற்றோரையும் பார்க்க முடிகிறது. 
இவ்வளவு தொகை திருமணத்திற்காக செலவு செய்பவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு, சமூகத்தில் வாழ்விழந்து தவிக்கும் எழை எளியோர்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளுக்கு உதவி செய்திடலாம். 
தன்னுடைய சக்திக்கு மீறி செலவு செய்துவிட்டு பிறகு இல்லற வாழ்க்கை நிலைக்காமல் பல சச்சரவுகளும் சண்டைகளும் ஏற்பட்டு பெற்றோர்களின் வீடு தேடி வந்து நிற்கும் பிள்ளைகளையும், அவர்கள் துன்பத்தை காண சகிக்காமல் பெரும் துயரத்திற்குள்ளாகும் பெற்றோரையும் பார்க்க முடிகிறது.
இவ்வாறு திருமணத்திற்காக செலவிடும் அதிகமான தொகையை ஏதோ ஒரு வகையில் முதலீடாக்கினால் அந்த திருமண ஜோடியின் எதிர் காலம் சிறப்படைவதற்கு நல்ல வாய்ப்பாக அமையும். 
எனவே எதிர்காலத்தில் ஆடம்பரம் இல்லாத, கூடுதல் செலவுகள் தவிர்த்த சிக்கனமான திருமணங்களை நோக்கி நமது பார்வையும் பயணமும் திரும்ப வேண்டும். இதனைப் பெற்றோர் புரிந்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...