Saturday, October 14, 2017

என்றும் வேண்டும் இன்ப அன்பு


By கிருங்கை சேதுபதி  |   Published on : 14th October 2017 02:25 AM  |
பிரதிபலன் எதிர்பாராதது அன்பு. அதனை வெளிப்படுத்தவும், நிரந்தரமாகத் தத்தம் நினைவுகளை நிலைப்படுத்திக்கொள்ளவும் வழங்கப்பெறுவது அன்பளிப்பு என்பதுபோய், காரியம் முடிவதற்காகவும் தொடர்ந்து கவனிப்பில் இருக்கவேண்டும் என்பதற்காகவும் கொடுக்கப்படுகிற கையூட்டு எனும் இலஞ்சத்திற்கு அன்பளிப்பு என்று பெயர் சூட்டப்பட்டது அநாகரிகத்தின் உச்சம் எனலாம்.
இப்போக்கு, திடீரென்று வந்துவிட்டதாக நினைக்கத்தோன்றவில்லை. பாலபருவத்தில் இருந்தே பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பழக்கம் இது என்பதுதான் உண்மை. 
இந்த வேலை செய்தால் இது கிடைக்கும் என்பதான ஒப்பந்தத்தில் பிள்ளைகளைப் பழக்குகிறோம். நூறு ரூபாய்க்குப் பொருள் வாங்கிவரச்சொல்லிக் கடைக்கு அனுப்பப்படுகிற ஒரு குழந்தைக்குப் பத்து ரூபாயேனும் பரிசுத்தொகையாகக் கொடுக்கிற பெற்றோர் பலர் இருக்கிறோம். 
இத்தனை மதிப்பெண் பெற்றால் இன்னது பரிசு என்று சொல்லி, மதிப்பெண் உயரும் அளவிற்கு, பரிசுப்பொருளின் மதிப்பையும் உயர்த்திச் சொல்கிறபோது, தந்தை மகன் அல்லது மகள் உறவு வாழ்வியல் உறவாக மலர்வதில்லை. வர்த்தக உறவாகப் பிறழ்கிறது. கவர்ச்சியின் காரணமாகப் பெறுகிற பொருளும், பொருளை முன்னிட்டுக் கற்கிற பாடமும் தமக்குரிய மதிப்புகளை இழந்துவிடுகின்றன. 
இதனால், உழைப்பும் கல்வியும் தமக்குரிய மதிப்பீடுகளை இழந்து, விலைபொருள்களாகிவிடுகிற அவலத்தைப் பார்க்கிறோம். இதனால் வாழ்வியல் விழுமியங்களும் வீழ்ச்சிக்குரியதாகிவிடுகின்றன. சமுதாயச் சீரழிவுகளுக்கு இத்தகு போக்குகளே விரைந்து சாலையமைத்துத் தந்துவிடுகின்றன.
இல்லப்பணிகளை ஏற்றுச் செய்வதும் எப்போதும் சிறப்பு மதிப்பெண் பெறுவதும் பிள்ளைகளின் கடமை. அதற்கு விலையோ, அன்பளிப்போ தேவையில்லை என்கிற பழக்கமும் பயிற்சியும் எப்போது இல்லந்தோறும் கடைப்பிடிக்கப்படுகின்றனவோ அப்போதுதான் நிலைத்த மாற்றத்தைச் செயல்படுத்தமுடியும். கடமையைச் செய்வதற்கு அன்பளிப்பு எனும் கையூட்டுப்பெறுவது நாணத்தக்கது.
ஒவ்வொருவருக்கும் ஒரு தேவையிருக்கிறது. ஜனநாயக நாட்டில் கொண்டும் கொடுத்தும் வளர்வதற்குரிய வாய்ப்புகள் அதிகம். அது வாழ்வியல் நெறியாக இருக்க வேண்டுமேயொழிய, வணிகமயமாகிவிடலாகாது. இலாப நட்டக் கணக்குப் பார்த்துச் செய்கிற எதிலும் வணிக தர்மம் இருக்குமே ஒழிய, வாழ்வில் அறம் இருக்காது.
தன்னை இழப்பதில்தான் அன்பின் ஆழம் புலப்படும். இன்னும் சொல்லப்போனால், பலவீனங்களின்போது தாங்கிப்பிடிக்கும் கணத்தில் எழும் பலத்தின் அடிப்படையில் அன்பு கால் கொள்கிறது. 
தந்தையன்பு விழுமியது; தாயன்பு தூயது; தாயன்பினும் மேலது மனைவியின் அன்பு; "அன்பு அகலாத மனைவி' வேண்டும் என்றுதான் அபிராமிப் பட்டர் வேண்டுகோள் விடுக்கிறார். 
பிள்ளைகளிடமும் பெற்றோர்களிடமும் காட்டுகிற பாசம் அன்பாகப் பரிணமிக்க வேண்டும். பாசம் சில சமயங்களில் கண்ணை மறைக்கும். கண் பார்வையில்லாத திருதராஷ்டிரன் மீது கொண்ட காதலால் தன் கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ்ந்த காந்தாரியின் பாசத்தின் விளைவைப பாரதக் கதை காட்டும். 
கண் பார்வையில்லாக் கவிஞர் ஒருவரும் கால்நடக்கப் பயன்படாப் பிறிதொரு கவிஞரும் தமக்குள் உதவிக்கொண்டு தமிழ்பாடியதன் பலன்தான் தனிப்பாடல் திரட்டில் இரட்டைப்புலவரை ஈன்றுபுறந்தந்தது. இளஞ்சூரியர் முதுசூரியர் என்பதுகூடக் காரணப்பெயர்களாகத்தான் அவர்களுக்கு வாய்த்திருக்கக்கூடும்.
ஒத்துப்பிறந்தாரினும் உயரிய இடத்தைக் கொடுக்கவல்ல நட்பு அன்பின் உயரிய பரிமாணம். அதுதான் கபிலர் பாரியை இணைவித்தது; மரணத்திற்கு அப்பாலும் ஒருங்கிணைய வைத்த மகிமையை நிலைநாட்டியது பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழனின் நட்பு.
ஆண் - பெண் பேதங்கடந்து அரிய நட்பிற்கு உரிய அன்பளிப்பாய்க் கருநெல்லி கொடுத்துக் காத்தவன் அதியன்; ஏற்றுப் போற்றியவர் ஒளவை. 
கண்ணனுக்குக் குசேலன் கொண்டுவந்து கொடுத்த அவலில் அன்பின் ருசிதான் அதிகமே தவிர, விலையின் மதிப்பு அதிகமல்ல.
தேனும் மீனும் அமுதினுக்கு அமைவதாகத் திருத்தி நன்கு கொணர்ந்து சமர்ப்பித்த குகன், "என்கொல் திருவுளம்?' எனக் கேட்கும் அன்பின் ருசியில், இராமன் தன்னையே குகனுக்குத் தம்பியாகத் தந்தது மிக உயர்ந்தது.
கொடுக்கிறபோதும் பெறுகிறபோதும் ஏற்படுகிற மகிழ்வு, அந்தக் கணத்தோடு நிறைவுபெற்றுவிடுமேயானால், அது நிலைத்த அன்பாக இருக்காது. அது நிகழ்ந்துபல காலம் ஆனபிறகும் நினைக்கிறபோதெல்லாம் நெகிழ்வு ஏற்படுகிறதே, அதில்தான் அன்பின் ருசி நன்கு வெளிப்படுகிறது.
சிறையிருந்த காலத்தில் தன் சிந்தையெல்லாம் இராமனே நிரம்பத் தனிமைநெருப்பை அணைத்துக்கொண்டு தவித்தாளே சீதை, அவளின் மனத்தில் இந்த அன்பின் ருசி குகநினைவாய்க் குமிழியிடுவதைப் பார்க்கலாம்.
ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, 'எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி' எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்
எனக் கம்பன் சித்திரித்துக் காட்டுகிறான். அதுமட்டுமா, சபரித்தாய் தான் ருசித்த பழங்களையே இராமனுக்குப் படைத்து மகிழ்ந்ததும், இராமன் அதனை ஏற்று நெகிழ்ந்ததும் அன்பின் ருசியால்தானே?
கங்கைவேடனைப்போல், காளத்திவேடனாகிய திண்ணன், தான் சமைத்த பன்றியின் கறியை மென்று ஊட்டியதை ஏற்றுப்போற்றிய ஈசனின் அருள்திறத்தில் வெளிப்படுவது அன்பின் ருசியல்லாமல் வேறு என்ன? 
இயேசு பெருமானும், நபிகள் நாயகமும், கெளதமபுத்தரும் தத்தம் வாழ்வியல் நிலைகளில் செயற்படுத்திக் காட்டியதெல்லாம் இத்தகு அன்பின் பரிமாணங்களைத்தானே!.
"அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை'யாக இறைவன் இருக்கிறான் என்கிற - அன்பின் பரிமாணமாகிய பக்தியின் நிலை, இன்றைக்கு அன்பெனும் வலை விரித்துப் பிடிக்கப்படுகிற கலையாக மலிந்து, அதுவோர் வணிகச்சூதாகப் பிறழ்ந்துவிட்டிருக்கிறது. ஆன்மிக நிலையினைவிடவும் அரசியல் போக்குகளில் இது இன்னும் வீழ்ச்சியடைந்துவிட்டது. 
அலுவலகங்களிலும், இல்லங்களிலும் பணமதிப்பீட்டுக்குரியதாக அன்பு சரிந்துவிடுகிறபோது, அது உயிர்ப்பண்பாக இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
என்பு தோல் போர்த்த உடம்புக்கு அன்புதான் அடிப்படை உயிர்ப்பண்பு. அகத்து உறுப்பு என்றே இதனை அறிமுகப்படுத்துகிறார் திருவள்ளுவர்.
இந்த அன்பின் ருசியை உணராத யாரும் வாழ்வின் அருமையைப் புரிந்துகொள்ளமுடியாது; சுற்றத்தின் சுகத்தை அனுபவிக்க இயலாது; நட்பின் மேன்மையைத் தெளிந்து கொள்ளுதல் அரிது. வறட்சிமிகுந்த எந்திரவாழ்க்கையில் விரக்தி அதிகமாகும். தனக்கு யாருமில்லை என்கிற தன்னம்பிக்கைக் குறைவாக அது எழுந்து, தாழ்வு மனப்பான்மையை அதிகரித்துத் தற்கொலை முயற்சியில் கொண்டுபோய்த் தள்ளிவிடும். 
இதைவிடவும் குரூரம் தன்னிடம் அன்பு கொள்ள வேண்டிய ஒருவர் தன்னைவிடவும் பிறரிடம் காட்டுகிற அன்பைக் கண்டால் அவர் மீது பாய்வதும், அவரால் அன்பு செலுத்தப்படுபவரிடம் மோதுவதும் அதிகரித்து அதிகரித்து அவர்களை அழித்துவிடும் அளவிற்கும் கொண்டுபோய் நிறுத்தும்.
இன்றைய சமூக அவலங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணியாக இருப்பது அன்பின் ருசியறியாச் செயற்பாடுதான்.
அன்பு ஆர்வத்தை உண்டாக்கும்; ஆர்வம் நட்பினைச் சேர்க்கும்; அது பரந்து விரிந்து சுற்றத்தைக் கொடுக்கும்; அன்பும் அறமும் பண்புகளாய் மலரும். 
அன்பு அருள் என்னும் குழந்தையைப் பெற்றுத் தரும். செல்வம் செவிலித்தாயாய் இருந்து வளர்க்கும் சமூகத்தில் நட்பும் சுற்றமும் பெருகித் தழைக்கும். அந்த நிலையில்தான், "யாதும் ஊர் யாவரும் கேளிர்' என்கிற நிலை வளந்தோங்கும்.
அன்பற்ற நிலையில் அளிக்கப்படும் பொருள்களால் ஆசையே பிறக்கும்; ஆசை வெட்கமறியாதது; தன்னிலை தகர்ப்பது. அதன்வழி பெருகும் பேராசை நிராசையாகிறபோது நெறி வெறியாகிவிடும்; அது அழுக்காறு என்னும் பொறாமை நெருப்பை ஊதிப் பெருக்கும்; வெகுளித் தீயை மூண்டெழச்செய்யும். 
இன்னாச்சொல் பிறக்க, நட்புக்குள்ளும் உறவுக்குள்ளும் பகை வளர்ந்து பண்பழிக்கும்; இதனால் பெருமைக்குரிய தன்மானம் கெடும்; தனித்தன்மை மிக்க தலைமுறை மானமும் தறிகெட்டுப்போகும். குடிப்பிறப்பழிக்கும்; விழுப்பம் கொல்லும் என்கிற நிலைதான்.
பொருளற்ற வறுமையினும கொடியது அருளற்ற வறுமை. அது வெறுமையில் துவங்கி, கவலையில் வீழ்த்தும். அருள் என்னும் குழவியை ஈன்று தருகின்ற அன்பு வளர வளர, முதலில் துன்பம் போகும். சோர்வு நீங்கும். பயம் அழியும். 
அன்பு தீயன அனைத்தையும் அழிக்கும். ஆனால், தான் அழியாது. அது சிவனைப்போன்றது. தென்னாட்டில் சிவன், பிறநாட்டில் அதன் பெயர் வேறு. ஆக, எந்நாட்டிற்கும் உரிய இறையை, அன்பின்வழியே அறியலாம். அதனால்தான், "இறவாத இன்ப அன்பு வேண்டும்' எனக் காரைக்காலம்மையார் கயிலைமலையானிடம் நமக்காகவும் விண்ணப்பித்துப் பெறுகிறார். அம்மரபில் பாரதியும் துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடீ - கிளியே அன்புக்கு அழிவில்லைகாண் என்று பாடுகிறார்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...