Tuesday, October 10, 2017

தோழியுடன் அதிவேக கார் பயணம்; சாலை தடுப்பில் மோதி விபத்து
Published : 09 Oct 2017 15:09 IST

சென்னை

சென்னை, ஆர்.கே.சாலையில் நேற்றிரவு (ஞாயிற்றுக் கிழமை) போதையில் தோழியுடன் வந்த வாலிபரின் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
மது அருந்திவிட்டு சொகுசு காரில் பயணித்து விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து விதிகளை மதிக்காமல் இரவில் போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவர்கள் எண்ணிக்கை அண்மைக்காலமாக கூடியுள்ளது. போலீஸார் வசதி படைத்தவர்களின் கார்களை சரிவர சோதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களால் வைக்கப்படுகிறது.
கடந்த வாரம் நடிகர் ஜெய் மது அருந்திவிட்டு பாலத்தின் மீது காரை மோதி விபத்தில் சிக்கினார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்றிரவு குடித்துவிட்டு தனது தோழியுடன் காரை ஓட்டிக்கொண்டு வந்த வாலிபர் ஒருவர் கடற்கரையிலிருந்து ஆர்.கே. சாலை வழியாக மைலாப்பூர் நோக்கி செல்லும் வழியில் விபத்தில் சிக்கியதில் கார் எதிர்புறச்சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது.
சென்னை மயிலாப்பூர் ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கார்த்திக் நாராயணன்(20). அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவரது தோழி சிருஷ்டி(22) டெல்லியை சேர்ந்தவர், சென்னையில் பாஷன் டெக்னாலஜி படிக்கிறார். நேற்றிரவு இருவரும் வெளியே சென்று மது அருந்திவிட்டு நள்ளிரவில் ஆர்.கே.சாலை வழியாக வந்துள்ளனர்.
கார் அதிவேகமாக வந்ததில் சாலைத்தடுப்பில் மோதி எதிர் புறச்சாலையில் கவிழ்ந்தது. காருக்குள் இருவரும் சிக்கிக்கொண்டனர். எதிரே எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. லேசான காயங்களுடன் இருந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் போக்குவரத்து புலானாய்வு போலீஸார் விபத்தில் சிக்கிய கார்த்திக் நாராயணன், சிருஷ்டி இருவரையும் மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். கார்த்திக் நாராயணனுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டிருந்தது. இருவரும் மது போதையில் இருந்தது உறுதியானது.
இதையடுத்து கார்த்திக் நாராயணன் மீது பிரிவு 279, மோட்டார் வாகனச்சட்டம் 185-ன் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது. காரும் அப்புறப்படுத்தப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கார்த்திக் நாராயணன் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதம் ரத்து செய்ய போலீஸார் பரிந்துரைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024