Tuesday, October 10, 2017

மது போதையில் சொகுசு கார் ஓட்டி விபத்தில் சிக்கும் பிரபலங்கள்: அச்சத்தில் பொதுமக்கள்

Published : 09 Oct 2017 16:56 IST

மு. அப்துல் முத்தலீஃப்சென்னை




மது போதையில் கார் ஓட்டி விபத்தில் சிக்கும் விஐபிக்கள், வசதி படைத்தவர்களால் சென்னை பொதுமக்கள் அச்சத்தில் சாலையில் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

சென்னையில் சமீபகாலமாக அதிக சிசி திறன் கொண்ட சொகுசு கார்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. இதனால் நள்ளிரவில் பொதுமக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. போலீஸார் வாகன சோதனையை மேலும் கடுமையாக்கினால் மட்டுமே இதற்கு தீர்வு என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

சென்னை இந்தியாவின் மூன்றாவது பெரிய நகரமாக உள்ளது. தமிழகத்தின் தலைநகர் என்ற முறையில் சென்னையில் பிரபலங்கள், விஐபிக்கள், வசதி படைத்தவர்கள் அதிகம் உள்ளனர். ஒரு காலத்தில் ஆங்கிலப் படங்களில் மட்டுமே நாம் பார்த்த கார்கள் உலகமயமாக்கலுக்குப் பின்னர் சென்னை வீதிகளில் சாதாரணமாக பார்க்க முடிகிறது.

கோடிக்கணக்கான ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான குதிரைத் திறனுள்ள ரோல்ஸ் ராய்ஸ், லம்போகினி,ஜாகுவார்,புகாட்டி,ஹென்னெஸ்சே, வால்வோ, வோல்க்ஸ் வேகன், பி.எம்.டபிள்யூ, பென்ஸ், ஆடி, போன்ற கார்கள் இந்திய சந்தைக்குள் வந்துவிட்டன. சென்னையிலும் இந்த கார்கள் ஓட ஆரம்பித்து விட்டது.

இதே போன்று உலகின் மிகச்சிறந்த மோட்டார்சைக்கிள் கம்பெனிகளின் இரு சக்கர வாகனங்களும் இந்திய சந்தைக்குள் வந்துவிட்டன. சென்னையிலும் விற்பனைக்கு வந்துவிட்டது. 200 சிசிக்கு மேள் என்ஜின் சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்களும் அதிக எண்ணிக்கையில் சென்னையில் ஓடுகிறது.

சென்னையின் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையின் மக்கள் தொகைக்கு இணையாக வாகன பெருக்கமும் பெருகி வருகிறது. சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை, 50 லட்சத்தை நெருங்கி விட்டது. தமிழகத்தில் விற்பனையாகும் மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில், 22 - 25 சதவீதம் சென்னையில் பதிவாவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

2015-ல் சென்னையில், மொத்த வாகனங்களின் எண்ணிக்கை, 44 லட்சம். அதில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் 34.5 லட்சம். 2016-ல் நிலவரப்படி, சென்னையில் மேலும் 3 லட்சம் புதிய வாகனங்கள் விற்பனையாகி, மொத்த வாகனங்களின் பதிவு, 47 இந்த ஆண்டு முடியும் போது இது 50 லட்சத்தை தாண்டும் என தெரிகிறது.

ஆனால் சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து வாகன எண்ணிக்கைக்கு ஏற்ற அளவிற்கு போக்குவரத்து காவலர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. சென்னையில் இன்றும் போக்குவரத்து காவல் துறைக்கு 2000-க்கும் மேற்பட்ட போலீஸார் பற்றாக்குறை உள்ளது. இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மறுபுறம் சென்னையில் அதிகரித்துள்ள பப்கள் எனப்படும் இரவு நேர மதுவிருந்து பார்ட்டிகள் போக்குவரத்து போலீஸாருக்கு பெரிய தலைவலியையும், வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும் கொடுக்கிறது. இது போன்ற பார்ட்டிகளில் கலந்துகொண்டு தங்களது அதிவேக சொகுசு காரில் போதை தரும் தைரியத்தில் வாகனம் ஓட்டும் இளைஞர்கள், பெரிய மனிதர்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.

இவ்வாறு நடந்த பல விபத்துகளை உதாரணமாக சொல்லலாம். மிகப்பெரும் செல்வந்தர் மகன் ஷாஜி என்பவர் தனது சொகுசு காரில் தறிகெட்டு வந்து மோதியதில் எழும்பூர் அருகே தன் பாட்டியுடன் உறங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுவன் உயிரிழந்தான். ஆடி காரில் தோழிகளுடன் நள்ளிரவு மதுவிருந்து முடிந்து வேகமாக சென்ற ஐஸ்வர்யாவின் கார் மோதி முனுசாமி என்பவர் உயிரிழந்தார். தப்பி ஓடிய ஐஸ்வர்யா மடக்கி பிடிக்கப்பட்டார்.

பிரபல நடிகரின் மகள் நள்ளிரவு விருந்து முடிந்து வீடு திரும்பும் போது ஆட்டோ மீது மோதியதில் சமரசம் மூலம் வழக்கை முடித்தனர். கார் பந்தய வீரர் விக்னேஷ் மதுவிருந்து முடிந்து ஆர் கே சாலையில் வேகமாக வந்து மோதியதில் 6 ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஆறுமுகம் என்ற ஆட்டோ டிரைவர் பலியானார்.

அஷ்வின் என்ற கார் பந்தய வீரரின் அதிவேக கார் கிரீன்வேஸ் சாலையில் மரத்தில் மோதியதில் மனைவியுடன் உயிரிழந்தார். அவர் போதையில் இல்லாவிட்டாலும் வேகம் உயிரைப் பறித்தது. நடிகர் அருண் விஜய் மது போதையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் போலீஸ் வாகனத்தின் மீதே மோதினார். கடந்த வாரம் நடிகர் ஜெய் மது போதையில் அடையாறு பாலத்தில் மோதினார்.

இது தவிர மோட்டார் சைக்கிள் ரேஸ் விட்டு விபத்தில் சிக்கிய இளைஞர்கள் ஏராளம். இவர்களை கண்காணிக்க மடக்கி பிடித்து சோதனை செய்து நடவடிக்கை எடுக்க காவலர் எண்ணிக்கையும் துணிவும் உள்ளதா என்பதே கேள்விக்குறி என்கிறார் ஜெமினி அருகே ஆட்டோ ஓட்டி வரும் தாஜுத்தீன் என்ற ஓட்டுநர்.

அவரது அனுபவத்தை கேட்டபோது ”இரவு நேரத்திலும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நேரத்திலும் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸார் இணைந்து வாகன சோதனை நடத்துகின்றனர். இது எந்த அளவுக்கு இது போன்ற விபத்துகளை தடுக்க உதவுகிறது.

சாதாரண இளைஞர்களை பணி முடித்து வீடு திரும்பும் நபர்களிடம், ஆட்டோ ஓட்டுநர்களிடம் சோதனை கடுமையாக இருக்கிறது. ஜெமினி பாலம் அருகே வாருங்கள் அங்கு இரண்டு நட்சத்திர ஓட்டல்களில் நள்ளிரவு பார்ட்டி முடிந்து வேகமாக பறக்கும் எத்தனை வாகனங்கள் சோதனைக்குள்ளாக்கப்படுகிறது பாருங்கள் என்றார். இவ்வாறு சோதனை நடந்தால் அப்புறம் ஏன் சொகுசு கார்கள் விபத்து சென்னையில் அதிகரிக்காது” என்று கேட்டார்.

இது பற்றி காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: ”

நீங்கள் சொல்லும் விஷயங்கள் இருந்தன. ஆனால் புதிய மோட்டார் வாகன சட்டம் வந்த பிறகு கடுமையாக நடவடிக்கை எடுக்கிறோம். முன்பெல்லாம் மது அருந்தி வாகனம் ஓட்டுபவரை மருத்துவமனைக்கு அனுப்பி சோதனை நடத்துவோம். அவர்கள் இடையில் தங்கள் செல்வாக்கை காட்டி தப்பிப்பார்கள்.

தற்போது கையடக்க சோதனை கருவி வந்துவிட்டது. ஓட்டுநர் ஊதியவுடன் மது அளவு அவருடைய அனைத்து விபரங்களையும் பதிவு செய்து அது ஆன்லைனில் பதிவாகிவிடும். பின்னர் நாங்களே நினைத்தாலும் மாற்ற முடியாது. சென்னையில் கடந்த ஆண்டு மது அருந்தி வாகனம் ஓட்டி சிக்கியவர்கள் எண்ணிக்கை பத்தாயிரக்கணக்கில் வரும். தற்போது விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. விரைவில் எல்லாம் சரியாகும்” என்று தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களில் இருப்பது போன்று இதுபோன்ற வேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் போலீஸ் கேமராக்கள் சென்னையில் இல்லாததும் இது போன்ற நபர்களுக்கு வசதியாகி விடுகிறது.

சென்னையில் முறையாக கண்காணிப்பு கேமராக்களை நிறுவி அவைகளை இணைக்கும் நெட்வொர்க் உருவாக்கப்பட வேண்டும் அப்போது தான் சாலை விபத்தை ஏற்படுத்தி தப்பிக்கும் வாகனங்களையும் மதுபோதையில் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கும் நபர்களையும் பிடிக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024