Monday, October 16, 2017

தீ
பாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு இவற்றுக்கு அடுத்ததாக நம் நினைவுக்கு வருபவை அதிரசம், முறுக்கு, தட்டை, சோமாஸ், குளோப்ஜாமூன், ரவா லட்டு போன்ற பலகாரங்கள்தான். ஆனால், இன்றைய பரபரப்பான நவீன வாழ்க்கை முறையில் பலருக்கும் பலகாரங்கள் செய்வதற்கு நேரம் இருப்பதில்லை. கடையில் விற்கப்படும் பலகாரங்களில் வீட்டுச் சுவை இருப்பதில்லை. இந்தச் சூழலில் இது போன்ற பலகாரங்களைச் செய்து விற்பதைப் பல பெண்கள் வெற்றிகரமான தொழிலாக மாற்றியுள்ளனர்.

கைமுறுக்கு ஆயிரம்
சுவைமிக்க தீபாவளிப் பலகாரங்களைச் செய்து பலரிடமும் பாராட்டைப் பெறுபவர் திருச்சி நகரைச் சேர்ந்த யமுனா தேவி. சூடான எண்ணெயில் பலகாரத்தைப் பொரித்தபடியே பேசினார்.
“கண் பார்த்தால் கை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அதுபோலத்தான் நானும் என் அம்மா செய்வதைப் பார்த்துப் பார்த்தே பலகாரங்களைச் செய்யச் கற்றுக்கொண்டேன். முன்பெல்லாம் வீட்டில் உள்ளவர்களுக்காகத்தான் தீபாவளியின்போது பலகாரங்களைச் செய்வோம். அவற்றை அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுப்பது வழக்கம். நான் செய்யும் பலகாரங்கள் நன்றாக இருப்பதாகப் பலர் பாராட்டுவார்கள்.
அதனால் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு என்னைப் பலகாரம் செய்துதரச் சொல்வார்கள். அப்படித்தான் தொடங்கியது என் தீபாவளிப் பலகார விற்பனை” என்கிறார் யமுனா தேவி.
ஒவ்வோர் ஆண்டும் யமுனா தேவிக்குத் தீபாவளியின்போது மட்டும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் கிடைக்கின்றனவாம். ஒவ்வொரு தீபாவளியின் போதும் கைமுறுக்கு, அதிரசம், சோமாஸ், சீடை ஆகியவற்றை ஆயிரக்கணக்கில் செய்து குவிக்கிறார் அவர். ஆனால், இத்தனை பலகாரங்களையும் தனியாளாகவே செய்கிறார். பலகாரம் செய்ய முன்பணம் வாங்காமல் பெரும்பாலும் தன்னுடைய கைக்காசைப் போட்டே பொருட்களை வாங்குகிறார்.
“ஆர்டர் கொடுப்பவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்பதால் பொதுவாக யாரிடமும் அட்வான்ஸ் வாங்குவதில்லை. சிலர் மட்டும் கொடுப்பார்கள். ஆனால், அட்வான்ஸ் கொடுக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு என்னென்ன பலகாரங்கள் தேவையோ அவற்றைச் செய்து கொடுத்துவிட்டு இறுதியாகப் பணம் வாங்கிக்கொள்வேன்” என்கிறார்.
தேவி
கைமுறுக்குதான் யமுனாவின் ஸ்பெஷல். ஆயிரக்கணக்கில் கைமுறுக்கு ஆர்டர் கொடுத்தாலும் தனியாளாக உட்கார்ந்து கைகளாலேயே முறுக்கு சுற்றி, சுட்டெடுக்கிறார். “நான் செய்யும் கைமுறுக்கை வாங்க நிறையப் பேர் ஆர்டர் கொடுப்பார்கள். அதேபோல் எங்கள் வீட்டின் அருகில் குடியிருந்த சிலர் தற்போது வெளிநாட்டில் உள்ளனர்.
அவர்கள் திருச்சிக்கு வரும்போதும் என்னிடம் பெரிய அளவில் கைமுறுக்கு ஆர்டர் கொடுப்பார்கள். அதற்காக எல்லாம் விலையை ஏற்றுவதில்லை. அரிசி மாவு, தேங்காய், நெய், எண்ணெய் ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
அதற்கு ஏற்ற மாதிரி விலையை நிர்ணயம் செய்வேன். நூறு முறுக்கு செய்தால் அதில் எனக்கு நூறு ரூபாய்தான் கிடைக்கும்” என்கிறார்.

பக்குவமே ஆதாரம்

அச்சு அசலாக வீட்டில் செய்யப்படும் அதே சுவையுடன், எந்தவிதக் கலப்படமும் இல்லாமல் தீபாவளிப் பலகாரங்களை செய்வதால் சென்னை போரூர் பகுதியில் பிரபலமானவர் தேவி. மழலையர் பள்ளி நடத்திவரும் தேவி, சமையல் மீதுள்ள ஆர்வத்தால் விதவிதமான பலகாரங்களைச் செய்து அசத்திவருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக முறுக்கு, ரிப்பன் பக்கோடா, மிக்சர் போன்ற கார வகைகளையும் அல்வா, பாசிப்பருப்பு உருண்டை, ரவா லட்டு போன்ற இனிப்பு வகைகளையும் செய்துவருகிறார் தேவி. “வீட்டு சூழ்நிலைக்காகப் பல வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது என் சமையல் அறிவை மூலதனமாகப் பயன்படுத்தி இனிப்பு, கார வகைகளைச் செய்து விற்கத் தொடங்கினேன். கையில் இருந்த சேமிப்பைப் போட்டுத்தான் இந்தத் தொழிலை ஆரம்பித்தேன்” என்கிறார் அவர்.
தேவி செய்யும் பலகாரங்களில் செயற்கை மணமூட்டிகள், சுவையூட்டிகள் போன்றவற்றைச் சேர்ப்பதில்லையாம். “என்னிடம் ஆர்டர் கொடுப்பவர்கள் பலகாரங்கள் வீட்டில் செய்ததுபோல் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்தான் கொடுக்கிறார்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காக அஜினோமோட்டோ, சோடா மாவு போன்றவற்றைச் சேர்ப்பதே இல்லை. அதேபோல் செக்கு எண்ணெயைத்தான் பயன்படுத்துவேன்.
இதுவரை ஒரு விளம்பரப் பலகையைக்கூட நான் வைத்தது கிடையாது. ஒருவர் மற்றவரிடம் சொல்லி, அவர் இன்னொருவருக்குச் சொல்லி இப்படித்தான் எனக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள். வீட்டுப் பலகாரங்களுக்கான தேவை எப்பொழுதும் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்குக் குறைவில்லை” என்று சொல்கிறார் தேவி.

சிறுதானிய பலகாரம்

பொதுவாக எல்லோரும் பச்சரிசியைப் பயன்படுத்தி முறுக்கு, அதிரசம் ஆகியவற்றைச் செய்வார்கள். ஆனால், தருமபுரியைச் சேர்ந்த பிரியா, மாப்பிள்ளைச் சம்பா, வாசனை சீரக சம்பா, குள்ளக்கார் அரிசி, அறுபதாம் குறுவை, தூய மல்லி ஆகிய பாரம்பரிய அரிசி வகைகளைப் பயன்படுத்தி, பலகாரங்களைச் செய்து விற்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளாகக் கணவர் பாவண குமாருடன் சேர்ந்து இந்தத் தொழிலைச் செய்துவருகிறார் பிரியா.
பிரியா
“தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் நாங்கள் இதைச் செய்துவருகிறோம். பாரம்பரிய உணவு முறைக்கு மாறுவது என் குழந்தைகளுக்குச் சற்றுக் கடினமாக இருந்தது. அவர்களுக்காகத்தான் முதலில் பாரம்பரிய அரிசி வகைகளில் முறுக்கு, அதிரசம், தட்டை போன்ற தின்பண்டங்களைச் செய்து கொடுத்தேன். குழந்தைகள் அவற்றை விரும்பிச் சாப்பிட்டனர்.
அப்போதுதான் இதைக் கொஞ்சம் விரிவுபடுத்திச் செய்யலாம் என்ற யோசனை வந்தது” என்கிறார் அவர். தற்போது ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர் எடுத்துப் பலகாரங்களைச் செய்து விற்கிறார். கேழ்வரகு மிக்சர், சாமை மிக்சர் போன்ற சிறுதானிய தின்பண்டங்களையும் செய்கிறார். அதேபோல் கடலை உருண்டை, முந்திரி மிட்டாய், தேங்காய் மிட்டாய் போன்றவற்றையும் செய்துவரும் இவரது சிறப்பு உணவு கருப்பட்டி அல்வா.
பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகள் பானிபூரி, பேல்பூரி உள்ளிட்ட சாட் உணவுகளுக்கு மத்தியில் முறுக்கு, அதிரசம், தட்டை போன்ற வீட்டுப் பலகாரங்களைச் சுவையாக செய்துகொடுத்தால் மக்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பதை நிரூபிக்கிறது இந்தப் பெண் தொழில்முனைவோரின் வெற்றிக் கதை.
படங்கள்: ம.பிரபு, ஜி.ஞானவேல்முருகன்

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...