Sunday, May 1, 2016

மே 1 - அஜித் குமார் 44-வது பிறந்ததினம்


மே 1 - அஜித் குமார் 44-வது பிறந்ததினம்

செலவிலான விளம்பரங்களுடன் வெளியாகும் பல படங்கள் விளம்பரச் செலவைக்கூட வசூலிப்பதில்லை. ஆனால், அஜித் படம் என்றால் விளம்பரம் குறைவாகத்தான் இருக்கும்; வசூலோ கோடிகளை அள்ளும். காரணம் அஜித் மட்டுமே!

பெரும் எப்போது அஜித் கால்ஷீட் தேதிகள் கிடைக்கும் என்று பல தயாரிப்பாளர்கள் ஏங்கிவருகிறார்கள். காரணம் அவர் நடிக்கும் படங்களின் வசூல். ஒரு படம் ஒப்புக்கொண்டால் அதில் அஜித் காட்டும் ஈடுபாடு மிகவும் அலாதியானது. ‘வேதாளம்' படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பின்போது காலில் அடிப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியபோது, படப்பிடிப்பை முழுக்க முடித்துவிட்டுதான் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தற்போது ‘வேதாளம்' படத்தின் அணியுடன் மீண்டும் இணையவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.

இணையத்தில் ஆதிக்கம்

சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்தும் ரசிகர் கூட்டங்களில் அஜித் ரசிகர்கள் அதிகம். அஜித் படத்தைப் பற்றி ஒரு செய்தி வெளியிட்டால் கண்டிப்பாக அது முதன்மை பெறும். காரணம், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு. அவருடைய திருமண நாள், மகள் - மகன் பிறந்த நாள் என எதுவாக இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்வார்கள். தனது மகனுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அந்த அலுவலகம் வந்த நாளில், இணையத்தை அஜித் மகன் புகைப்படங்களே ஆட்கொண்டன.

சர்ச்சைகளும் அஜித்தும்

அஜித்தை ரசிகர்கள் பெரும்பாலும் திரையில் மட்டுமே காண முடியும். தனது படத்தின் இசை வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே அஜித் தலைகாட்டுவதில்லை என்பது ரசிகர்களின் தீராத ஆவலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதுவே அவருடைய படங்களின் பெரிய வசூலுக்கு ஒரு காரணம் என்று விநியோகஸ்தர் ஒருவர் சொல்கிறார். அஜித்தைப் பற்றித் தவறாகவோ கிண்டலாகவோ யாராவது பேசினாலோ எழுதினாலோ மொத்த ரசிகர்களும் ஒன்றிணைந்து திட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

பொதுவாகத் திரையுலகில் எல்லாத் தரப்பிலும் நல்ல பெயர் எடுத்திருக்கும் அஜித், சில சமயம் சர்ச்சைகளிலும் மாட்டிக்கொள்கிறார் எனலாம். சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலின்போது, போட்டியிட்ட இரண்டு அணியினரும் அவரைச் சந்திக்க வேண்டும் என்றபோது அஜித் யாரையும் சந்திக்கவில்லை. காரணம், தனக்கு ஒரு பிரச்சினை என்று வந்தபோது நடிகர் சங்கத்தினர் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை என்ற வருத்தம்தான் என்கிறார்கள். நட்சத்திர கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட விஷயங்களுக்காகப் பேசியபோதுகூட அஜித் யாரையும் சந்திக்க விரும்பவில்லையாம். கிரிக்கெட் போட்டிக்கான அழைப்பிதழைக்கூட அவர் வீட்டின் காவலாளியிடம்தான் கொடுக்க முடிந்ததாகக் கூறுகிறார்கள்.

தன்னைச் சுற்றி எழும் சர்ச்சைகளில் அஜித் பொதுவாகக் கருத்து தெரிவிப்பதில்லை. அதே சமயம், சர்ச்சைகளுக்குத் தூபம் போட்டு வளர்க்கும் விதத்தில் எதையும் செய்வதும் இல்லை. கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற விருந்தில் ஒலித்த அஜித் பாடலை விஷால் நிறுத்தினார் என்ற சர்ச்சை எழுந்தபோது அவரிடம் போய் அதைச் சொல்லியிருக்கிறார்கள். “நீங்கள் அங்கிருந்தீர்களா, இல்லையென்றால் அங்கிருந்தவர்கள் சொன்னார்களா?” என்று கேட்டிருக்கிறார் அஜித். “இல்லை… செய்தி வெளியாகி யிருக்கிறது” என்ற கூற “Leave it” என்று சொல்லிவிட்டாராம் அஜித்.

“பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா'வில் அஜித் பேசியது சர்ச்சையான பிறகுதான் அவர் நிறைய மாறிவிட்டார் என்கிறார்கள். ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். தான் உண்டு, தனது வேலை உண்டு என்று இருக்க ஆரம்பித்தவுடன் அவரது புகழ் மேலும் உயர்ந்து வருகிறது” என்று அஜித்தின் நண்பர்கள் சொல்கிறார்கள்.

மவுனமே ஆயுதமா?

கடின உழைப்பு, ரசிகர்களின் மகத்தான ஆதரவு என அவரைச் சுற்றி பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் சமீபத்திய சர்ச்சைகளுக்கு மவுனமே பதில் என்பது சரியானதில்லை என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது. நடிகர் சங்கத் தேர்தல், நடிகர் சங்கக் கடன் ஆகிய விஷயங்களில் ஒரு நடிகராக அஜித் மவுனத்தை மட்டுமே தனது பங்களிப்பாகத் தருவது சரியல்ல என்று பலர் கருதுகிறார்கள்.

அஜித்தின் திரைப்படங்கள் குறித்தும் ஒரு விமர்சனம் உள்ளது. பெருந்திரளான ரசிகர்களும் பெரும் வசூலுக்கான உத்தரவாதமும் கொண்ட அஜித் வித்தியாசமான முயற்சி எதிலும் ஈடுபடுவதில்லை. நடிக்கத் தொடங்கியபோது வித்தியாசமான பாத்திரங்களின் மீதும் நுட்பமான நடிப்பின் மீதும் அவருக்கு இருந்த ஆர்வம் இப்போது காணாமல் போய்விட்டது. வசூல் நாயகனாக மட்டும் இருந்தால் போதும் என்று அவர் நினைக்கிறாரா? இந்தித் திரையுலகில் மாபெரும் சூப்பர் ஸ்டார்கள்கூட அவ்வப்போது வித்தியாசமான, அர்த்தமுள்ள முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அவை வெற்றியும் பெறுகின்றன. அதுபோன்ற முயற்சிகளில் அஜித் ஏன் ஈடுபடுவதில்லை என்னும் கேள்வியும் எழுகிறது.

எப்படியிருப்பினும் அஜித்தின் கலையாத மவுனம், திரையுலகில் தனித்த, நிகழ்காலப் பண்பாளர்களில் ஒருவராக அடையாளம் காட்டுவதை அவரது போட்டியாளர்கள் கூட ஒப்புக்கொள்கிறார்கள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித்!

அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ப்ளஸ், மைனஸ் என்ன என்பதைப் பட்டியலிட்டுங்கள் என 'தி இந்து' தமிழ் இணையத்தில் கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கு வாசகர்கள் தங்களுடைய பதில்களைக் குவித்திருந்தார்கள். அவற்றில் தேர்ந்தெடுத்த சில..

ரமேஷ்குமார்:

பலம்: தனித்தன்மை - மற்ற சக நடிகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட பார்வை, முன்மாதிரி - சினிமா ஒரு தொழில் என்பதை உணர்ந்த , உணர வைத்த மனிதர், பெப்சி பிரச்சினையில் தொழிலாளர் பக்கம் நின்று தோள்கொடுக்கும் தன்மை, தைரியம் - முதல்வர் முன் நின்று தனது பார்வையையும் வேண்டுகோளையும் வைத்தவர், அழகானவர், ஆனால் அழகை மட்டும் நம்பிச் செயல்படாதவர் (salt & pepper look), தோல்விகளில் துவளாதவர், மிகப் பெரிய ரசிகர் வட்டம் கொண்டவர்.

பலவீனம்: நடனம் மற்றும் உடல்வாகு - முதுகுத் தண்டுவடம் ஆபரேஷன் ஒரு காரணம். எளிதில் தொடர்புகொள்ள முடியாத நிலை, ஹீரோயிஸம் சார்ந்த கதைகளில் மட்டும் நடிப்பது. புது முயற்சி இல்லாமை.

தினேஷ்:

ப்ளஸ் - நல்ல மனிதர், பிறருக்கு உதவி செய்து அதை ரசித்து பார்க்கும் குணம், ஸ்டைல் & மாஸ், படத்தில் வரும் சிறப்பு வாய்ந்த வசனங்கள்.

மைனஸ்: சமீபத்திய மவுனம், ஃபிட்னெஸ்.

கோவர்தனன்:

ப்ளஸ்: தமிழ் சினிமா நடிகர்களில் தன் சுயலாபத்துக்காக ரசிகர்களைப் பணயம் வைக்காதவர். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வெற்றி இயக்குநர்களாக்கியவர். தன் தவறுகளிலிருந்து பாடம் கற்றவர். தன் கீழே பணிபுரிபவரையும் தனக்குச் சரிநிகராக நடத்துபவர். ஆதாரம் இல்லாமல் எதையும் நம்பாதவர். யாரையும் எதிரியாக எண்ணாதவர். உதவும் உள்ளம்.

மைனஸ்: இது வேண்டுகோள். வளரும் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் விழியில் உங்களைப் பார்க்க ஆசை அல்லது ஆர்வம்.

புதிய இந்தியன்:

ப்ளஸ்: தன்னுடைய உண்மையான தோற்றத்தில் நடிப்பது, பந்தா இல்லாதது.

மைனஸ்: சில முக்கிய நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது.

சந்தோஷ்:

ப்ளஸ்: மிகப் பெரிய நடிகராக இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் தன்னடக்கத்துடன் இருப்பது, ரசிகர்ளைத் தங்களின் குடும்பத்தை கவனிக்கச் சொன்னது, யாருக்கும் தெரியாமல் உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்வது

மைனஸ்: தன்னைப் பற்றி வரும் தவறான தகவலுக்கு மறுப்புத் தெரிவிக்காமல் இருப்பது, ரசிகர்களின் தவறான போக்கைக் கண்டிக்காமல் இருப்பது (நல்லது செய்ய சொல்லிருக்கிறார்; ஆனால் எல்லை மீறும்போது கண்டித்தது இல்லை), எல்லாவற்றையும் விட்டு விலகியே இருப்பது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024