கர்ப்பப்பைக்கு பதில் தலைக்கு 'சிடி ஸ்கேன்': ஆப்பரேட்டரான துப்புரவு ஊழியர்
பதிவு செய்த நாள்10அக்
2017
02:03
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் 'சிடி ஸ்கேன்' பிரிவில் பணிபுரியும் துப்புரவு பெண் ஊழியர், ஸ்கேன் ஆபரேட்டர் வேலை பார்த்து,சென்னையை சேர்ந்த பெண்ணுக்கு கர்ப்பப்பைக்கு பதிலாக தலைக்கு சிடி ஸ்கேன் எடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், சூராணம் அருகே உள்ள சங்கனி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், சென்னையில் கார் டிரைவராக வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி செல்வி, 44. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். பரிசோதித்த டாக்டர்கள் 'சிடி ஸ்கேன்' எடுக்க பரிந்துரைத்தனர்.
இந்நிலையில் சூராணம் வந்த செல்வி, செப்.25ல் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு 'சிடி ஸ்கேன்' எடுக்க சென்றார். அங்கு டாக்டர் இல்லாததால், பணியில் இருந்த துப்புரவு பெண் பணியாளர் சிடி ஸ்கேன் ஆபரேட்டராக செயல்பட்டுள்ளார். அப்போது அவர் அலைபேசியில் யாரிடமோ பேசியபடி, செல்விக்கு ஸ்கேன் எடுத்துள்ளார். பின்னர் ஸ்கேன் ரிசல்ட்டை ஒரு வாரம் கழித்து வாங்கிக் கொள்ளுமாறு கூறி, செல்வியை அனுப்பிவிட்டனர்.இதையடுத்து செல்வி, தனது ஊரைச் சேர்ந்த மங்கையர்கரசி என்பவரிடம் 'சிடி ஸ்கேன்' எடுக்க ரூ.500 கட்டணம் செலுத்தியதற்கு வழங்கிய'பில்'லை கொடுத்து, 'சிடி' ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கி அனுப்பும்படி கூறிவிட்டு சென்னைக்கு சென்று விட்டார்.இதையடுத்து மங்கையர்கரசி, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வந்து செல்வியின் 'சிடி ஸ்கேன்' ரிப்போர்ட்டை கேட்டுள்ளார்.
அவர் வழங்கிய 'பில்'லையும், 'சிடி ஸ்கேன்' ரிப்போர்ட்டையும் ஒப்பிட்டு பார்த்த சிடி ஸ்கேன் அலுவலர் அதிர்ச்சியடைந்துள்ளார். செல்வியின் கர்ப்பப்பைக்கு பதில் தலைக்கு 'சிடி ஸ்கேன்' எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.இதை மங்கையர்கரசியிடம் தெரிவிக்காமல், 'செல்விக்கு சரியாக ஸ்கேன் பதிவாகவில்லை; அவரை மீண்டும் ஒருமுறை ஸ்கேன் எடுக்க வரச்சொல்லுங்கள்,' என்று மட்டும் கூறி அனுப்பி விட்டனர்.
இதுகுறித்து சென்னையில் வசிக்கும் செல்வி கூறியதாவது: ஸ்கேன் எடுக்கும்போது முகத்தை துணியால் மூடி இயந்திரத்திற்குள் படுக்க வைத்தனர். அதனால் எந்த இடத்தை ஸ்கேன் எடுக்கிறார்கள் என அப்போது தெரியவில்லை. இப்போது திரும்பவும் ஸ்கேன் எடுக்க வரச்சொல்கிறார்கள். இதற்காக நான் சென்னையில் இருந்து மீண்டும் சிவகங்கைக்கு வரமுடியாத நிலையில் உள்ளேன் என்றார்.
இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., குழந்தையானந்தனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:'சிடி ஸ்கேன்' எடுத்தபோது, பணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கப்பட்டிருக்கும். அதை நோயாளியோ, அவரது உதவியாளரோ கொண்டு வந்து காண்பித்தால், அந்த
தேதியில் பணியில் இருந்தவர் யார் என விசாரித்து, டீன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment