Tuesday, October 10, 2017

கத்தியுடன் கல்லூரி மாணவர்களின், 'அட்டகாச' வீடியோ
ரயில் நிலையத்தில், கல்லுாரி மாணவர்கள் கத்தியுடன் திரிவதுடன், பட்டாசு வெடித்து பயணியரை அலறடிக்கும், வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வெளியானதால், ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் உஷாரடைந்து உள்ளனர்.

கத்திகளை உரசி

புறநகர் பகுதியில் இருந்து, சென்னையில் உள்ள கல்லுாரிக்கு படிக்க வரும் மாணவர்கள், ரயில் தினம் கொண்டாடுவதாக கூறி, அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர், நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில், மாணவர்கள் கத்திகளுடன் சுற்றுவது, பிளாட்பாரத்தில் கத்திகளை உரசி, தீப்பொறி ஏற்படுத்துவது, கூட்டத்தில் பட்டாசு வெடித்து, பயணியரை அலறடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.

பரபரப்பு

மேலும், 'ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்' என, பரபரப்பை ஏற்படுத்தி, ரயில் பயணியரை எரிச்சலடையச் செய்துஉள்ளனர். இதை, தங்களுடன் படிக்கும் கல்லுாரி மாணவர்களுக்கு காட்டுவதற்காக, வீடியோ பதிவு செய்த அவர்கள், சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். 

இக்காட்சிகள், வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

இதை பார்த்த, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள், கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இவர்கள், திருவள்ளூர் மற்றும் நெமிலிச்சேரி ரயில் நிலையங்களை தொடர்பு கொண்டு விசாரித்த போது, கல்லுாரி மாணவர்கள் என்பதால் கண்டு கொள்ளாமல் இருந்ததாக, தகவல் கிடைத்து உள்ளது.

மூன்று வீடியோக்கள்

இந்த வீடியோ காட்சிகள், யாரால் வெளியிடப்பட்டுள்ளது என, வலைதளங்களில் ஆராய்ந்ததில், பாரதிராஜா என்ற மாணவரின், 'பேஸ்புக்'கில், 7ம் தேதி பதிவேற்றப்பட்டது தெரியவந்தது. மூன்று வீடியோக்களை பதிவேற்றியுள்ள அவர், 'இது தான் நாங்க, இப்படித்தான் நாங்க' என்ற தலைப்பில், பதிவு செய்திருந்தார்.

நான்கு பேர் கைது

இது குறித்த போலீசார் விசாரித்து வந்த போலீசார், ஜெகதீசன், 18, தண்டபாணி, 20, கிருஷ்ணன், 18, யுவராஜ், 18, ஆகிய நான்கு பேரை, நேற்று கைது செய்துள்ளனர். இவர்கள், பிரசிடென்சி மற்றும் தியாகராஜா கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024