குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட 'பரோல்' கேட்டு கைதிகள் விண்ணப்பம்
பதிவு செய்த நாள்
14அக்2017
02:56
குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட, 'பரோல்' கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில், சென்னை, மதுரை என, ஒன்பது மத்திய சிறைகள் உட்பட, 133 சிறைகள் உள்ளன. இதில், மரண தண்டனை, ஆயுள் தண்டனை என, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த கைதிகள், உறவினர்களின் உடல் நலக்குறைவு, உறவினர்களின் இறப்பு உள்ளிட்டவைகளுக்கு, பரோல் கோரி விண்ணப்பிப்பர். பின், சிறையில் உள்ள, நன்னடத்தை பிரிவு அதிகாரி சான்று அளித்தால், பரோல் வழங்கப்படும்.
அதேபோல், சிறப்பு சலுகை அடிப்படையில், பண்டிகை காலங்களிலும், கைதிகள், பரோல் கோரி விண்ணப்பிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு, தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இது குறித்து, சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கைதி ஒருவர், ஆண்டுக்கு ஒரு முறை ஆறு நாட்கள், பின், மூன்று முறை, மூன்று நாட்கள் என, மொத்தம், 15 நாட்கள் பரோலில் செல்லலாம். உதாரணத்திற்கு, ஒரு கைதிக்கு, ஐந்து நாட்கள் பரோல் அளித்தால், அவர் வீட்டுக்கு செல்லும் நாள், சிறைக்கு திரும்பும் நாள் கணக்கில் அடங்காது. அது, போக்குவரத்து நாளாக கருதப்படும். தீபாவளியை காரணம் காட்டி, மதுரை மத்திய சிறை கைதிகள், 150 பேர் உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் விண்ணப்பித்துள்ளனர். பரோல் அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். எத்தனை கைதிகளுக்கு பரோல் என்பது, தீபாவளிக்கு முந்தின நாள் தான் இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment