Sunday, October 15, 2017

கலாமுக்கு நம் சலாம்! இன்று பிறந்த நாள்

கலாமுக்கு நம் சலாம்! இன்று பிறந்த நாள்
ஏழை குடும்பத்தில் பிறந்து, தினசரி நாளிதழ்களை அதிகாலையில் வீடுகளுக்கு வினியோகிக்கும் சிறுவனாய் வளர்ந்து, கல்வி கற்க பல மைல் துாரம் நடந்து, சிவசுப்பிரமணிய ஆசிரியரின் பாடசாலையில், பைலட்டாக வேண்டும் என்ற கனவினை வளர்த்து, ராக்கெட் இன்ஜினியராக பயணித்து, தேசத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பரிணமித்து, உழைப்பின் உன்னதத்தால், நம் தேசத்தில் பதினோறாவது குடியரசுத் தலைவராக, குன்றின் மேலிட்ட விளக்காய் உயர்ந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 86-வது பிறந்த நாள் இன்று.

இந்தியாவின் உயர்ந்த பதவியை அடைந்த பின்பும், தனது சுகங்களைத் துறந்து, கடைக் கோடியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் உதவ பாடுபட்ட மக்கள் ஜனாதிபதி.ராஷ்டிரபதி பவனை ஆராய்ச்சி சாலையாக மாற்றிய அற்புத விஞ்ஞானி.
“இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்துான்றும் துாண்”

என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப இன்பத்தை விரும்பாமல், செயல்படுதலையே விரும்பியவர். அதன்மூலம் நம் இந்திய தேசத்தின் துன்பங்கள் போக்கி நம்மைத் தாங்கி நின்ற துாணானார். ஆதலால்தான்,19-ம் நுாற்றாண்டின் சிறந்த மனிதர் சுவாமி விவேகானந்தர், 20-ம் நுாற்றாண்டின் சிறந்த மனிதர் மகாத்மா காந்தி, 21-ம் நுாற்றாண்டின் சிறந்த மனிதர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்று ஆந்திரப்பிரதேச சட்டசபை புகழ்மாலை சூட்டியது.

மாணவர்களுக்கு கவிதை

இளைஞர்களிடம் குறிப்பாக உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடம் பேசுவது மிகவும் பிடிக்குமென்று சொல்லும் மாணவர்களின் எழுச்சி நாயகர், அவர்களுக்கு ஒரு கவிதையைத் தந்திருக்கிறார். அக்கவிதையை நாமெல்லாம் இந்நாளில் உரத்த குரலில் வாசிக்கின்றபோது வாழ்வில் உயரவேண்டும் என்ற லட்சியம் உயிர்த்தெழும். அப்துல் கலாமின் ஆத்மாவும் மகிழ்ச்சியுறும்.

“நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்,
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,
நான் பிறந்தேன் கனவுடன், 
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த,
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்,
நான் பிறந்தேன் என்னால் முடியும் 
என்ற உள்ள உறுதியுடன்,
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்,
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்,
பறப்பேன், பறப்பேன், 
வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்”
வாழ்வின் வெற்றிச் சூத்திரங்களைக் கடைபிடித்து உயர்ந்த தமிழ்ஞானி, ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றிபெற நான்கு வெற்றி சூத்திரத்தை தந்துள்ளார். முதலாவது மிகப்பெரிய லட்சியம் கொள், அந்த லட்சியத்தை அடைய அறிவாற்றலைத் 
தொடர்ந்து பெருக்கு, கடினமாக உழை, நான்காவது விடா முயற்சி.

வாட்சன் எழுதிய “விளக்குகள் பல தந்த ஒளி” என்னும் புத்தகம் அவரது தோழன். அவரது பார்வையில் புத்தகம் என்பது நமது பழைய காலத்தை நினைத்துப் பார்த்து, நிகழ்காலத்தின் அனுபவம் கொண்டு எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு சக்தி. ஒரு அறிவார்ந்த சமூகமாக நம் நாடு மாற நாம் வரலாற்றையும், பூகோளத்தையும், கலாசாரத்தையும், கலையையும், அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் நல்ல புத்தங்களின் மூலம் கற்றுத் தேரவேண்டும் என அழுத்தம் திருத்தமாக சொல்கிறார், நம் தேசத்தின் அறிவியல் தந்தை.

காந்தியின் உதவியாளராக இருந்த கல்யாணராமன் அவர்களிடம் காந்திக்கு பின்பு பண்புகள் நிறைந்த ஒரு மனிதர் இந்தியாவில் தோன்றவில்லையே என்று கேட்ட போது, ஏன் இல்லை? அப்துல் கலாம் இருக்கிறாரே என்று இந்தியாவின் இரண்டாவது மகாத்மாவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

“கணத்திற்கு கணம், நீண்ட நாள் முழுவதும், நேர்மையாய், துணிவாய், உண்மையாய் உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்” என்று உழைப்பை உயர்த்திய நவீன சாக்ரடீஸ்.
2007-ம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழ் சங்க இலக்கியமான புறநானுாற்றில் கனியன் பூங்குன்றனாரின் வைரவரிகளை மேற்கோள் காட்டி நான் இந்த உலகத்தின் குடிமகன். உலகில் பிறந்த அனைவரும் எனது உறவினர்கள் என்று விரித்துப் பொருளுரைத்து தமிழகத்தை வியந்து பார்க்க வைத்த தமிழ்த் துாதர்.

இயற்கையை நேசியுங்கள். அதன் ஆசிர்வாதங்களின் மீது அக்கறை காட்டுங்கள். பிறகு எங்கு பார்த்தாலும் தெய்வீகம் மிளிர்வதை நீங்கள் காண முடியும் என்று தனது ஜனாதிபதி இருக்கையின் கடைசி நாளான 2007 ஜூலை 24ல் எழுதிய அவர், இயற்கையின் ஓர் அங்கம்.
மண்ணிலே அணுகுண்டு சோதனை செய்து சாதனை, வானிலே ஏவுகணையைச் செலுத்தி சாதனை, விண்ணிலே செயற்கை கோளைச் செலுத்தி சாதனை என புவியின் மூவுலகிலும் சாதித்த ஒற்றைச் சாதனையாளர்.

போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோலையும், இதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவியையும், கண்டுபிடித்து (கலாம் ஸ்டென்ட்) அவர்கள் ஒவ்வொருவரின் கால்களிலும், இதயங்களிலும், துாணாகவும், துடிப்பாகவும் நின்றவர்.
“கனவு காணுங்கள்” என்னும் ஒற்றை வரியில் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒன்றிணைத்த அப்துல் கலாமுக்கு நம் சலாம்.ஆர்.திருநாவுக்கரசு, ஐ.பி.எஸ்.,காவல் துணை ஆணையாளர் 
நுண்ணறிவுப் பிரிவு, சென்னைthirunavukkarasuips@gmail.com
Advertisement

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...