Tuesday, October 10, 2017

புறநகர் ரயிலில் ஆயுத பூஜை கொண்டாட்டம் வீச்சரிவாளுடன் பட்டாசு வெடித்து கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்; சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

2017-10-10@ 01:10:06




சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து அக்.7ம் தேதி பகல் 2.20 மணிக்கு திருத்தணி நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் ஆயுதபூஜை கொண்டாடி உள்ளனர். அப்போது உருட்டுக்கட்டை, கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களுடன் மாணவர்கள் பயணித்துள்ளனர். பெட்டியில் இருந்த பயணிகளை விலகி நிற்கச் சொல்லி மிரட்டியுள்ளனர். மேலும், படியில் வரிசையாக நின்று கொண்டு வழியில் உள்ள ரயில்நிலையங்களில் ரயிலுக்காக நிற்கும் பயணிகளை மிரட்டும் வகையில் ஆயுதங்களை பிளாட்பாரத்தில் தேயித்தப்படியும், அவர்களை ஆபாசமாகவும் திட்டி கொண்டும் சென்றனர். அதனால் பயந்து போன பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். நெமிலிச்சேரி ரயில்நிலையத்தில் அந்த ரயில் வந்துநின்ற போது, 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணிகளை வீச்சரிவாள் காட்டி மிரட்டி விரட்டியதுடன், பிளாட்பாரத்தில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். பொதுவாக எல்லா ரயிலில் நிலையத்திலும் ரயில் 40 நொடிகள் வரை நின்று பயணிகளை இறங்கி விட்டு செல்வார்கள். ஆனால், மாணவர்களின் கொண்டாட்டத்துக்காக இந்த மின்சார ரயில் மட்டும் 2 நிமிடங்களுக்கு மேல் நின்று சென்று உள்ளது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கலைக்கல்லூரி மாணவர்கள் இப்படி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்சிகள் அடங்கிய வீடியோ நேற்று வாட்ஸ் ஆப், முகநூல் ஆகியவற்றில் வைரலாக பரவியது. மாணவர்களின் வெறியாட்ட காட்சிகளை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரயில்வே காவல்துறையினருக்கும் நேற்று முன்தினம் சில பயணிகள் புகார் அனுப்பியுள்ளனர். ேநற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் நேற்று காலை ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். மேலும், சென்னை சென்ட்ரல், இந்துக்கல்லூரி, ஆவடி, திருநின்றவூர், நெமிலிச்சேரி ரயில் நிலையங்களில் நேற்று மாலை வரை ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகப்படும் 10 மாணவர்களை பிடித்து விசாரித்தனர். இதில், திருநின்றவூர் பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (19), திருவள்ளூரை சேர்ந்த விக்னேஷ் மற்றும் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் மாநில கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்துக்கல்லூரி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தபோது, பிடிப்பட்ட சிலர் இன்றும் கத்தியுடன் வந்திருந்தனர். அவர்களிடம் இருந்து கத்திகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அவர்கள் தங்களுக்கு சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியதுடன் சம்பவத்தில் எந்தக் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டார்கள் என்ற விவரங்களையும் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து பிடிப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து விசாரித்து வருகின்றனர். மேலும், ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் ரயில்நிலையங்களில், ரயில்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து திருச்சி ரயில்வே காவல் மண்டல எஸ்பியும், சென்னை ரயில்வே காவல் மண்டல தற்காலிக பொறுப்பு எஸ்பியுமான ஆனி விஜயா கூறுகையில், ‘இந்தச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.

மேலும் சம்பவம் மின்சார ரயில்களில் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினர் தலா 4 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சம்பவம் நடைபெற்ற சென்ட்ரலில் இருந்து பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கு செல்லும் ரயிலிலும், திருத்தணியில் இருந்து புறப்பட்டு சென்ட்ரலுக்கு காலை 8.10 மணிக்கு வரும் ரயிலிலும் அதிகளவில் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். அதனால் அந்த ரயிலில் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். சந்தேகத்தின் பேரில் சில மாணவர்களை பிடித்து விசாரித்து வருகிறோம். சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம்’ என்றார்.

கல்லூரி மாணவர்கள் மோதல் 

பஸ் கண்ணாடி உடைப்பு: ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி 27 எச் மாநகர பேருந்து நேற்று காலை 11 மணியளவில் புறப்பட்டது. பஸ் நுங்கம்பாக்கம் வழியாக அண்ணாநகருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அண்ணாநகர் பஸ் டிப்போவில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் ஏறினர். அதேபோல மற்றொரு பஸ் நிறுத்ததில் லயோலா கல்லூரி மாணவர்களும் ஏறினர். பேருந்து நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே வரும் போது ஒரு தரப்பு மாணவர்கள் பேருந்தில் பாட்டு பாடி ஆட்டம் போட்டுக் கொண்டு வந்தனர். இதனால் மற்றொரு தரப்பு மாணவர்கள் இதை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து லயோலா கல்லூரி சுரங்கபாதை அருகே வந்தபோது இரு தரப்பு மாணவர்களும் பேருந்திலேயே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்து கொண்டனர். இதை பஸ் கண்டக்டர் இரு தரப்பை சேர்ந்த மாணவர்களையும் கண்டித்தார். மேலும் பயணிகளின் அலறால் சத்தத்தால் பேருந்து ஓட்டுனர் சாலையிலேயே பேருந்தை நிறுத்தினார். உடனே பேருந்தில் இருந்து இறங்கிய மாணவர்கள் திடீரென சாலையில் இருந்த கற்களை எடுத்து பேருந்தின் பின்புற கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதில் கண்ணாடி உடைத்து பயணிகள் மீது சிதறியது. இதனால், அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடினர். இதையடுத்து மாநகர பேருந்து நடத்துனர் பாலசுப்பிரமணியன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024