Wednesday, October 25, 2017


70 வயது முதியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை....! - திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

தி.ஜெயப்பிரகாஷ்




கடந்த 2012-ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கில், தற்போது 70 வயதை அடைந்த முதியவர் ஒருவருக்கு திருப்பூர் நீதிமன்றம் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையை அடுத்துள்ள பெரியவாளவாடியைச் சேர்ந்தவர் திருமலைசாமி. இவரின் பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஜோதிடர் பாலகிருஷ்ணன். இவர்கள் இருவரின் வீட்டுக்கும் நடுவே சுற்றுச்சுவர் ஒன்று அமைந்திருக்கிறது. எனவே, அந்த சுற்றுச்சுவருக்கு யார் உரிமைதாரர் என்பதில் ஏற்கெனவே இருவருக்கும் பிரச்னை உண்டாகி, பின்னர் உடுமலை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்வரை சென்றுள்ளது.

இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு ஜோதிடர் பாலகிருஷ்ணன் அந்த சர்ச்சைக்குரிய சுற்றுச்சுவர்க்கு வர்ணம் அடித்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டுக்காரரான திருமலைசாமியின் மனைவி ஜோதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் இரு தரப்பினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட, அப்போது கோபமடைந்த ஜோதிடர் பாலகிருஷ்ணன், தன் வீட்டில் இருந்த ஈட்டி ஒன்றை தூக்கிவந்து, ஜோதியின் காலிலேயே குத்தியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜோதியின் கணவர் திருமலைசாமி, தளி காவல்நிலையத்தில் புகார் அளிக்க, காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்து ஜோதிடர் பாலகிருஷ்ணனை கைதுசெய்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட வழக்கு திருப்பூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரு தரப்பு வாதங்களும் நிறைவுபெற்று, பின்னர் குற்றம் சுமத்தப்பட்ட ஜோதிடர் பாலகிருஷ்ணனுக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.பி.ஜெயந்தி, தற்போது 70 வயதை அடைந்திருக்கும் ஜோதிடர் பாலகிருஷ்ணனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 6000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறார். அதேசமயம் அபராதத்தை செலுத்தாவிட்டால், மேலும் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

70 வயதான முதியவர் கோபாலகிருஷ்ணன் தன்னுடைய தண்டனைக் காலத்தை தற்போது தொடங்கியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...