Wednesday, October 25, 2017


'நீட்' தேர்வுக்கான இலவசப் பயிற்சி... விண்ணப்பிக்க அக்-26 கடைசி தேதி!

ஞா. சக்திவேல் முருகன்

Chennai:

தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஐஐடி ஜேஇஇ, நீட் மற்றும் இதர நுழைவுத்தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறும்வகையில் தமிழக அரசு இலவசப் பயிற்சி வழங்க உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசித்தேதி 26.10.2017.




"தமிழக மாணவர்கள் நுழைவுத்தேர்வுகளில் மட்டுமல்லாது போட்டித்தேர்வுகளிலும் வெற்றிபெறும் வகையில் இந்தப் பயிற்சி வகுப்புகள் வடிவமைக்கப்பட்டு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்துவருகிறோம். இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள, முதல்நாளில் மட்டும் 5,000 மாணவர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். இந்த வாரம் இறுதிவரை பதிவு செய்யலாம் என்பதால் ஏராளமான மாணவர்கள் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்கிறார் தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் இளங்கோவன்.

"பயிற்சி வகுப்பில் சேர பெற விரும்பும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், அவர்களுடைய பள்ளியின் தலைமையாசிரியரிடம் பெயரை பதிவுசெய்ய வேண்டும். தலைமையாசிரியர் பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் http://tnschools.gov.in/ மாணவர்களின் பெயர்களை பதிவு செய்வார்கள். தற்போது ஒரு ஒன்றியத்துக்கு ஒரு பயிற்சி மையம் என்ற வகையில் தமிழ்நாடு முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கத் திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார் இளங்கோவன்.

மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்காக தமிழ்நாட்டில் இருந்து 3,000 பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆந்திராவிலுள்ள நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுவருகின்றனர். இவர்கள் நவம்பர் மாதத்தில் இருந்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்க இருக்கிறார்கள். பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாள்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என அனைவரும் பதிவு செய்துகொண்டு கலந்துகொள்ளலாம். பதிவு செய்யும்போது தங்களுக்கு அருகில் உள்ள பயிற்சி மையத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

பள்ளி கல்வித்துறையின் இணையத்தளமான http://tnschools.gov.in/ சில சமயம் கூகுள் பிரசரில் (google chrome) நுழைவதில்லை. இதனால் இன்டர்நெட் எக்ஸ்பிளோரரில் (Internet Explorer) பயன்படுத்திப் பதிவு செய்வது அவசியம். பள்ளியின் தலைமையாசிரியருக்கு மட்டுமே இந்த இணையத்தளத்தில் சென்று பதிவு செய்வதற்கான அடையாள எண், பாஸ்வேர்ட் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களும் பெற்றோர்களும் நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்யாமல், தலைமையாசிரியரை அணுகி பதிவுசெய்ய வேண்டும். பதிவு செய்தபின்பு ஒப்புகைச் சீட்டை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பயிற்சிக்கான பதிவு குறித்து தனியார் பள்ளியில் முதல்வராக இருக்கும் ஆயிஷா நடராசனிடம் பேசியபோது "முதல் நாளான இன்று மூன்று பேர் மட்டுமே பதிவு செய்திருக்கிறார்கள். இன்னமும் மாணவர்களிடையே விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டியது அவசியம்" என்கிறார்.

உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் சங்கத் தலைவர் சாமிநாதன் "தற்போது மாணவர்கள் ஆர்வத்துடன் பதிவு செய்துவருகிறார்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்களும் அரசு வழங்கும் இலவசப் பயிற்சி வகுப்பு குறித்து மாணவர்களிடையே எடுத்துச் சொல்லி விழிப்பு உணர்வை ஏற்படுத்திப் பதிவு செய்ய ஊக்கமளிக்க வேண்டும். இலவச பயிற்சியுடன், பயிற்சி நூல்களையும் அரசு வழங்க இருக்கிறது. அரசும், பதிவு செய்வதற்கான நாள்களை நீட்டிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

அரசு வழங்கும் இலவசப் பயிற்சிக்கு மாணவர்கள் பெருமளவில் விண்ணப்பிக்கும்போது மட்டும் இந்த திட்டம் வெற்றி பெறும் என்பதால், பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை அரசு வழங்கும் இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கச் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024