Friday, October 13, 2017

விடுதலை!

ஆருஷி கொலை வழக்கில் தல்வார் தம்பதி...சந்தேகத்தின் பலனை அளிப்பதாக ஐகோர்ட் தீர்ப்பு

அலகாபாத்: டில்லியை அடுத்துள்ள உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மாணவி, ஆருஷி தல்வார், 14, கொலை வழக்கில் அவரது பெற்றோரும், பல் டாக்டர் களுமான, ராஜேஷ் தல்வார், நுாபுர் தல்வாரை விடுதலை செய்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.



டில்லியை அடுத்துள்ள, உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த, பல் டாக்டர்கள், ராஜேஷ் தல்வார், நுாபுர் தல்வார் தம்பதியின் ஒரே மகளான, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த, 14 வயதான ஆருஷி தல்வார், 2008ல், தன் வீட்டில் கழுத்தறுபட்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நேபாளத்தை சேர்ந்த, ஹேம்ராஜ், 45, மீது, போலீசார் சந்தேகப் பட்டனர். இதற்கிடையே, மறுநாள் காலையில், வீட்டின் மொட்டைமாடியில், ஹேம்ராஜ் கழுத்தறுபட்ட நிலையில், சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

அவரது தலையிலும் காயங்கள் இருந்தன. இதையடுத்து, ஆருஷியின் தந்தை, ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். ஹேம்ராஜ் - ஆருஷி இடையே உறவு இருந்ததாகவும், இதனால், இருவரையும், ராஜேஷ் தல்வார் கொலை செய்ததாகவும் புகார் எழுந்தது. இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை, சி.பி.ஐ.,க்கு மாறியது. ராஜேஷ் தல்வாரின் கம்பவுண்டர் உட்பட சிலரை, சி.பி.ஐ., கைது செய்தது. போதிய சாட்சியம் ஏதுமில்லை என, சி.பி.ஐ., நீதிமன்றம், ராஜேஷ் தல்வாரை விடுதலை செய்தது.

இதற்கிடையே, இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக, சி.பி.ஐ., கூறியது. 'கொலை செய்தது ராஜேஷ் தல்வார் தான்; ஆனால், அதை நிரூபிக்க, போதிய சாட்சியங்கள் இல்லை' என, சி.பி.ஐ., கூறியது. காஜியாபாத், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், தல்வார் தம்பதிகள் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கை தொடரும்படி உத்தரவிட்டது.

கொலை செய்தது, சாட்சியங்களை கலைத்தது, சதி செய்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆருஷி, ஹேம்ராஜ் இடையே தகாத உறவு இருந்தது. இதை நேரில் பார்த்ததால், இருவரையும் தல்வார் தம்பதி கொலை செய்துள்ளனர்' என, சி.பி.ஐ., தரப்பில் வாதிடப்பட்டது.

மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்திய இந்த வழக்கில், 2013, நவ., 26ல், ராஜேஷ் தல்வார் மற்றும் நுாபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.அதை எதிர்த்து, இருவரும்தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, அலகாபாத் உயர் நீதிமன்றம், நேற்று தீர்ப்பு அளித்தது. 'யூகங்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும், இருவரும் குற்றவாளிகள் என்பதை தீர்மானிக்க முடியாது. சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்கு அளிக்க வேண்டும். அதன்படி, இருவரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகின்றனர்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, 2013ல் இருந்து, தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜேஷ் தல்வார், நுாபுர் தல்வார், இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனாலும், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த, ஆருஷியின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் அகலவில்லை.

கண்ணீர் விட்டனர்

விடுதலை தீர்ப்பு தெரிய வந்ததும், ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார், கண்ணீர் விட்டு அழுததாக, சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆருஷி கொலை வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததும்,அதன் விபரங்கள் ராஜேஷ் தல்வாருக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது, 'சிறை அதிகாரிகளை கட்டிப் பிடித்து, அவர் கண்ணீர் விட்டு அழுதார்' என, சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நுபுர் தல்வார் அமைதியாக இருந்தார். ஆனால், கண்ணீர் விட்டு அழுதார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக தீர்ப்பு நாளான நேற்று காலையில், இருவரும் நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆருஷி கொலை வழக்கு கடந்து வந்த பாதை

மே 16, 2008: டாக்டர்களான, ராஜேஷ் --- நுாபுர் தல்வார் தம்பதியின், 14வயது மகள் ஆருஷி, படுக்கை அறையில் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். வீட்டு வேலைக்காரர், ஹேம்ராஜ் குற்றவாளியாக இருக்கலாம் என சந்தேகம்

மே 17: ஹேம்ராஜும், பிணமான நிலையில், தல்வார் தம்பதியின் வீட்டு மாடியில் கண்டெடுப்பு

மே 18: ஆப்பரேஷன் செய்பவர்கள் தான், இக்கொலையை செய்துள்ளனர் என, போலீஸ் சந்தேகம்

மே 23: ராஜேஷ் தல்வார் கைது

மே 31: வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைப்புஜூன் 13: ராஜேஷ் தல்வாரின் கம்பவுண்டர் கிருஷ்ணா கைது

ஜன., 5, 2010: ராஜேஷ் தல்வார் தம்பதிக்கு, 'உண்மை கண்டறியும் சோதனை' நடத்தப் பட்டது

டிச., 29: 'ராஜேஷ் தல்வார் முக்கிய குற்றவாளி; ஆனால் போதுமான ஆதாரம் இல்லை' என, சி.பி.ஐ., மனு தாக்கல்

ஜன., 25, 2011: காஜியாபாத் கோர்ட்டில், ராஜேஷ் தல்வார் தாக்கப்பட்டார்
பிப்., 9: வழக்கை முடித்துக் கொள்வதாக கூறிய, சி.பி.ஐ.,க்கு, காஜியாபாத் நீதிமன்றம் கண்டிப்பு. மேலும், ராஜேஷ் மற்றும் நுாபுர் தல்வார் குற்றவாளி என்றும், சாட்சியங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என்றும் உத்தரவு; சி.பி.ஐ., வழக்கை தொடர்ந்தது.

ஏப்., 11: நுாபுர் தல்வாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கும்படி, சி.பி.ஐ., வாதம்

ஏப்., 18: நுாபுர் தல்வார், ஏப்., 30க்குள் கோர்ட்டில் ஆஜராகும்படி, காஜியாபாத் நீதிமன்றம் உத்தரவு

ஏப்., 30: ஆஜராகாததால் நுபுல் தல்வார் கைது

செப்., 25: சுப்ரீம் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி, நுபுல் தல்வாருக்கு ஜாமின்
ஏப்ரல், 2013: ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகிய இருவரையும் கொலை செய்தது, தல்வார் தம்பதி தான் என, சி.பி.ஐ., வாதம்

நவ., 26: தல்வார் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து, காஜியாபாத் நீதிமன்றம் தீர்ப்பு

செப்., 5, 2016: நுாபுர் தல்வார் மூன்று வார பரோலில் வெளியே வந்தார்

அக்., 12, 2017: தல்வார் தம்பதியின் மேல் முறையீட்டு வழக்கில், அவர்களை விடுதலை செய்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...