கழிவுநீர் குட்டை நாற்றம்... திணறும் சென்னை நீதிமன்றம் !
ந.பா.சேதுராமன்
கழிவுநீர்க் குட்டை நாற்றத்தால், சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்ற சுற்றுப்புறமே திணறிக் கொண்டிருக்கிறது. குட்டையின் நாற்றம் கோர்ட்டின் பல பகுதிகளிலும் பரவிக்கிடக்கிறது. கழிவுநீர்க் குட்டைகளால் டெங்கு பாதிப்பு இல்லை என்பதாலோ என்னவோ, சென்னையில் கழிவுநீர்க் குட்டைகள் அதிகமாகி வருகின்றன. டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்கள் நன்னீரில் மட்டுமே வளரும் என்பதால், அனைத்து அதிகாரிகளும், வீடு மற்றும் கடைகளில் தேங்கிய நன்னீரை தேடுகிறார்கள். நன்னீர் தேங்கிக் கிடந்தால் அபராதம் விதிக்கிறார்கள். ஆக, டெங்குவிற்கு அடுத்தபடியாக கேட்கும் இன்னொரு, வார்த்தை அபராதம். இந்த இரண்டு வார்த்தைகள்தான் நாட்டில் இப்போது அதிகமாகக் கேட்கிறது. டெங்குக் காய்ச்சலால் போன உயிர்கள் குறித்த கணக்கு, உயிரோடு இருப்பவனுக்கு மரணபயத்தைக் காட்டுகிறது. டெங்குக் காய்ச்சலில் இருந்து தப்பித்தாலும், அதிகாரிகளின் அபராத வேட்டையில் பலருக்கு குளிர்க்காய்ச்சல் வந்திருக்கிறது. நன்னீர்த் தேக்கத்தோடு, கழிவுநீர்க் குட்டைகளையும் கணக்கில் கொள்வது நல்லது. நன்னீரிலேயே டெங்கு போன்ற ஆட்கொல்லிக் காய்ச்சல் உருவாகும் போது, இந்தக் குட்டைகளில் உற்பத்தியாகும் கொசுக்களால் எவ்வளவு வீரியமான வியாதிகள் பரவுமோ, யார் கண்டது ?
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் பின்புறம் அல்லிக்குளம் வணிக வளாகம் இருக்கிறது. அண்மைக் காலமாக மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த இடம் மாறியுள்ளது. சென்னை எழும்பூரில் இயங்கிவந்த பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், தற்போது இங்குதான் இயங்கி வருகிறது. அல்லிக்குளம் வணிக வளாகப் பகுதிக்குள் நுழைவதே இப்போது ஒரு சவால்தான். காரணம், அடர்த்தியான மஞ்சள் வண்ணக் கழிவுநீர்க் குட்டைகள் கோர்ட்டைச் சுற்றிலும் இருப்பதுதான். அந்தக் குட்டையில் 'டி-கம்போஸ்' நிலையில் பெருச்சாலிகளின் உடல்கள் மிதப்பது, மஞ்சள் வண்ணக் கழிவுக்கு பொருத்தமான கலர் காம்பினேஷன். பருவமழை தொடர்ச்சியாக பெய்யுமானால் இந்தக் குட்டைகள் ஒன்றாகி குளமாக மாறலாம். அப்போது அதில் மீன் பிடிக்கலாம், அந்த மீன்களைப் பிடிக்க டெண்டரும் விடலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் காத்திருந்தால் ஆயிரக் கணக்கான மக்கள், கொள்ளை, கொள்ளையாய் நோயின் பிடியில் சிக்கிக் கொள்வதை யாராலும் தடுக்க முடியாது.
No comments:
Post a Comment